முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

60 லட்சம் ஏழை தொழிலாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் நிதி வழங்க தடையில்லை: சென்னை ஐகோர்ட் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 15 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை. வறுமைக்கோட்டுக்கு கீழேயுள்ள 60 லட்சம் ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.2,000 நிதியுதவி அளிக்கும் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை ஐகோர்ட்  தள்ளுபடி செய்தது.
தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 12-ம் தேதி 110-வது விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.

முதல்வர் அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும், குறிப்பாக விவசாயத் தொழிலாளர்கள், நகர்ப்புற ஏழைகள், கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள், பட்டாசுத் தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், விசைத்தறி மற்றும் கைத்தறி தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் என அனைத்து தொழிலாளர்கள் குடும்பங்களுக்கும் தலா 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியாக வழங்கப்படும் என  அறிவித்தார். 

தலைவர்கள் வரவேற்பு

இதன் மூலம் நகரம் மற்றும் கிராமங்களில் உள்ள சுமார் 60 லட்சம் தொழிலாளர் குடும்பங்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவித்தார். மேலும், இந்த சிறப்பு நிதி இம்மாத இறுதிக்குள் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும் அறிவித்திருந்தார். முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பா.ம.க. தலைவர் ராம்தாஸ் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு தெரிவித்திருந்தனர்.

ஐகோர்ட்டில் வழக்கு...

இதற்கிடையே ஏழை தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிதி வழங்கும் அரசின் முடிவுக்கு எதிராகவும், பணம் அளிக்க தடை விதிக்க கோரியும் சென்னை ஐகோர்ட்டில் சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தை சேர்ந்த செந்தில் ஆறுமுகம் என்பவர் முறையீடு செய்தார். நேற்று இம்மனு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சில விளக்கங்களை அளித்தார்.

60 லட்சம் தொழிலாளர்கள்...

கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையிலும், மாநிலத்தில் உள்ள 17 தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினர்களின் அடிப்படையில் தமிழ்நாட்டில் சுமார் 60 லட்சம் குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பதாக கண்டறிடப்பட்டுள்ளன. இவற்றில் 32.13 லட்சம் குடும்பங்கள் கிராமப்புறங்களிலும் 23.54 குடும்பங்கள்  நகர்புறங்களிலும் வசித்து வருகின்றன. அரசின் இந்த சிறப்பு நிதியுதவியை பெறுவதற்கு தகுதியான குடும்பங்களை கணக்கெடுக்கும் பணியில் 55 ஆயிரம் பேர்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மனு தள்ளுபடி...

ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் மின்னணு பரிமாற்ற முறையில் இந்த சிறப்பு உதவித்தொகையை அரசு நேரடியாக செலுத்தவுள்ளது என அரசு வழக்கறிஞர் குறிப்பிட்டார். இதைதொடர்ந்து, அரசின் இந்த உத்தரவுக்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்து மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து