முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜவ்வாதுமலையில் 20வது கோடை விழா முன்னேற்பாடு பணிகள் ஆய்வுக் கூட்டம்: கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமையில் நடைபெற்றது

புதன்கிழமை, 31 மே 2017      திருவண்ணாமலை
Image Unavailable

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியம், ஜமுனாமரத்தூர், வனத்துறை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ள 20-வது ஜவ்வாதுமலை கோடை விழாவில் அனைத்து துறைகள் சார்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தி.மலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு. வடநேரே தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது

ஆய்வுக் கூட்டம்

ஜவ்வாதுமலையில் 20வது கோடை விழா கடந்த ஆண்டுகளைபோல இந்த ஆண்டும் சிறப்பாக நடைபெறுவதற்கு அனைத்து துறையினரும் தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கோடை விழா நடைபெறும் வளாகத்தில் அலங்காரப் பணிகள், ஜெனரேட்டர் வசதி, ஒலிஒளி அமைப்பு, பொது இடங்களில் வரவேற்பு வளைவுகள், நிகழ்ச்சிகள் விவரம் குறித்த பேனர்கள் அமைக்கபட வேண்டும். கோடை விழாவிற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதி, மருத்துவ வசதி, குடிநீர், கழிப்பறை, உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்திட வேண்டும். அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் தொடக்க நிறைவு நாள் விழாவில் அனைத்து துறைகளின் சார்பாக அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

காவல் துறை மூலமாக அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து ஒழுங்குபடுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை மூலமாக சிறப்பான மலர் மற்றும் காய்கறி கண்காட்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

மின்சார வாரியம் மூலமாக கோடை விழா நடைபெறும் நாட்களில் தடையில்லா மின்சார விநியோகம் செய்ய வேண்டும். தீயணைப்புத் துறை மூலமாக தீயணைப்பு வாகனம் மற்றும் வீரர்கள் பணியில் அதிகப்படியாக ஈடுபடுத்திட வேண்டும். கோடை விழா அரங்கத்தில் பல்வேறு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள், மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனங்கள் தொடர்நது நடத்திட வேண்டும். சுகாதாரத் துறை சார்பாக சிறப்பு மருத்துவ முகாம், 108 ஆம்புலன்ஸ் சேவை, கால்நடை பராமரிப்புத் துறை சார்பாக கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்திட வேண்டும். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணிகள் மூலமாக பாரம்பரிய உணவுத் திருவிழா மற்றும் கொழு, கொழு குழந்தை போட்டி நடத்திட வேண்டும். சமூகநலத்துறை, மகளிர் திட்டம், புதுவாழ்வு திட்டம் மூலமாக பெண்களுக்கு கோலப் போட்டிகள் நடத்திட வேண்டும். விளையாட்டு துறை மூலமாக பொதுமக்கள், சுற்றுலா பயனிகள், இளைஞர்கள், மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்திட வேண்டும். கலை பண்பாட்டுத்துறை, சுற்றுலாத்துறை, பள்ளி கல்வித் துறை மூலமாக கண்கவர் கலை நிகழச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஜவ்வாதுமலை 20வது கோடை விழா நடைபெறும் 2 நாட்களும், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி முகமை, காவல்துறை, வனத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை, சுற்றுலாத்துறை, சமூக பாதுகாப்புத் துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தாட்கோ, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை, சமூகநலத்துறை, பள்ளி கல்வித்துறை, அனைவருக்கும் கல்வி இயக்கம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட தொழில் மையம், தொழிலாளர் நலத்துறை, வேலைவாய்ப்புத்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு), மீன்வளத்துறை, பட்டுவளர்ச்சித்துறை, முன்னோடி வங்கி, தபால் துறை, கூட்டுறவுத்துறை, ஆவின், கைத்தறித்துறை, கோ-ஆப்டெக்ஸ், மகளிர் திட்டம், புதுவாழ்வுத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம், ஆகிய துறைகளின் சார்பாக அரசு திட்டங்கள், சாதனைகள் குறித்த விளக்க மாதிரிகள், குறும்படங்கள் திரையிட்டு காண்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், அனைத்து துறை சார்ந்த திட்டங்கள், சாதனைகள் குறித்த கையேடுகள், துண்டு பிரசுரங்கள் தயாரித்து வெளியிட ஏற்பாடுசெய்ய வேண்டும். கோடை விழா நடைபெறும் இரண்டு நாட்களும் அனைத்து அரங்குகளும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி முதல் பொதுமக்களின் பார்வைக்கு திறந்திருக்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி, மாவட்ட ஊரவக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லோகநாயகி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) எம்.எஸ்.தண்டாயுதபாணி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ரேணுகாம்பாள், திருவண்ணாமலை வருவாய் கோட்ட அலுவலர் உமாமகேஸ்வரி இராமச்சந்திரன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.முத்தமிழ்ச்செல்வன், ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பிரகாஷ், தனி அலுவலர் சீனுவாசன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து