முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எச்.ராஜா எனும் குரங்கு குட்டியை வைத்து தமிழகத்தில் ஆழம் பார்க்கும் பா.ஜ.க.: வைகோ கண்டனம்

வியாழக்கிழமை, 8 மார்ச் 2018      அரசியல்
Image Unavailable

சென்னை,  எச்.ராஜா எனும் குரங்கு குட்டியை வைத்து தமிழக மக்களிடத்தில் ஆழம் பார்க்க நினைக்கும் பா.ஜ.க.வின் செயலுக்கு தமிழ் மக்கள் விரைவில் பதிலடி கொடுப்பார்கள் என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

முகநூலில் பெரியார் சிலை குறித்து பா.ஜ.க தேசியச் செயலாளர் எச்.ராஜா தெரிவித்த கருத்துக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நேற்று ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் வைகோ பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது, உலகம் புகழுகின்ற சமூக சீர்திருத்தவாதி பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்று சொன்ன எச்.ராஜா, டெல்லியில் இருந்து திரும்பி வந்து இன்று காலையில் பெரியாரை மீண்டும் தாக்கி பேச என்ன காரணம்.  பிரதமர் மோடி கொடுக்கின்ற ஆதரவு. அது எச்.ராஜாவின் குரல். பின்னணி குரல் மோடியின் குரல். அமித்ஷாவின் குரல். ராஜாவின் பேச்சுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று அமித்ஷா சொல்கிறார். எச்.ராஜாவின் பின்புலத்தில் மோடியும், அமித்ஷாவும் இருக்கிறார்கள்.

பெரியாரை பற்றி ஐ.நா.வின் கல்வி அறிவியல் பண்பாட்டு கழகம், யுனெஸ்கோ 1970 ஜூன் 27ம் தேதியன்று கூறுகையில், "பெரியார் புத்துலக தொலை நோக்காளர், மறுமலர்ச்சி தூதர், தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ், சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை, மூட நம்பிக்கை, பொருளற்ற பழக்க வழக்கங்கள், இழிவான நடவடிக்கைகள் ஆகியவற்றின் கடும் எதிரி என்று கூறுகிறது. உலக நாடுகளின் மன்றம் சொல்கிறது. அவருக்கு அஞ்சல் தலையை மத்திய அரசு வெளியிட்டபோது, "போராளி, புரட்சியாளர், பகுத்தறிவாளர், எளிமையும், மனிதநேயமும் கொண்டவர் என்று கூறியுள்ளது.

இங்கே பெரியார் சிலையை அகற்றுவோம் என்று சொன்ன அன்று இரவில், இரண்டு பேர் பெரியார் சிலையின் முகத்தை சிதைத்திருக்கிறார்கள். அதை டீக்கடைக்காரர் பார்த்து அவர்களை பிடித்து கொடுக்க வேண்டியதை மக்கள் கொடுத்திருக்கிறார்கள். இவ்வளவுக்கு பிறகும் பெரியார் குறித்து கருத்து தெரிவிக்க திமிரும் தைரியமும் எச்.ராஜாவுக்கு யார் கொடுத்தது. தமிழ் எழுத்து சீர்திருத்தம் கொண்டு வந்தவர் தந்தை பெரியார். தேவை இல்லாமல் பெரியாரை சீண்டுவது தமிழனை சீண்டுவதற்கு நிகரானது.

தமிழகத்தில் எச்.ராஜாவை குரங்கு குட்டியை விட்டு தண்ணீரில் ஆழம் பார்ப்பது போல அவரை பேச விட்டு தமிழர்களின் உணர்வுகளை சோதித்து பார்க்கிறார்கள். தமிழர்கள் சுயமரியாதை மிக்கவர்கள். வேங்கைகள் உலவும் காடுகளில் நரி ஊளையிடுவது போல எச்.ராஜா பேசி வருகிறார். பெரியார் பற்றி சொன்ன கருத்துக்கு எச்.ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழகம் பெரியாரின் கோட்டை. அந்த கோட்டையின் காவலர்களாக நாங்கள் இருக்கிறோம். கோட்டையை சரித்து பார்க்கலாம் என்று பா.ஜனதா அரசு நினைக்கிறது. அந்த கோட்டையை நாங்கள் உயிரைக் கொடுத்தாவது காப்போம். எச்.ராஜா இதுபோல் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து