முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவகங்கை மாவட்டத்தில் 10, 12 வகுப்பில் சிறப்பாக பணியாற்றிய தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா

வெள்ளிக்கிழமை, 25 மே 2018      சிவகங்கை
Image Unavailable

சிவகங்கை, -சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்   பள்ளிக்கல்வித்துறையின் மூலம் மாநில அளவில் 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றதற்காக தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பிஆர்.செந்தில்நாதன்; முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் க.லதா தலைமை வகித்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி பேசுகையில்,
        சிவகங்கை மாவட்டம் சுதந்திர போராட்டத்திற்கு போராடி வெற்றி கண்ட வீரம் நிறைந்த மண்ணாகும். இந்த மண்ணிற்கு மீண்டும் ஒரு மணிமகுடம் சூடும் வகையில் 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் 98.50மூ  தேர்ச்சி பெற்று சிவகங்கை மாவட்டம் முதன்மை மாவட்டமாக திகழ்தமைக்கு மாவட்ட முழுவதும் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளோம். மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கொண்ட குழுவே இதற்கு முழுக் காரணமாகும். நீங்கள் கூடி உழைத்த முயற்சியில் கிடைத்த வெற்றி எங்களை மாவட்டத்தில் தலைநிமிரச் செய்துள்ளது. இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பாக உங்கள் அனைவருக்கும் கோடானு கோடி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
          ஆசிரியர் பணி என்பது மகத்தான பணியாகும். ஒருவருக்கு திருப்புமுனையை உருவாக்கும் வல்லமை படைத்த சக்தி ஆசிரியர்களுக்கு மட்டுமே உண்டு. ஒவ்வொரு மாணவனும் வாழ்க்கையில் முன்னேற்றம் பெறும்போது அந்த மாணவன் திரும்பி பார்க்கையில் அவன் முகத்தில் தெரிவது அவனுக்கு வழிகாட்டியே அந்த ஆசிரியர் முகம்தான். அதன் பின்னர்தான் தனது பெற்றோர்கள் பற்றி நினைவு வரும். அந்த அளவிற்கு ஆசிரியர் பணி மிக உன்னதமாகும். அதற்கேற்ப ஆசிரியர்களும் தங்களிடம் பயிலும் மாணவர்களை சிறந்த வல்லுநர்களாக உருவாக்கும் திறன் உள்ளது. அதன்படி சிறந்த முறையில் மாணவர்களை உருவாக்கிட வேண்டும். மாணவர்களும் தங்கள் பெற்றோர்களுக்கு மேலாக ஆசிரியர்களை நினைத்து தங்களை நல்வழிப்படுத்த முன்வரும் ஆசிரியர்களை நினைவு கூர்ந்து நன்றாகப் படித்து சிறந்த சாதனையாளராக வேண்டும். தற்பொழுது 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்;வில் மாநில அளவில் முதலிடம் பெற்று சிறந்த சாதனை படைத்துள்ளீர்கள். சாதனை பெறுவது இயல்பு. ஆனால் அதை தக்கவைப்பது என்பது இங்குள்ள ஒவ்வொரும் தலையாகிய கடமையாகும். அதை உறுதிப்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும்; இந்த வெற்றியை
தக்க வைக்க வேண்டும். அதேபோல் மேல்நிலை தேர்வு முடிவுகளில் சிவகங்கை மாவட்டம் 6-ம் இடத்தை பெற்றுள்ளது. அதிலும் முதலிடம் பெற்று சாதனை படைத்திட வேண்டும். உங்களுடைய வெற்றிக்கு மாவட்ட நிர்வாகம் எப்பொழுதுமே உறுதுணையாக இருக்கும். நீங்கள் சிறப்புடன் செயல்பட வேண்டும். வெற்றிக்காக பாடுபட்ட அனைவருக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் க.லதா தெரிவித்தார்.
        பின்னர் 10ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 182 பள்ளிகளுக்கும், 12ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 54 பள்ளிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கியதுடன் 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பில் கல்வியில் சிறந்து விளங்கியதுடன் தனித்திறன் போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர்களை பாராட்டும் விதமாக 12ம் வகுப்பை சேர்ந்த 15 மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ.15,000 -  காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ், 10ம் வகுப்பை சேர்ந்த 15  மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ.10,000 -  காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கியதுடன் மேலும் நடப்பாண்டில் விசாலயன்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியை தமிழக அரசால் அரசு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி ஆணை வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்தார்.
        இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் து.இளங்கோ, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, மாவட்ட கல்வி அலுவலர்கள் மாரிமுத்து, சகிதா மற்றும் அரசு அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து