காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரப் பாடல் வெளியீடு

ஞாயிற்றுக்கிழமை, 7 ஏப்ரல் 2019      அரசியல்
Congress-election song 2019 04 07

புது டெல்லி, ஏழைகளுக்கு ஆண்டுதோறும் 72 ஆயிரம் ரூபாய் அளிக்கும் நியாய் திட்டத்தை மையப்படுத்தி காங்கிரஸ் கட்சியின் இனி நியாயம் கிடைக்கும் என்ற இந்தி தேர்தல் பிரசாரப் பாடல் வெளியானது.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

பிரதமர் மோடி, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல், பிரியங்கா காந்தி மற்றும் மாநில முதல்வர்கள் மற்றும் மாநில கட்சி தலைவர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் உச்சகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஏழைகளுக்கு ஆண்டுதோறும் 72 ஆயிரம் ரூபாய் அளிக்கும் நியாய் திட்டத்தை மையப்படுத்தி இனி நியாயம் கிடைக்கும் என்ற இந்தி தேர்தல் பிரசாரப் பாடலை காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைமை நேற்று வெளியிட்டுள்ளது. பிரபல இந்தி திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான ஜாவெத் அக்தர் இயற்றியுள்ள இந்தப் பாடலுக்கு நிக்கில் அத்வானி இசையமைத்துள்ளார். இந்தப் பாடலின் சில வரிகளில் தற்போது மத்தியில் ஆட்சி நடத்தும் பா.ஜ.க. சமூக ஒற்றுமையை சீர்குலைத்து, மதரீதியிலான வெறுப்புணர்வை தூண்டி விடுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதை சுட்டிக்காட்டி தேர்தல் கமிஷனில் பா.ஜ.க. ஆட்சேபம் தெரிவித்திருந்தது. இதையடுத்து தேர்தல் கமிஷனின் தலையீட்டின்படி ஆட்சேபத்துக்குரிய அந்த வரிகள் நீக்கப்பட்டு இந்த பிரசாரப் பாடலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்ட வாகனங்கள் மூலம் இந்த பிரசாரப் பாடலை நாடு முழுவதும் பிரபலப்படுத்த காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து