காங்கிரஸை விட்டு செல்ல நினைப்பவர்கள் செல்லலாம்: பெங்களூரில் வீரப்ப மொய்லி பேட்டி

புதன்கிழமை, 28 ஆகஸ்ட் 2019      அரசியல்
Veerappa Moily 2019 06 23

கட்சியை விட்டு செல்ல நினைப்பவர்கள் தாராளமாக செல்லலாம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி தெரிவித்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் பிரதமர் மோடி குறித்து பேசி இருந்தார். அதில் பிரதமர் மோடியை மட்டும் தொடர்ந்து எதிர்த்து வருவது சரியல்ல. பிரதமர் மோடி செய்யும் நல்ல காரியங்கள், திட்டங்களையும் நாம் ஆதரிக்க வேண்டும். நல்ல திட்டங்கள் செய்ததால்தான் அவரை மக்கள் மீண்டும் தேர்வு செய்துள்ளார்கள். ஆதலால், திட்டங்களை ஆதரித்த பின் அவர்மீது விமர்சனங்களை வைக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்தை மூத்த தலைவர் சசி தரூரும் ஆதரித்திருந்தார். இந்த இரு தலைவர்களின் கருத்து காங்கிரஸ் கட்சிக்குள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜெய்ராம் ரமேஷ், சசிதரூர் இருவரும் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியது மிகவும் மோசமான ரசனை. இந்த கருத்து மூலம் இருவரும் சேர்ந்து பா.ஜ.க.வுடன் தங்களை சமரசம் செய்து கொள்ள முயல்கிறார்கள் என்று தோன்றுகிறது. காங்கிரஸ் கட்சியின் எந்த தலைவரும் இதுபோன்ற கருத்தைக் கூற விரும்பினால் அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கும், தலைமைக்கும் சேவை செய்ய மாட்டார்கள் என்பதே எனது கருத்து. இதுபோன்றவர்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி ஒழுங்கு நடவடிக்கையை எடுக்க வேண்டிய நேரத்தில் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியை விட்டு செல்ல நினைப்பவர்கள் நேரடியாக கூறி விட்டுச் செல்லாம். அதற்காக கட்சிக்குள் இருந்து கொண்டே, காங்கிரஸ் கட்சியையும், சித்தாந்தத்தையும் நாசப்படுத்த வேண்டாம். மாநில அளவிலும், உயர்மட்ட அளவிலும் காங்கிரஸ் கட்சியை சீரமைத்து, கட்சிக்கு புத்துயிரளிக்க வேண்டிய பொறுப்பு கட்சியின் தலைமைக்கு இருக்கிறது. இதற்கு மாற்று ஏதும் இல்லை. அடுத்து 3 மாநிலங்களில் தேர்தல் வருவதால், இந்த நடவடிக்கைகள் எடுப்பதில் தாமதம் கூடாது. இவ்வாறு வீரப்பமொய்லி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து