முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதலீடுகளை குவித்த முதல்வர் எடப்பாடியை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் குறை கூறலாமா? மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் கடும் கண்டனம்

வெள்ளிக்கிழமை, 13 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

உலகெங்கிலும்உள்ள முதலீட்டாளர்களையும், இந்திய முதலீட்டாளர்களையும் ஈர்க்கும் திறனில் முன்னணி மாநிலமாக தொடர்ந்து விளங்க காரணமான முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அரசியல் காழ்ப்புணர்ச்சியால் குறை கூறலாமா என்று மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அமைச்சர் எம்.சி.சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

ஜனவரி 2019-ல் வெற்றிகரமாக நிறைவுற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டினைத் தொடர்ந்து, ஒன்பதே மாதங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் திருக்கரங்களால் 22 நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 4 நிறுவனங்களின் முழுமையான வணிக உற்பத்தியும் துவங்கப்பட்டது.  ஹுண்டாய் நிறுவனத்தின் புதிய மின்சார வாகனம் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டது. தங்கள் ஆட்சிக் காலத்தில் தமிழ் நாட்டையே இருளில் மூழ்கடித்து, தொழில் நிறுவனங்களை சொல்லொணாத் துயரில் ஆழ்த்தியவர்கள் நீங்கள்.  தற்போது தமிழ்நாட்டின் தொழில் துறையின் வெற்றிப் பயணத்தை பொறுக்க முடியாமல் வெற்றுக் கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, 2006-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2011-ம் ஆண்டு மே மாதம் வரையிலான தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வந்த மொத்த அந்நிய நேரடி முதலீடு 25,977 கோடி ரூபாய் மட்டுமே. சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5,200 கோடி ரூபாய். 2011-ம் ஆண்டு ஜூன் முதல் 2019 ஜூன் வரையிலான அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வந்துள்ள மொத்த அந்நிய நேரடி முதலீடு 1.47 லட்சம் கோடி ரூபாய். சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 18,350 கோடி ரூபாய் ஆகும்.

தி.மு.க. ஆட்சிக் காலத்துடன் ஒப்பிடுகையில், அ.தி.மு.க. ஆட்சி செய்து வரும் ஒவ்வொரு வருடத்திலும் மூன்றை மடங்கு அளவிற்கு அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளது. உலக முதலீட்டாளர் மாநாடு 2015--ல் பல்வேறு துறைகள் சார்பாக கையொப்பம் இடப்பட்ட 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையில் கையெழுத்திடப்பட்ட 10,073 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஆகியவற்றின் மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்ட முதலீடு 2,42,160 கோடி ரூபாயாகும். கடந்த 18 ஆண்டுகளில் வரப்பெற்ற அந்நிய நேரடி முதலீடான ரூபாய் 1.8 லட்சம் கோடியில் சுமார் 47 சதவீதம். அதாவது 84,269 கோடி ரூபாய், 2015-ல் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு பிறகு தான் வந்துள்ளது.

செப்டம்பர் 2015 முதல் மார்ச் 2019 வரை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உலகெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தமிழ்நாட்டின் சிறப்புகளை எடுத்துரைத்து, முதலீடு செய்ய அழைப்பு விடுத்ததே இதற்கு காரணம். முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு செல்லவில்லை என்பதைக் கூட ஒரு சாதனையாக கூறிக் கொண்டு இருந்தால் போட்டிகள் நிறைந்த உலகில் எந்த முதலீடும் வராது. சுழன்று வேலை செய்தால் தான் முதலீடுகள் வரும் என்பதற்கு இதுவே சான்று. முந்தைய 15 ஆண்டுகளில் வரப்பெற்ற மொத்த அந்நிய நேரடி முதலீட்டிற்கு ஈடாக மாநாடு நடைபெற்ற நான்கே ஆண்டுகளில் தமிழ்நாடு புதிய அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்த்துள்ளது என்பதை விட உலக முதலீட்டாளர் மாநாட்டின் வெற்றிக்கு வேறு சான்று என்ன வேண்டும்?

