முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அத்திவரதர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு பதக்கங்கள்: 28 ஆயிரம் போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் - சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

புதன்கிழமை, 23 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : சென்னையில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி பதக்கம் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரின் பதக்கங்கள் மற்றும் அத்திவரதர் சிறப்புப் பணிகளுக்கான 604 பதக்கங்களை போலீசாருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். மேலும் அத்திவரதர் சிறப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 28 ஆயிரம் காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் முதல்வர் வழங்கினார்.

ஜனாதிபதி பதக்கங்கள், தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் மற்றும் அத்திவரதர் சிறப்புப் பணி பதக்கங்கள் வழங்கும் விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது, இந்த விழாவில் பதக்கங்கள் வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

மக்களைக் காக்கும் மகத்தான பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள காவல் துறையில், காவல் துறை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் மற்றும் குடிமை பாதுகாப்புப் படை மற்றும் தடய அறிவியல் துறை ஆகிய துறைகளில் தகைசால்பணி, மெச்சத்தக்க பணி, பொது சேவையில் சீர்மிகு பணி, சிறந்த நற்பணி, சீர்மிகு புலனாய்வு, விரல் ரேகை அறிவியல் சீர்மிகு பணி, தடய அறிவியல் சீர்மிகு பணி ஆகியவற்றிற்கான ஜனாதிபதி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரின் பதக்கங்கள் மற்றும் அருள்மிகு அத்திவரதர் சிறப்புப் பணி பதக்கங்களை 604 நபர்களுக்கு இச்சிறப்புமிகு விழாவில் வழங்கியதில் நான் பெரும் மகிழ்ச்சியடைவதோடு, பதக்கங்கள் பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
காவலர்களுக்கு முழு சுதந்திரம் அளிப்பதுடன், அவர்கள் சட்டத்திற்கும், நியாயத்திற்கும் மட்டும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். காவல் துறை பணிகளில் குறுக்கீடு செய்ய யாருக்குமே அதிகாரமில்லை என்பது தான் எனது திடமான கருத்து ஆகும். காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கின்ற முதலமைச்சர் கூட அதன் செயல்பாடுகளில் தலையிடமுடியாது என்றார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர் காவல் துறையினரை பற்றி குறிப்பிடுகையில், நான் எங்கே வைத்து காவல்துறையினரை பற்றி பேசுகிறேன் என்பதை ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். ஒரு தாய்த்தன்மைக்கு ஈடாக, என்னைப் பெற்றெடுத்த தாய்க்கு ஈடாக வைத்து எண்ணுகிறேன் என்று காவல்துறையைப் பற்றி மிகவும் உயர்வாகக் கூறியுள்ளார். காவல்துறையின் செயல் திறம் சிறக்க, பல்வேறு முன்னேற்ற நடவடிக்கைகளையும், காவலர்களின் நலன் காக்க பல்வேறு நலத் திட்டங்களையும் நமது இரு பெரும் தலைவர்களும் செயல்படுத்தியுள்ளனர். இவர்களின் நல்லாசியுடன் செயலாற்றும் அம்மாவின் அரசும் இந்தப் பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாடு காவல் துறையினர், தங்களது சிறப்பான செயல்பாடுகளினால், வரவுள்ள பிரச்னைகளை முன்கூட்டியே கண்டறிந்து தேவையான தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பொதுமக்கள் பாதிக்கப்படாதவாறு மாநிலத்தில் சாதி, சமய பூசல்கள் ஏதுமின்றி, பொதுஅமைதியை பேணிக் காத்து வருகின்றனர். மேலும், மாநிலம் முழுவதும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் மிகுந்த கவனம் செலுத்தி, குற்ற நிகழ்வுகளைத் தடுத்து வருவதுடன், குற்ற வழக்குகளில் எதிரிகளைக் கைது செய்து தண்டனை பெற்றுத் தந்தும் வருகின்றனர். இதனால் தமிழ்நாட்டில் பெரும்பாலான குற்ற நிகழ்வுகள் கணிசமாக குறைந்துள்ளன.

அமைதி, வளம், வளர்ச்சி என்ற கோட்பாட்டின்படி அம்மாவின்அரசு செயல்பட்டு வருகிறது. ஒரு மாநிலம் வளர்ச்சி பெற வேண்டுமானால், அந்த மாநிலத்தின் மக்கள் வளம் பெற வேண்டும். மக்கள் வளம் பெற வேண்டுமெனில் அந்த மாநிலத்தின் பொருளாதாரம் வளர்ச்சி அடைய வேண்டும். பொருளாதார வளர்ச்சிக்கென இது போன்ற பல்வேறு காரணிகள் இருந்தாலும், இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது பொது அமைதி, பாதுகாப்பு ஆகியவைதான். பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான அனைத்துக் காரணிகளும் இருந்தாலும், அமைதியான சூழ்நிலை நிலவவில்லை என்றால் அங்கே எந்தவிதமான வளர்ச்சியும் ஏற்படாது. எனவே தான் பொது அமைதிக்கும், பாதுகாப்பிற்கும், சட்ட ஒழுங்கிற்கும் மிகுந்த முக்கியத்துவத்தை அம்மாவின் அரசு அளித்து வருகிறது. இதன் பயனாக தமிழ்நாட்டை நாடி பல்வேறு தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் வந்தவண்ணம் உள்ளன. இவ்வாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் சந்திப்பும் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது என்பதை பெருமிதத்துடன் கூறிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து