சென்னை, மாநில சுயாட்சியை அடகு வைத்து டெல்லிக்கு அடிமையாக இருந்தது தி.மு.க. தான் என தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் நேற்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
தமிழகத்தில் மக்கள்தொகை அதிமாகி கொண்டே வருகிறது. ஆனால், அதற்காக தமிழ்நாடு எல்லை விரிவடைவதில்லை. மக்கள் தொகை பெருக்கம் ஒருபுறம் இருக்கிறது. மற்றொரு புறம் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அரசுக்கு வேறு வழியில்லை. அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது அரசின் பிரதான கடமை. பல மாநில அரசுகள் மத்திய அரசிடமிருந்து திட்டங்களை கேட்டு வாங்குகின்றனர்.
தமிழக அரசு மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை வைத்து 10,000 கோடி முதலீடு கிடைத்திருக்கிறது. வருங்காலத்தில் அந்த சாலையில் நீங்களும் உங்கள் தலைமுறையும்தான் செல்லும். ஆனால் வாழ்வாதாரம் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும். அதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. நிலம் வழங்குபவர்களுக்கு மூன்று மடங்கு நிவாரணம் அளிக்கப்படுகிறது.
சேலம் மாவட்ட ஆட்சியர் கூறியது போல் குறைந்தபட்சம் ஒரு கோடியிலிருந்து 9 கோடி வரை நிவாரணம் கிடைக்கும். தி.மு.க. ஆட்சியில் முன்னேற்றம் இல்லாத நிலை. 17 ஆண்டுகள் மத்தியில் இருந்து கொண்டு என்ன நல்ல திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்தனர். தி.மு.க. ஆட்சியில் நிலம் வாங்க முடியாது. தமிழகத்தை மண்டலங்களாக பிரித்துக் கொண்டு குடும்ப நபர்கள் ஆதிக்கம் செலுத்தி அவர்களைக் கேட்டுக் கொண்டுதான் நிலமே வாங்க முடியும். அதுவும் அடிமாட்டு விலைக்குத் தான் வங்க முடியும். யார் யாரை பார்த்து சொல்வது. சொல்வதற்கு ஒரு முகாந்திரம் வேண்டும். அந்த முகாந்திரம் தி.மு.க.வுக்கு இல்லை.
விசாரணை நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது. முடிந்தவுடன் நிச்சயம் வெளி உலகுக்கு தெரியவரும். திடீரென்று நிவாரணம் கிடைக்கவில்லை என சொல்கிறீர்கள். யாருக்கு இன்னும் கிடைக்கவில்லை என குறிப்பிட்டு சொன்னால் அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்.
தமிழகத்தில் கவர்னர் ஆட்சி, முதல்வர் ஆட்சி என இரட்டை ஆட்சி நடக்கவில்லை. எம்.ஜி.ஆர் ஆட்சி, ஜெயலலிதா ஆட்சி என இரட்டை ஆட்சி முறை நடக்கிறது. தமிழகத்தை கொங்கு மண்டலம், வடமாவட்டம், தென் மாவட்டம் என 5 மண்டலங்களாக பிரிந்து 5 ஆட்சி தி.மு.க.வில் நடைபெற்றது. மாநில சுயாட்சி கொள்கையை ஒருபோதும் விடமாட்டோம்.
வாய்சவடால் விடுவதில் தி.மு.க.வினர் திறமையானவர்கள். மாநில சுயாட்சியை அடகு வைத்து டெல்லிக்கு அடிமையாக இருந்தது தி.மு.க. தான். என்ன உரிமையை தி.மு.க. தமிழகத்திற்காக மீட்டு கொடுத்தனர் ? 17 ஆண்டு காலமாக மத்தியில் கூட்டணி ஆட்சியில் தி.மு.க. இடம்பிடித்திருந்தது. கச்சத்தீவு நம்மை விட்டு போய் விட்டதை மீட்டு கொடுத்தார்களா? காவிரி விவகாரம், முல்லை பெரியாறு விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுத்தனர்.