முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கி ஸ்டிரைக் எதிரொலி: தமிழகத்தில் 20000 ஏ.டி.எம் மையங்கள் முடங்கும் ?

திங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

சென்னை : வரும் 26,27-ந்தேதி தொடர்ந்து இரண்டு நாட்கள் வங்கிகள் ஸ்டிரைக்கில் ஈடுபடுவதால் தமிழகத்தில் 20000 ஏடிஎம் மையங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவை அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.350 லட்சம் கோடி மதிப்பு கொண்ட பொருளாதார நாடாக மாற்ற வேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஆனால் தற்போது நிலவும் பொருளாதார மந்தநிலை மத்திய அரசின் இலக்குக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி அடைந்துவிட்டது.

பொருளாதார நெருக்கடி நிலையை சமாளிக்க மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து அறிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் 30-ந்தேதி 10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதன்படி 4 பெரிய வங்கிகளுடன் 6 சிறிய வங்கிகள் இணைக்கப்படுகின்றன.

இந்த இணைப்பு நடவடிக்கை காரணமாக நாட்டில் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 12 ஆக குறைகிறது. 

வங்கிகள் இணைப்புக்கு அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறுகையில், “வங்கிகள் இணைப்பால் நிறைய பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும். நாளடைவில் இது தனியார் மயத்துக்கு வழிவகுத்து விடும்” என்று தெரிவித்தனர்.

வங்கிகள் இணைப்பை கைவிட வேண்டும் என்றும் வங்கி ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தின. ஆனால் மத்திய அரசு இந்த கோரிக்கையை ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக வருகிற 25-ந்தேதி நள்ளிரவு முதல் 27-ந்தேதி நள்ளிரவு வரை வேலை நிறுத்தம் செய்யப் போவதாக வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எனவே வருகிற 26, 27-ந்தேதிகளில் (வியாழன், வெள்ளி) இரண்டு நாட்கள் வங்கி சேவைகள் அனைத்தும் முடங்கும். வங்கிகள் திறக்கப்பட்டாலும் எந்த ஊழியரும் பணியில் ஈடுபடமாட்டார்கள்.

அதற்கு பிறகும் மத்திய அரசு தனது முடிவை மாற்றிக் கொள்ளாவிட்டால் நவம்பர் மாதம் 2-வது வாரத்தில் இருந்து கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாக வங்கி ஊழியர் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் முதல் கட்ட போராட்டத்தை வெற்றிகரமாக மாற்றும் முயற்சிகளில் அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.

வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலை நிறுத்தம் செய்வதால் பண பரிவர்த்தனைகளில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். குறிப்பாக தானியங்கி எந்திரம் மூலம் பணம் பெறும் ஏ.டி.எம். சேவை வறண்டு விடும் நிலை உருவாகும். இது ஏ.டி.எம். சேவையை மட்டுமே நம்பி இருக்கும் பொதுமக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும்போது வங்கி அதிகாரி மேற்பார்வையில்தான் பணம் நிரப்பப்படும். 26, 27-ந்தேதிகளில் வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தம் செய்வதால் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் சேவைக்கு ஒத்துழைக்க மாட்டார்கள். நாளை   (25-ந்தேதி) மாலையில் இருந்தே வங்கி அதிகாரிகள், ஏ.டி.எம். சேவை பணிகளை புறக்கணிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

எனவே வருகிற புதன் கிழமை ஏ.டி.எம். எந்திரங்களில் வைக்கப்படும் பணம் தான் வருகிற வியாழன், வெள்ளிக்கிழமைகளில் 2 நாட்களின் தேவையை சமாளிக்க வேண்டியதிருக்கும். ஆனால் ஏ.டி.எம். எந்திரங்களில் அதிக அளவு மக்கள் பணம் எடுக்கும் பட்சத்தில் வியாழக்கிழமையே ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் இல்லாத வறண்ட சூழ்நிலை ஏற்பட்டு விடும்.

இதன் தொடர்ச்சியாக வருகிற வியாழன், வெள்ளி இரு நாட்களும் ஏ.டி.எம். சேவை முடங்கும் அபாயம் உள்ளது. அந்த வகையில் நாடு முழுவதும் 2 லட்சத்து 12 ஆயிரம் ஏ.டி.எம்.களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது நாடு முழுவதும் சுமார் ரூ.48 ஆயிரம் கோடி பணப் பரிவர்த்தனையை பாதிக்கும்.

தமிழ்நாட்டில் சுமார் 20 ஆயிரம் ஏ.டி.எம். சேவை வருகிற வியாழன், வெள்ளிக்கிழமைகளில் முடங்கும் என்று தெரிய வந்துள்ளது. சனி, ஞாயிற்றுகிழமைகளில் விடுமுறை என்பதால் வியாழன் முதல் ஞாயிறு வரை 4 நாட்களுக்கு தொடர்ச்சியாக வங்கி பணிகளும், ஏ.டி.எம். சேவைகளும் முடங்கும் அபாய நிலை உள்ளது.

தமிழ்நாட்டில் வருகிற வெள்ளிக்கிழமை சுமார் 20 ஆயிரம் ஏ.டி.எம்.களில் “சுத்தமாக பணம் இல்லை” என்ற நிலை ஏற்பட கூடும். இது தமிழ்நாட்டில் ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு பண பரிவர்த்தனையை பாதிக்கும் என்று அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு நிர்வாகிகளில் ஒருவரான சேகரன் தெரிவித்துள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து