சபரிமலை அப்பீல் வழக்கிலும் விரைவில் தீர்ப்பு: போலீசாரின் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் சன்னிதானம்

திங்கட்கிழமை, 11 நவம்பர் 2019      ஆன்மிகம்
Sabarimala 2019 11 11

திருவனந்தபுரம் : சபரிமலை விவகாரம் தொடர்பான தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில் இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு சபரிமலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது.

கேரளாவில் உள்ள சபரிமலை கோவிலில் 10 வயது முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது இல்லை. காலம், காலமாக கடைபிடிக்கப்பட்டு வந்த இந்த ஐதீகத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு சபரிமலை கோவிலுக்கு அனைத்து பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.இந்த தீர்ப்புக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு அமைப்பினரும் போராட்டங்களில் குதித்தனர். மேலும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு சபரிமலை கோவில் நடை மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக திறந்த போது சாமி தரிசனம் செய்ய இளம்பெண்கள் சென்றனர். அவர்களை ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தியதால் சபரிமலையே போராட்டக்களமாக மாறியது.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி கேரளாவை சேர்ந்த நாயர் சர்வீஸ் சொசைட்டி உள்பட பல்வேறு அமைப்புகள், தனிநபர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்து உள்ளனர். சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வருகிற 17-ம் தேதி ஓய்வு பெற உள்ளார். இதனால் அதற்கு முன்பாக சபரிமலை விவகாரம் தொடர்பான தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்த நிலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜைக்காக சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் நடை வருகிற 16-ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. மறுநாள் (17-ம் தேதி) முதல் மண்டல பூஜைகள் தொடங்கும். மண்டல பூஜையின் போது சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். இந்த முறையும் மண்டல பூஜையின் போது இளம்பெண்கள் சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்யச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையைச் சேர்ந்த மனிதி என்ற அமைப்பை சேர்ந்த பெண்களும் மண்டல பூஜையின் போது சபரிமலைக்கு சாமி தரிசனத்திற்கு செல்வோம் என்று அறிவித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இந்த ஆண்டு சபரிமலையில் இதுவரை இல்லாத அளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கமாண்டோ வீரர்கள், அதிவிரைவு அதிரடிப் படையினர் உள்பட 23 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களில் 48 பெண் கமாண்டோக்களும், 700 பெண் போலீசாரும் அடங்குவார்கள்.

அதே போல பம்பை முதல் சன்னிதானம் வரை உள்ள 4.5 கிலோ மீட்டர் தூரம் முழுமையாக போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படும். இந்த பகுதியில் 4 கட்டங்களாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். சபரிமலை செல்லும் அனைத்து பாதைகளும், வனப்பகுதிகளும் சிறப்பு பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட உள்ளது. இலவுங்கல், நிலக்கல், பம்பை, வலியான வட்டம், சன்னிதானம், பாண்டித்தா வளம், புல்மேடு, செறியான வட்டம், உப்புப்பாறை, கோழிக்கானம், சத்திரம் ஆகிய பகுதிகள் சிறப்பு பாதுகாப்பு மண்டலமாக இருக்கும். சபரிமலை கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் புல்மேடு வழியாகவும் செல்வார்கள். ஆனால் இந்த பகுதியில் வழக்கமாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவது இல்லை. இந்த ஆண்டு புல்மேடு பகுதியும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படுகிறது. சமூக வலைதளங்களில் சபரிமலை விவகாரம் பற்றி அவதூறு பரப்புவதை தடுக்க செல்போன் மற்றும் இணையதள இணைப்புகளை துண்டிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அசாதாரணமான சம்பவங்களை எதிர்கொள்ள சபரிமலை பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு சிறப்பு அதிகாரமும் வழங்கப்பட உள்ளது. அதே போல விடுதிகள், வர்த்தக நிறுவனங்கள், கடைகளில் அதிரடி சோதனை நடத்தி சந்தேகப்படும் நபர்களை கைது செய்யவும் போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து