முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெகன்மோகன் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த முயன்ற சந்திரபாபு நாயுடு, அவரது மகனுக்கு வீட்டுக்காவல்

புதன்கிழமை, 11 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

குண்டூர் : ஆந்திர மாநிலத்தில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த முயன்ற தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரின் மகன் நரா லோகேஷ் ஆகியோரை திடீரென வீட்டுக் காவலில் போலீஸார் வைத்துள்ளனர்.

ஆந்திரப் பிரதேசத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி உள்ளார். ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்து 100 நாட்களை கொண்டாட இருக்கும் நிலையில், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 8 பேர் பல்வேறு இடங்களில் கொல்லப்பட்டுள்ளதாக அக்கட்சி குற்றம் சாட்டுகிறது. இதனால், ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி (நேற்று)உண்ணாவிரதப் போராட்டமும், சலோ அட்மகூர் என்ற தலைப்பில் பேரணியும் நடத்த முடிவு செய்திருந்தது. மேலும் குண்டூரில் இருந்து அட்மகூருவை நோக்கி பேரணியாகச் செல்லவும், அங்கு உண்ணாவிரதம் நடத்தவும் தெலுங்கு தேசம் கட்சியினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால், பேரணிக்கும் உண்ணாவிரதத்துக்கும் போலீஸார் அனுமதியளிக்கவில்லை. பேரணி நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனக் கூறி அனுமதி வழங்க மறுத்து விட்டனர்.

இதையடுத்து, நேற்று திட்டமிட்டபடி பேரணி நடத்த தெலுங்கு தேச கட்சியினர் பல்வேறு மாவட்டங்களில் திரண்டனர். ஆனால் குண்டூர், கிருஷ்ணா, பிரகாசம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருக்கும் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களை போலீஸார் வீட்டுக் காவலில் வைத்தனர். அதுமட்டுமல்லாமல், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு, அவரின் மகன் நரா லோகேஷ் ஆகியோரை வீட்டைவிட்டு வெளியே செல்லாமல் போலீஸார் வீட்டுக் காவலில் வைத்தனர். ஏராளமான தொண்டர்கள் சந்திரபாபு நாயுடு இல்லத்தின் முன் திரண்டும், அவர்களைச் சந்திக்க முயன்றும் அதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால், போலீசாருக்கும், தெலுங்கு தேச கட்சித் தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

போலீசாரின் இந்த நடவடிக்கை குறித்து முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு நிருபர்களுக்கு தொலைபேசி வழியாக அளித்த பேட்டியில், குண்டூரில் இருந்து அட்மகூரு நோக்கி நாங்கள் நடத்த இருந்த பேரணியை போலீசார் தடுத்து, என்னை வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் குண்டூர், பிரகாசம்,கிருஷ்ணா நகரிலும் ஏராளமான தெலுங்குதேச தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். இது ஜனநாயகத்துக்கு விரோதமான செயல், ஜனநாயகத்தின் கறுப்பு நாள். தெலுங்கு தேசம் கட்சியினர் தாக்கப்படுவதை எதிர்த்து கேள்வி கேட்டால் அடக்குமுறையை அரசு பயன்படுத்துகிறது. அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினரின் அட்டூழியத்தை போலீசார் கண்டுகொள்வதில்லை. ஆனால் தெலுங்கு தேசம் கட்சியினரை அடக்குகிறார்கள் எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து