முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இ.பி.எஸ். தலைமையிலான அரசின் 2 ஆண்டுகள் நிறைவு விழா: 'இரண்டாண்டு சாதனை மலர் ' புத்தகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்

வெள்ளிக்கிழமை, 15 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பொறுப்பேற்று நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தது. இதையொட்டி முதல்வருக்கும், துணை முதல்வருக்கும், அமைச்சர்கள் ஆளுயர மாலையணிவித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இதையொட்டி, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தயாரிக்கப்பட்ட அம்மா அரசின் "சாதனைகள் ஈராண்டு தொடரும் பல்லாண்டு" என்ற இரண்டாண்டு சாதனை மலரை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

பொங்கல் பரிசு...

அம்மா வழியில் செயல்படும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு, கடந்த இரண்டு ஆண்டுகளில், விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றிட குடிமராமத்து திட்டம், அத்திக்கடவு அவிநாசி திட்டம், உழைக்கும் மகளிருக்கு மானியத்துடன் இருசக்கர வாகனம், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு சிறப்பு நிதியுதவி திட்டத்தின் கீழ் தலா ரூ.2000, தமிழ்நாட்டில் உள்ள குடும்பங்களுக்கு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கத் தொகை, உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.3 லட்சத்து 431 கோடிக்கு மேல் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஈர்த்தது, புயல் பாதிக்கப்பட்ட இடங்களில் உடனடி நிவாரணப் பணிகள், 1.1.2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை, மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பல்வேறு மாணவர் நலத்திட்டங்கள் என எண்ணற்ற மக்கள் நலத்திட்டப்பணிகளை பல்வேறு துறைகளின் மூலம் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

பல்வேறு விருதுகள்...

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழ்நாடு அரசு மேற்கொண்ட எண்ணற்ற மக்கள் நலத்திட்டப்பணிகளை அங்கீகரிக்கும் வகையில், ஒட்டுமொத்த செயல்பாடு, சட்டம் ஒழுங்கு மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பிரிவுகளில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகத்திற்கு இந்தியா டுடே பத்திரிக்கையின் நான்கு விருதுகள், நெல், சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகள் உள்ளிட்ட உணவு தானிய உற்பத்தியில் தமிழ்நாடு அரசு சாதனை புரிந்தமைக்காக மத்திய அரசின் கிருஷி கர்மான் விருதுகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதில் முதன்மை மாநிலத்திற்கான மத்திய அரசின் விருது, பெங்களூரைச் சேர்ந்த பொது விவகார மையம் என்ற அமைப்பு சார்பில் சமூக பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு ஆளுமையில் இரண்டாமிடம், பொது விநியோகத்திட்டத்தினை முழுமையாக கணினிமயமாக்கியதற்காக விருது, கோவை, ஈரோடு, மதுரை, திருச்சி மாநகராட்சிகளுக்கு சிறந்த நிர்வாகத்திற்கான தேசிய மற்றும் பன்னாட்டு விருதுகள், "பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்கு இந்தியாவின் முதன்மை மாநிலத்திற்கான விருது என பல்வேறு விருதுகளையும் அங்கீகாரங்களையும் தமிழ்நாடு அரசு பெற்று தொடர்ந்து முன்னேறி வருகிறது.

சாதனைகள் ஈராண்டு...

மக்களால் நான், மக்களுக்காகவே நான் - என்று தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவே வாழ்ந்து, மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பெற்றுள்ள நல்லாட்சி நடத்தி வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சீரிய தலைமையிலான அரசு பொறுப்பேற்று நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தயாரிக்கப்பட்ட அம்மா அரசின் - "சாதனைகள் ஈராண்டு தொடரும் பல்லாண்டு" என்ற இரண்டாண்டு சாதனை மலர் (தமிழ் மற்றும் ஆங்கிலம்). எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆற்றிய உரைகளின் தொகுப்புகள், முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் ஆற்றிய உரைகளின் தொகுப்பு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆற்றிய உரைகளின் தொகுப்புகள், முதலமைச்சரின் பொன்மொழிகள் ஆகியவற்றினை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு அரசின் இரண்டாண்டு சாதனைகளின் குறும்பட குறுந்தகட்டினை வெளியிட, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பெற்றுக் கொண்டார். காலப்பேழை புத்தகத்தினை முதல்வர்  எடப்பாடி பழனிசாமி வெளியிட தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பெற்றுக்கொண்டார்.

சாதனை குறும்படம்

பின்னர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சர் பெருமக்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் இரண்டாண்டு சாதனைகளின் குறும்படத்தினை பார்வையிட்டார்கள். இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் இரா. வெங்கடேசன், வரவேற்புரை ஆற்றினார். செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் சங்கர் நன்றியுரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்புத்துறை கூடுதல் இயக்குநர்கள் எஸ்.பி.எழிலழகன் (செய்தி), இரவீந்திரன் (மக்கள் தொடர்பு), இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து