எந்த காலத்திலும் திமுக ஆட்சியை பிடிக்க முடியாது: அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பரபரப்பு பேச்சு

வியாழக்கிழமை, 1 மார்ச் 2018      அரசியல்
K T Rajentirabalaji Speech 2018 03 01

திருவில்லிபுத்தூர், தி.மு.க ஊழல் கட்சி என்று மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது என்றும் எந்த காலத்திலும் தி.மு.க ஆட்சியை பிடிக்க முடியாது என்றும் திருவில்லிபுத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.  

திருவில்லிபுத்தூரில் நகர கழகம், தொகுதி கழகம் சார்பாக  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள்விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபாமுத்தையா தலைமை வகித்தார். கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது,

சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஜெயலலிதாவின் பிறந்தவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அனைத்து பகுதிகளிலும் அ.தி.மு.கவினர் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். தற்போதுள்ள நிலையில் கட்சிக்கு விசுவாசமிக்க தொண்டர்கள் அ.தி.மு.கவில் உள்ளனர். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கி கொடுத்த இந்த கட்சிக்கு அழிவு என்பதே கிடையாது. ஆலமரம்போல் வளர்ந்து கொண்டுதான் இருக்கும். ஒன்றறை கோடி தொண்டர்கள் கொண்ட இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. அழிவது போன்று தோற்றத்தை சிலர் ஏற்படுத்துவார்கள்.

ஆனால் கட்சி அழியாது. 1996ல் இந்த அ.தி.மு.கவிற்கு எதிர்காலமே கிடையாது என்றுதான் சிலர் நினைத்தனர். ஆனால் அரசியல் வரலாற்றில் சரித்திர சாதனைகளை ஜெயலலிதா எட்டிப் பிடித்தார். இந்தியால் 3வது பெரிய கட்சியாக அ.தி.மு.க உருவெடுத்தது. ஆண்ட கட்சியே மீண்டு்ம் ஆளும் கட்சியாக வந்து அ.தி.மு.க மாபெரும் சக்தியாக வளர்ந்தது. எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்கள் மக்கள் பணியாற்றி தமிழக முதல்வராக வந்தார்கள். ஆனால் இன்று சிலர் மக்கள் பணி எதுவும் செய்யாமல் உடனே முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படுகின்றனர். நடிக்கும் போதே எம்.ஜி.ஆர் ஒழுக்கமாக வாழ்ந்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர். நல்ல சிந்தனையுள்ள படங்களை தொடர்ந்து வழங்கினார். அண்ணா கட்சிக்கே அடையாளம் கொடுத்த எம்.ஜி.ஆர் வழியை பின்பற்றி ஜெயலலிதாவும் வாழ்ந்தார். மாபெரும் இந்த இயக்கத்தில் சாதாரண தொண்டனாக இருப்பதே ஒவ்வொறு தொண்டனும் பெருமையாக நினைக்கின்றான். சாதாரண தொண்டன் கூட சரித்திரத்தில் இடம் பிடிக்க முடியும் என்றால் அது அ.தி.மு.கவில் மட்டுமே முடியும். கட்சியில் 30ஆண்டுகள், 40ஆண்டுகள் உழைத்தவர்கள் எப்படி வேறு ஒரு சின்னத்திற்கு வேலை செய்ய முடியும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் சரித்திர சாதனைகளால் கிராம மக்கள் மனதில் இரட்டை இலை சின்னம் ஆழமாக பதிந்துவிட்டது. ஜெயலலிதாவின் வாக்குப்படி இந்த இயக்கம் 100ஆண்டுகள் ஆட்சியில் நீடிக்கும்.

தி.மு.க ஊழல் கட்சி என்று மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. எந்த காலத்திலும் தி.மு.க ஆட்சியை பிடிக்க முடியாது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் ஆன்மா அரசை வழி நடத்தி வருகின்றது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் வழியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் பன்னீர்செல்வம் நல்லாட்சி நடத்தி வருகின்றனர். ஜெயலலிதா செயல்படுத்திய திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அ.தி.மு.க அரசிற்கு தமிழக மக்கள் தொடர்ந்து ஆதரவு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர், திரைப்பட இயக்குநர்  ஜெயபிரகாஷ், முன்னாள் கழக அமைப்பு செயலாளர் விநாயகமூர்த்தி, கழக மகளிர் அணி இணைச்செயலாளர் சக்திகோதண்டம், மாவட்ட கழக பொருளாளர் ராஜவர்மன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் சிந்துமுருகன், பால்வளத்துறை தலைவர் வழக்கறிஞர் கண்ணன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைசெயலாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் மயில்சாமி, நகர கழக பொருளாளர் முருகன், திருவில்லிபுத்தூர் முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் சரோஜா, வத்ராப் ஒன்றிய கழக செயலாளர் சுப்புராஜ், நகர செயலாளர் அய்யனார், மாவட்ட கழக துணைச்செயலாளர் வசந்திமான்ராஜ், மாவட்ட மகளிரணி இணைச்செயலாளர் மீராதணலட்சுமி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் முத்தையா, அரசு வழக்கறிஞர் ராஜா, கழக வழக்கறிஞர் மங்களசாமி, வீட்டுவசதி சங்க தலைவர் ராமையாபாண்டியன், மோதிரம் பொன்னுச்சாமி, ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் கதிரவன், ராஜபாளையம் நகர செயலாளர் பாஸ்கரன், ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், குருசாமி, அரசு ஒப்பந்ததாரர் குருசாமி, ராஜபாளையம் நகர அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் முருகேசன், சிவகாசி ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர் ராமராஜ், ஒன்றிய கழக துணைச்செயலாளர் எதிர்கோட்டை மணிகண்டன், விஜயகரிசல்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்தசாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து