முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அத்திக்கடவு - அவினாசி திட்டம் செயல்வடிவம் பெற்றுள்ளது: ஆய்வு கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பெருமிதம்

வெள்ளிக்கிழமை, 15 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

ரூ. 1000 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் தடுப்பணைகள், அத்திக்கடவு அவினாசி திட்டத்தின் முன்னேற்றம் ஆகியவை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உயர்அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு நடத்தினார். அப்போது மக்கள் இயக்கமாக நடந்து வரும் குடிமராமத்து திட்ட பணிகள் குறித்தும், அத்திக்கடவு - அவினாசி திட்டம் செயல்வடிவம் பெற்றுள்ளது குறித்தும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார். 

பொதுப்பணித் துறை கட்டிடங்கள் மற்றும் நீர்வளஆதாரத் துறை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை பொதுப்பணித் துறை அதிகாரிகளுடையஆய்வுக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன் அடிப்படையில், பொதுப்பணித் துறைசார்பாக நடைபெற்றுக் கொண்டு இருக்கின்ற பணிகள் குறித்து ஆய்வுப் பணி மேற்கொள்வதற்காக, இந்த ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்திலே, இந்த துறையின் செயலாளர் மணிவாசன் தமிழ்நாடு பாசன மேலாண்மை நவீனப்படுத்தும்திட்டத்தின் திட்ட இயக்குநர் விபு நய்யர், தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகள் சீரமைத்தல் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சத்யகோபால், மற்றும் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள தலைமைப் பொறியாளர்கள், கண்காணிப்புபொறியாளர்கள் மற்றும் செயற் பொறியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள்அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைக்கு நீர் மேலாண்மை மிக முக்கியமான ஒன்று. அந்த நீர் மேலாண்மையை சிறப்பான வகையிலே அரசு கையாள வேண்டும் என்பதற்காகத் தான் இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக்கூட்டத்தின் மூலமாக, அரசு அறிவித்த திட்டங்களில் எந்த அளவிற்கு பணி நடைபெற்று கொண்டு இருக்கின்றன. அந்தப் பணியினுடைய விவரங்கள், அதையெல்லாம் ஆராய்ந்து இந்த ஆலோசனைக் கூட்டம் மூலம் அதற்குண்டான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது. 

சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட பலதிட்டங்கள் இங்கே நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. நடந்து கொண்டு இருக்கின்றன. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், குடிமராமத்து திட்டம். இந்த குடிமராமத்துதிட்டத்தை பொறுத்தவரைக்கும், மிக சிறந்த திட்டம் என்று மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. விவசாயிகளிடத்தும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. பருவ காலங்களில் பெய்து வரும் மழைநீர் முழுவதும் சேமித்து வைக்க வேண்டும் என்பதற்காக ஒரு சிறப்பு திட்டமாக, மக்களோடு மக்கள் இயக்கமாக இதை உருவாக்கி இந்த குடிமராமத்து திட்டத்தை, கடந்த மூன்றாண்டுகள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு கொண்டு இருக்கிறது. இந்த நடப்பாண்டை பொறுத்தவரைக்கும், சுமார் 500 கோடி ரூபாயில் 1829 ஏரிகள் குடிமராமத்து திட்டத்தின் மூலமாக எடுத்துக் கொள்ளப்பட்டு, இன்றைக்கு பல ஏரிகளுடைய பணிகள் நிறைவு பெற்று இருக்கின்றன. சில இடங்களில் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. அவையெல்லாம் இந்த கூட்டத்தில் ஆய்வுசெய்யப்படுகின்றன.

அத்திக்கடவு - அவிநாசி திட்டம், மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கின்ற காலக்கட்டத்திலே கனவுக் திட்டமாகும். அந்தப் பகுதி மக்கள் எண்ணியிருந்த அந்தக் கனவு திட்டத்தை அம்மா மறைந்த பிறகு, அ.தி.மு.க. அரசு,தொடர்ந்து செயல்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்டு, அந்த திட்டம் இப்பொழுது செயல்வடிவம் பெற்று நடந்து வருகிறது. அந்தப் பணியின் தற்போதைய நிலை குறித்து ஆராயப்படஇருக்கிறது என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். இது போல பல திட்டங்கள் குறிப்பாக தடுப்பணைகள், மூன்றாண்டு கால திட்டமாக ஆயிரம் கோடி ரூபாயில் தடுப்பணைகள் கட்டப்படும் என்று அறிவித்தோம். அதன் வாயிலாக அந்தப் பணிகள் இப்பொழுது நடைபெற்று கொண்டு இருக்கின்றன. அதன் விவரத்தையும், அதே போல், நதியின் குறுக்கே, ஓடையின் குறுக்கே, தடுப்பணை கட்டுவதற்காக அறிவிக்கப்பட்ட அந்த திட்டத்தையும் எவ்வாறு நடைபெற்று கொண்டுஇருக்கிறது என்பதை எல்லாம் ஆய்வு செய்வதற்காக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று கொண்டு இருக்கிறது.

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து