உலக முதலீட்டாளர் மாநாடு 2019 உலக முதலீட்டாளர் மாநாடு 2019-ல் பல்வேறு துறைகளின் சார்பாக கையொப்பம் இடப்பட்ட 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை சார்பில் கையொப்பம் இடப்பட்ட 12,360 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட முதலீடு ரூபாய் 3,00,431கோடியாகும். இதில் 221 நிறுவனங்கள் பணிகளை துவக்கி, பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன. இது மொத்த ஒப்பந்தங்களின் எண்ணிக்கையில் 73 சதவீதம் ஆகும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை சார்பில் கையொப்பம் இடப்பட்ட 2,783 தொழில் திட்டங்கள், பணிகளை துவக்கி பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன. 22 திட்டங்களுக்கு முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. நிறுவனங்கள் தங்களது வணிக உற்பத்தியை துவக்கி விட்டன. இவை தவிர நிறுவன விரிவாக்கத்தின் முதல் பகுதி செயலாக்கத்திற்கு வந்து, அதன் மூலம் சென்னையில் தயாரித்த  மின்சாரக் கார் சமீபத்தில் முதல்வரால் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், பெருந்தொழில் துறை சார்பில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களில் நிறுவனங்கள் விரைவில் முழு வணிகஉற்பத்தியைத் துவங்க தயார் நிலையில் உள்ளன.

பல்வேறு நிறுவனங்கள் தமது முதலீடுகளை தமிழ் நாட்டில் மேற்கொண்டுள்ளன. இதில் குறிப்பாக, ரூபாய் 4,000 கோடி முதலீடு செய்துள்ள நிறுவனம் அனைத்து கட்டுமான பணிகளையும் ஒரே ஆண்டில் நிறைவு செய்து, வரும் அக்டோபர் மாதம் வணிக உற்பத்தியை துவக்கவுள்ளது. அம்மாவின் அரசு அளித்த தொடர் வழிகாட்டுதல்களே, இவ்வளவு விரைவான செயல்பாட்டிற்கு காரணம் என்றால் அது மிகையாகாது. மேலும், உலகின் பல்வேறு பகுதிகளில் பொருளாதார தேக்க நிலையின்தாக்கம் இருக்கும் போது கூட இந்திய அளவில் முதலீடுகளை ஈர்க்கும் மாநிலங்களில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை வகித்து புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அரசுமுறைப் பயணம் பல்வேறு தொழில் துறையினர் வழங்கிய ஆலோசனையை ஏற்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அமைச்சர்கள், அதிகாரிகள் கொண்ட குழு இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியநாடுகளுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணம் மேற்கொண்டனர். பெரும் வெற்றி பெற்ற இந்தப் பயணம், தமிழ்நாட்டின் மீது வெளிநாட்டு முதலீட்டாளர்களிடையே ஒரு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகம் சார்ந்த அறிவுசார் புரிதலுக்கு இந்தப் பயணம் ஒரு பேருதவியாக அமைந்தது. இது தவிர மொத்தம் 41 நிறுவனங்களின் ரூ. 8,835 கோடி மதிப்பீட்டிலான முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்த்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வாய்ப்பும் இப்பயணத்தால் கிடைத்தது.

