முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறைகளின் 130 அதிகாரிகளுக்கு அண்ணா பதக்கங்கள் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சனிக்கிழமை, 14 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி பல்வேறு துறைகளை சேர்ந்த 130 அதிகாரிகளுக்கு அண்ணா பதக்கங்களையும், வீரதீர செயல் புரிந்து தன் இன்னுயிர் நீத்த காவலர் ஜெகதீஷ் துரையின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய்க்கான வெகுமதியையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்.

இது குறித்து கூடுதல் தலைமை செயலாளர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

தமிழகத்தில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை, தமிழ்நாடு விரல்ரேகைப் பிரிவு  அலுவலர்கள் மற்றும் தடய அறிவியல் துறை அறிஞர்கள் சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும் மற்றும் பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ம் நாள் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன. 

இந்த ஆண்டு, காவல் துறையில் காவல் கண்காணிப்பாளர் முதல் முதல்நிலை காவலர் வரையிலான 100 அலுவலர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையில்  மாவட்ட அலுவலர் முதல் தீயணைப்பு வீரர் நிலை வரையிலான 10 அலுவலர்களுக்கும், சிறைத்துறையில் துணை சிறை அலுவலர் முதல் முதல்நிலை சிறைக்காவலர் வரையிலான 10 அலுவலர்களுக்கும், ஊர்க்காவல் படையில்  மண்டல தளபதி முதல் பிரிவு தலைவர் வரையிலான 5 அலுவலர்களுக்கும், விரல்ரேகைப் பிரிவில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கும் மற்றும் தடய அறிவியல் துறை அதிகாரிகள் முறையே ஒரு துணை இயக்குநர் மற்றும் ஒரு அறிவியல் அலுவலர் ஆகியோருக்கு, அவர்களது மெச்சத்தகுந்த பணியினை அங்கீகரிக்கும் வகையில் தமிழக முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள் வழங்கிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார். 

பதக்கங்கள் பெறுகின்ற அலுவலர்களுக்கு அவரவர் தம் பதவிக்கேற்றவாறு,  பதக்க விதிகளின்படி ஒட்டு மொத்த மானியத் தொகையும் வெண்கல பதக்கமும் அளிக்கப்படும். மேலும், தமிழக முதலமைச்சரின் வீரதீர செயலுக்கான காவல் பதக்கம் மணல் திருட்டை தடுக்கும் பொழுது தன்னுயிர் நீத்த (முதல் நிலைக் காவலர்-2477)  ஜெகதீஷ் துரைக்கு (இறப்பிற்கு பின்), வழங்கப்படுகிறது. அன்னாரின்  குடும்பத்திற்கு பண வெகுமதி ரூ.5.00 லட்சம்  வழங்கப்படும்.  பின்னர் நடைபெறும் விழா ஒன்றில், பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தமிழக முதல்வர் இப்பதக்கங்களை வழங்குவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து