பா.ஜ.க.வில் இணைந்தார் கிரிக்கெட் வீரர் காம்பீர்

வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2019      அரசியல்
gautam-gambhir-join-bjp 2019 03 22

புது டெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர், மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் நேற்று பா.ஜ.க.வில் இணைந்தார்.

இந்திய கிரிக்கெட் அணி வீரர் கவுதம் காம்பீர், தொடக்க வீரராக களம் இறங்கிய அவர் 2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற முக்கிய பங்காற்றினார். ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு கோப்பையையும் வென்று கொடுத்தார். கடந்த டிசம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக காம்பீர் அறிவித்தார். தற்போது அவர் வர்ணனையாளர் பணியை செய்து வருகிறார். சமீபத்தில் கவுதம் காம்பீருக்கு பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு வழங்கி கவுரவித்தது.

இந்த நிலையில் கவுதம் காம்பீர் நேற்று பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்தார். டெல்லியில் மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி மற்றும் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார். அவரை பா.ஜ.க. தலைவர்கள் வரவேற்று வாழ்த்தினர். கட்சியில் இணைந்த காம்பீருக்கு உறுப்பினர் அட்டையை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி வழங்கினார்.  பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டு பா.ஜ.க.வில் சேர்ந்ததாகவும், பா.ஜ.க.வில் இணைந்து பணியாற்றுவதற்கு வாய்ப்பு கிடைத்ததால் பெருமைப்படுவதாகவும் காம்பீர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து