முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்; அனைத்து நிலைகளிலும் தயார் நிலையில் இருக்க வேண்டும் - அமைச்சர்கள் அதிகாரிகளுக்கு முதல்வர் எடப்பாடி அறிவுரை

திங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது அனைத்து நிலைகளிலும் தயார்நிலையில் இருக்குமாறு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கினார்.

2019 -ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  குறித்து தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆய்வுக் கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. 2019 - ம் ஆண்டு தென் மேற்கு பருவ மழைக் காலத்தில் 21.09.2019 முடிய 5 மாவட்டங்களில் குறைவான மழைப்பொழிவும், 14 மாவட்டங்களில் அதிகப்படியான மழைப் பொழிவும், எஞ்சிய 13 மாவட்டங்களில் இயல்பான மழைப்பொழிவும் ஏற்பட்டுள்ளது.

மண்டல குழுக்கள்

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4,399 பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு, பல்வேறு துறைகளை உள்ளடக்கிய  662 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9,162 பெண்கள் அடங்கிய 30,759 எண்ணிக்கையிலான முதல் நிலை மீட்பாளர்களும், பேரிடர் அல்லாத காலங்களில் மரங்களை நடுவதற்கும், பேரிடர் காலங்களில் சாலைகளில் விழும் மரங்களை வெட்டி அகற்றுவதற்கும் 3,824 முதல் நிலை மீட்பாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகளாக, 13,318 தடுப்பணைகள் கட்டப்பட்டு, 14,627 கால்வாய் நீர் வழிப்பாதைகள் மற்றும் 3,174 கிலோ மீட்டர் நீளம் ஆற்றுப்படுகைகள் தூர்வாரப்பட்டன. 3,662 ஆற்றுப்படுகைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.  6,320 பாலங்கள் மற்றும் 1,01,582 சிறுபாலங்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்பட்டுள்ளன. 7.44 கோடி கன மீட்டர் அளவுக்கு தூர்வாரப்பட்ட வண்டல் மண்ணை 6.60 லட்சம் விவசாயிகள் நிலத்திற்கு உபயோகித்து பயனடைந்துள்ளனர். 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களைத் தவிர 4,768 பள்ளிகள், 105 கல்லூரிகள், 2,394 திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாயக் கூடங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும், மாவட்டங்களில் 3,915 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 2,897 இயந்திரங்கள், 2,115 ஜெனேரட்டர்கள் மற்றும் 483 ராட்சத பம்புகள் தேடல் மற்றும் மீட்பு உபகரணங்களாக தயார் நிலையில் உள்ளன என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

தயார் நிலையில் காவலர்கள்

நடமாடும் முதல் நிலை மீட்பாளர் குழு ஒவ்வொரு  பகுதி, வட்டம், மண்டல வாரியாக அமைக்கப்பட்டு,  அக்குழுக்களுக்கு மாவட்ட அளவில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. 1,000 காவலர்களைக் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை தவிர, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினரிடம் பயிற்சி பெற்ற 4,155 காவலர்கள் (சென்னை நீங்கலாக) அனைத்து கடலோர மாவட்டங்களிலும், 1,844 காவலர்கள் இதர மாவட்டங்களிலும், சென்னை மாவட்டத்தில் 607 காவலர்களும் ஆக மொத்தம் 6,606 பயிற்சி பெற்ற காவலர்கள் அனைத்து மாவட்டங்களிலும் தயார்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் கீழ் 4,537 தீயணைப்பு வீரர்களுக்கும், 1,400 காக்கும் தன்னார்வலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 2,000 நபர்களுக்கு ஒத்திகைப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

முதல்வர் உத்தரவு

மாநில மற்றும் மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையம், செயலி மற்றும் சமூக வலைதளம், மின்னனு மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு பேரிடர் குறித்த தகவல்கள் தெரிவிக்க நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டுள்ளது. பருவமழை காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கீழ்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார். மழை காலங்களில் கீழே விழும் மரங்களை உடனே அகற்ற தேவையான ஆட்கள் மற்றும் மரம் அறுக்கும் இயந்திரங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மழை நீர் தேங்கும் இடங்களில் நீரை வெளியேற்ற மின்மோட்டார்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

மீட்புக் குழுக்கள் குறுகிய கால அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்றடைய ஏதுவாக தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். வடகிழக்கு பருவ மழையின் காரணமாக தொற்று நோய் ஏதும் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போதுமான அளவில் மற்ற பொருட்கள், மருந்துகள் இருப்பில் வைக்க வேண்டும். தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்கவும், போதுமான அளவு மருந்துகள் இருப்பில் வைக்க வேண்டும்.

பேரிடர் காலங்களில் பற்றாக்குறையினை தவிர்க்கும் பொருட்டு இரண்டு மாத காலத்திற்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்கள் நியாய விலைக்கடைகளில் போதுமான அளவில் இருப்பில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை 2019 ஆண்டிற்கான முன்னேற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையின் கீழ் உடனடியாக மத்திய, மாநில அரசு துறைகள் மற்றும் முப்படையினைச் சேர்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டத்தை நடத்த வேண்டும்.

அனைத்து மாவட்டங்களிலும், சென்னை மாநகராட்சியிலும் பேரிடர் காலங்களில் கண்காணிப்பு மற்றும் அறிவுரைகள் வழங்குவதற்காக நியமனம் செய்யப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ். நிலையிலான கண்காணிப்பு அலுவலர்கள் அந்தந்த மாவட்டங்களில் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, சரிபார்ப்பு பட்டியலின் அடிப்படையில் வரும் அக்டோபர் திங்கள் முதல் வாரத்திலிருந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

வடகிழக்கு பருவ மழைக் காலத்தில் உயிர் சேதத்தையும், பொருட் சேதத்தையும் குறைக்க அனைத்து துறையினைச் சார்ந்த செயலர்களும், துறைத் தலைவர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினை வலுப்படுத்துவதற்காக கூடுதல் உபகரணங்கள் மற்றும் சிறப்பு கருவிகள் வாங்குவதற்காக ரூ.30.27 கோடியும், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உபகரணங்களுக்காக ரூ.7.25 கோடியும், மீன்வளத் துறைக்கு உபகரணங்களுக்காக ரூ.1.00 கோடியும் ஆக மொத்தம் ரூ.38.52 கோடி உபகரணங்கள் மற்றும் சிறப்பு கருவிகள் வாங்குவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார்.

இந்தக் கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் க.சண்முகம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து