முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்வி என்பது மனிதனை சிந்திக்க வைப்பதாக இருக்க வேண்டும் - பல்கலைக் கழக விழாவில் முதல்வர் எடப்பாடி பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 20 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : கல்வி என்பது மனிதனை சிந்திக்க வைப்பதாக இருக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 28-வது பட்டமளிப்பு விழா, சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஏ.சி.எஸ். கன்வென்ஷன் மையத்தில் நேற்று நடந்தது. இந்த விழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மாணவ - மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். முன்னதாக பல்கலைக் கழகம் சார்பில் முதல்வருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதை, ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தர் ஏ.சி. சண்முகம், நிறுவனத்தின் தலைவர் ஏ.சி.எஸ்.அருண்குமார் ஆகியோர் வழங்கினர். மேலும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் செயலர் ஜி.சதீஷ் ரெட்டி, கங்கா மருத்துவமனை தலைவர் எஸ். ராஜசபாபதி, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், நடிகை ஷோபனா ஆகியோருக்கும் தங்கள் துறைகளில் சிறந்து விளங்கியதற்காக கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. பின்னர் முதல்வர் பழனிசாமி பட்டமளிப்பு விழா உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,

தரமான கல்வி நிறுவனங்கள் மூலம் மனித வள மேம்பாட்டை ஊக்குவித்து, உயர்தரம் வாய்ந்த கல்வியாளர்களை அதிக எண்ணிக்கையில் உருவாக்குவதும், பல்கலைக்கழகக் கல்வியில் தமிழ்நாட்டை ஒரு பன்னாட்டு மையமாக உருவாக்குவதுமே எனது அரசின்  லட்சியம் என்றார் மறைந்த முதல்வர் அம்மா.

புதிய பாடத்திட்டங்கள்

கல்வி என்பது எழுத்தறிவை மட்டும் கொடுக்காமல், மனிதனை சிந்திக்க வைக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதை நன்கு உணர்ந்த அம்மாவின் அரசு, 12-ம் வகுப்பு வரையில் புதிய பாடத் திட்டங்களை வெளியிட்டுள்ளது. இந்த நிதியாண்டில் பள்ளிக் கல்வித் துறைக்கென மிக அதிக அளவில் 28 ஆயிரத்து 957 கோடியே 62 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்லூரிகளில் 50 சதவீதத்தினருக்கும் மேல் கல்வி, பயில வகை செய்தல் எனது நோக்கமாகும் என்று கூறிய அம்மா, தமிழ்நாட்டில் 65 கல்லூரிகளை துவக்கினார்.  அம்மாவின் வழியில் வந்த எங்கள் அரசும், 12 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை துவக்கியுள்ளதுடன், 5 பாலிடெக்னிக் கல்லூரிகளையும் துவக்கியுள்ளது.  சமீபத்தில் ராமேஸ்வரத்தில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பெயரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அம்மாவின் அரசால் துவக்கப்பட்டுள்ளது.  மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில்  விழுப்புரம், தருமபுரி, ராமநாதபுரம், சேலம், நாமக்கல் மற்றும் தேனி ஆகிய 6 மாவட்டங்களில் 6 சட்டக்கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளன.

2019-2020ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் உயர்கல்வித் துறைக்காக 4 ஆயிரத்து 584 கோடியே 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதில் நமது மாணவர்கள் பின் தங்கி விடக்கூடாது என்பதைக்  கருத்தில் கொண்டு  அம்மாவின் மனதில் உதித்த திட்டம் தான் விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ்,   தமிழ்நாடு முழுவதும் 2011-2012 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் 6,813 கோடி ரூபாய் செலவில் 48 லட்சத்து 17 ஆயிரத்து 195 மடிக்கணினிகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

கல்வி தொலைக்காட்சி

கல்விக்கென தனியாக கல்வித் தொலைக்காட்சி ஒன்றினை  தமிழ்நாடு அரசு துவக்கி, அதனை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. அரசு பொறியியல் கல்லூரிகளில் பயிலும் 100 மாணாக்கர்களுக்கு 15 நாட்கள் அயல்நாட்டில் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கும் திட்டம் முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 1,350 கூடுதல் மருத்துவ பட்டப்படிப்பு இடங்கள் தமிழகத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளன. 1,213 மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் 6 மாவட்ட தலைநகரங்களில் புதிய மருத்துவக் கல்லூரி திறக்க வேண்டுமென்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். மத்திய அரசு அந்தக் கோரிக்கையினை தற்போது பரிசீலித்து வருகிறது. 

ஏழை, எளிய மாணவர்கள் உயர் கல்வி படிக்கும் வகையில் கலை அறிவியல் கல்லூரிகள் மட்டுமல்லாது, சட்டக்கல்லூரிகளையும், தொழிற் கல்வி கற்பிக்கும் பொறியியல் கல்லூரி  மற்றும் மருத்துவக் கல்லூரிகளையும் அதிக அளவில் திறந்து, எண்ணற்ற சாதனைகளை கல்வித் துறையில் அம்மாவின் அரசு நிகழ்த்தி வருகிறது. இதன் காரணமாகத்தான், உயர் கல்வியில் சேரும் மாணவர்கள் சதவீதம் 49 என உயர்ந்து, இந்தியாவிலேயே உயர் கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது. 