லண்டன் ஸ்கூல் ஆப் ஹைஜீன் மற்றும் டிராபிகல் மெடிசன் நிறுவனத்துடன் நோக்க அறிக்கை, இங்கிலாந்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பணித்திறன் மேம்பாடுகளைக் கண்டறிந்து, அதனை தமிழ்நாட்டில் செயல்படுத்திட, சர்வதேச திறன் மேம்பாட்டு நிறுவனத்துடனும், தமிழ்நாட்டில் கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை நிறுவிட கிங்ஸ் மருத்துவமனையுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. முதல்முறையாக உலக தமிழர்களின் முதலீடுகளை, தமிழ்நாட்டிற்கு ஈர்க்கவும், தமிழ்நாட்டின் தொழில் துறை வளர்ச்சிக்கு அவர்களின் ஆலோசனைகளை பெறவும், யாதும் ஊரே என்ற புதிய திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நியூ யார்க் நகரில் துவக்கி வைத்தார். இது உலக தமிழர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மத்திய அரசின் புள்ளியியல் துறை சமீபத்தில் வெளியிட்டுள்ள தொழிற்சாலைகளுக்கான ஆண்டு ஆய்வு அறிக்கையின்படி, 2015-16 மற்றும் 2016-17 தொழிற்சாலை வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. டெல்லி மாநிலத்தில் உள்ள மொத்த தொழிற்சாலை வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கைக்கு ஈடாக ஒரே ஆண்டில் மட்டும் தமிழ்நாடு புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில்உள்ள மொத்த தொழிற்சாலை வேலைவாய்ப்புகளை விட இரு மடங்கு வேலைவாய்ப்புகள் தமிழ்நாட்டில் உள்ளன. மேலும், ஆந்திர மாநிலம் ஓராண்டில் கூடுதலாக அளித்த நேரடி தொழிற்சாலை வேலைவாய்ப்பு 38,957, தெலுங்கானா மாநிலம் ஓராண்டில் கூடுதலாக அளித்த வேலைவாய்ப்பு 28,608. தமிழ்நாடு அரசு, அதே காலத்தில் 73,328 புதிய, நேரடி,தொழிற்சாலை வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. இது தவிர, தொழிற்சாலைகளின் நிர்வாக பணிகள், மறைமுக வேலைவாய்ப்புகள், சேவைத் துறை உள்ளிட்ட பிற துறை வேலைவாய்ப்புகள் என பல லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை தமிழ்நாடு அரசுஉருவாக்கியுள்ளது.

உலக முதலீட்டாளர் மாநாடு -2015-ல் வரப்பெற்ற முதலீடுகள் போக, அதே காலத்தில், பிற தொழில் திட்டங்கள் மூலம், மேலும் 14,153.62 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டன என விவரம் அளிக்கப்பட்டது. இந்த தொகையை, உலக முதலீட்டாளர் மாநாடு 2015-ன் மூலம் இதுநாள் வரை வரப்பெற்ற மொத்த முதலீடே இதுதான் என்பது போல பொய்யாக திரித்துக் கூறுவது தான் பொறுப்புள்ள எதிர்கட்சி தலைவருக்கு அழகா? பல துறைகளிலும் முன்னணி இடத்தில் இருக்கிறோமே என மகிழ்ந்து நின்று விடாமல், ஆசியாவின் மிகச் சிறந்த முதலீட்டு மையமாக தமிழ்நாடு திகழ்ந்திட வேண்டும் என்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவினை நனவாக்க நாளும் செயல்படுவதே அரசின் நோக்கம்.

மற்ற மாநில முதல்வர்கள் , முதலீடுகளை பெறுவதற்கு வெளிநாடு செல்கிறார்கள். அந்த மாநில எதிர்கட்சி தலைவர் உள்பட அனைவரும் அதை வரவேற்று அரசுடன் மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஒத்துழைக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் தான் எந்த அடிப்படையும் இல்லாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசுக்கு நல்ல பெயர் வரக் கூடாது என எதிர்கட்சி தலைவர், .மு.க.ஸ்டாலின் அவதூறு பிரசாரம் செய்து வருகிறார். சிலரின் வெற்றுக்கூச்சல்களைப் புறந்தள்ளி, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, இந்தியாவிலும் உலகெங்கும் தமிழ்நாட்டின் சிறப்புகளை எடுத்துக்கூறி தமிழ்நாட்டில் தொழில் துவங்க அழைப்பு விடுக்கும் பணிகளையும், தமிழ் நாட்டின் தொடர் வளர்ச்சியை நோக்கிய வெற்றிப் பயணத்தையும், பாரெங்கும் உள்ள தமிழ் மக்களின் நல்லாதரவோடு, தொடர்ந்து மேற்கொள்ளும் என உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து