முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கடைப்பிடித்த இரு மொழி கொள்கையை தொடர்ந்து கடைபிடிப்போம் பாதை மாற மாட்டோம்: அமைச்சர் ஜெயகுமார் திட்டவட்டம்

சனிக்கிழமை, 14 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோர் கடைபிடித்த இருமொழி கொள்கையை தொடர்ந்து கடைபிடிப்போம் என்றும், அவர்கள் வகுத்து தந்த பாதையில் இருந்து மாற மாட்டோம் என்றும் அமைச்சர் ஜெயகுமார் திட்டவட்டமாக தெரிவித்தார். .

சென்னையில் அமைச்சர் ஜெயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

தமிழகத்தில் மொழியைப் பொறுத்தவரை அண்ணா காலத்திலிருந்து கடைபிடிப்பது இரு மொழிக் கொள்கைதான். இரு மொழி கொள்கைதான் நேற்றும், இன்றும், நாளையும். இங்கு மக்கள் விரும்பாத எந்த மொழியும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கடைப்பிடித்த இரு மொழி கொள்கையைத் தொடர்ந்து கடைபிடிப்போம். 1965-ல் மிகப் பெரிய அளவுக்கு இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்து பலர் தன்னுயிரை மாய்த்துக் கொண்டனர். அப்படிப்பட்ட வரலாறு தமிழகத்தில் உள்ளது. அப்போது மக்களிடம் காங்கிரஸ் ஆட்சி இந்தியைத் திணித்தது. 1967-க்கு பிறகு காங்கிரஸ் ஆட்சிக்கு வர முடியவில்லை.

அதன் பிறகு இருமொழிக் கொள்கைதான் திருக்குறள் போல நீடிக்கிறது. அண்ணாவும், எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் எங்களுக்கு வகுத்துத் தந்த பாதையிலிருந்து என்றைக்கும் நாங்கள் மாற மாட்டோம். எங்களுடைய லட்சியம், கொள்கை, உயிரை கொடுத்தாவது காப்பாற்றுவோம். தமிழை வைத்து வியாபாரம் செய்யும் தி.மு.க. மற்றும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குறித்து பல நேரங்களில் நான் தெரிவித்துள்ளேன். அது வேறு விஷயம். வேறு பிரச்னை இல்லாத நிலையில் தற்போது மொழி பிரச்னையை எடுத்துக் கொண்டார்கள். மொழி பிரச்சனையில் தி.மு.க.வை விட அ.தி.மு.க.தான் முதன்மை நிலையில் இருக்கிறது. எந்த நிலையிலும் தமிழகத்தில் இந்தி மொழி என்பது மக்கள் ஏற்றுக் கொள்ளாத விஷயம். எனவே எங்கள் முன்னோர்கள் வழியில்தான் முடிவுகளை எடுப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தியாவை ஒருங்கிணைக்க இந்தி மொழியால்தான் முடியும். இந்தி மொழியை நம்முடைய அன்றாட பணிகளில் அதிகமாகப் பயன்படுத்தி மகாத்மா காந்தி,  சர்தார் வல்லவாய் படேலின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்று நேற்று அமித்ஷா கூறியிருந்தார். இந்நிலையில் அமைச்சர் ஜெயகுமார் மேற்கண்டவாறு தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து