பல்கலைக்கழகங்கள் அறிவுலகின் கோயில்கள்.  பொருளாதாரத் தேவைகளை எதிர்கொள்ளக் கூடிய  ஆராய்ச்சி மற்றும் திறன் வாய்ந்த தொழிலாளர்களை, பணியாளர்களை, இளம் விஞ்ஞானிகளை   உருவாக்குவதால்தான், சமூக மாற்றம் மற்றும் வளர்ச்சிக்கான முக்கியமான அமைப்புகளாக பல்கலைக்கழகங்கள் கருதப்படுகின்றது. தற்போது தமிழ்நாடு அரசு, திறன் மேம்பாடு பயிற்சித் திட்டங்களின் மூலம் முக்கிய மனிதவளத் தேவையைப் பூர்த்தி செய்து வருவதால், நாட்டிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உருவாகியுள்ளது. கல்வி என்பது எழுத்தறிவை மட்டும் கொடுக்கக் கூடியதாக இருத்தல் கூடாது. அது மனிதனைச் சிந்திக்க வைக்கக் கூடியதாகவும், புரிந்து கொள்ள வைப்பதாகவும், பொறுமையை வளர்ப்பதாகவும் இருத்தல் வேண்டும் என்றார் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன். ஒரு சமூகத்தின் வளர்ச்சி, பொருளாதார பரிணாம  வளர்ச்சியுடன் மட்டும் நின்று விடுவதில்லை.  உணவு, கல்வி, மருத்துவம், குடியிருப்பு, உடை  ஆகியவற்றுக்கு வகை செய்யும் பொருள் வசதி மிக முக்கியமானதுதான்.   அதே நேரம், வாழ்க்கையை கற்க,  மனிதனின் அகம் மேன்மையடைய, இலக்கியம், சிந்தனைகள், நீதிக் கதைகள் ஆகியவை வழியே கிடைக்கும் விவேகம் ஆகியவற்றை பற்றி அறிந்து கொள்வதும் மிகவும் முக்கியமானது. இது இரண்டையும் ஒருங்கே கற்பவனே ஒரு முழு மனிதன் ஆவான்.

ஏ.சி. சண்முகத்திற்கு பாராட்டு

இங்கே ஏ.சி.சண்முகம் பேசுகின்றபொழுது, இந்தக் கல்லூரியினுடைய சிறப்பை எடுத்துச் சொன்னார். அவர் பெங்களூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலே ஒரு லட்சம் நபர்களுக்கு  இலவசமாக  அறுவை சிகிச்சை செய்த காரணத்தினாலே ஒரு லட்சம் நபர்களை பிழைக்க வைத்த பெருமை ஏ.சி.சண்முகத்தையே சாரும். பணம் இருந்தால் போதாது, மனம் இருக்க வேண்டும். அந்த மனமும், ஈகையும் கொண்டவர் ஏ.சி.சண்முகம். அதுமட்டுமல்ல, அவர் அண்மையிலே வேலூர் நாடாளுமன்றத் தொகுதியிலே போட்டியிடுகின்ற போது, நான் அவரோடு தேர்தல் பிரச்சாரத்திலே ஈடுபட்டிருந்தேன். அப்போது தேர்தல் பிரச்சாரத்திலே ஒன்றை குறிப்பிட்டார், அதாவது, இந்த வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 100 நபர்களுக்கு என்னுடைய கல்லூரியிலே இலவசமாக படிக்க வைப்பேன், அனைத்து செலவுகளையும் நானே ஏற்றுக்கொள்வேன் என்று அப்போது சொன்னார். 6 சட்டமன்றத் தொகுதிகள் என்கின்ற பொழுது 600 நபர்களை இலவசமாக படிக்க வைப்பேன் என்று சொன்னால், எந்த அளவுக்கு  பெருமைக்குரியது என்பதை நாம் பார்க்க வேண்டும். அதற்காக அவரை பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். அந்த வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்டவர்கள்  யாரேனும் நோய்வாய்ப்பட்டால் பெங்களூரிலுள்ள மருத்துவமனையில் நான் இலவசமாக அந்த சிகிச்சைக்குரிய முழு செலவையும் அளிப்பேன் என்ற உறுதியையும் கொடுத்தார். ஆகவே, ஒருவர் அரசியலிலே இருப்பது பெரிதல்ல, இருக்கின்ற காலத்திலே என்ன உதவி செய்தார் என்பது தான் பெரிது.  அப்படி உதவி செய்கின்ற மனம் ஏ.சி.சண்முகத்திற்கு இருக்கின்றது,

அவர் முயற்சி செய்த காரணத்தினாலே இன்றைக்கு 35,000 மாணவர்கள் கல்வி கற்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கித் தந்திருக்கிறார். ஏறத்தாழ 7,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கிறார். இந்த பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்கள் ராணுவத்திற்கு உதவியாக பல்வேறு  சாதனங்களை தயாரித்து கொடுத்து, ராணுவத்தில் பயன்படுத்துகின்ற நிலையை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்பதை எண்ணி இந்த பல்கலைக்கழகத்தை பாராட்டுகிறேன். உங்கள் ஆராய்ச்சி தொடர வேண்டும், இந்த நாட்டிற்கு உங்களது பங்களிப்பு இருக்க வேண்டும், மென்மேலும் வெற்றியை குவிக்க வேண்டும். இந்த நாடு வளர, உங்களுடைய இல்லம் சிறக்க வாழ்த்தி, பட்டம் பெற்ற அனைவரையும் வாழ்த்தி விடைபெறுகின்றேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து