முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.வினர் போட்டாபோட்டி: தமிழகம் முழுவதும் விருப்ப மனுக்கள் குவிந்தது

வெள்ளிக்கிழமை, 15 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.வினர் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை போட்டி போட்டு அளித்தனர். சென்னையில் ஐந்து இடங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் விருப்ப மனுக்களை வழங்கினர்.

தமிழகத்தில் உள்ளாட்சித்தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கிறது, இத்தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க. சார்பில் விருப்பமனுத்தாக்கல் 15, 16 தேதிகளில் அந்தந்த மாவட்டங்களில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அ.தி.மு.க. சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோர், மாவட்ட தலைமை அலுவலகங்களில் அதற்கான கட்டணங்களை செலுத்தி மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என ஏற்கனவே கட்சித் தலைமை அறிவித்திருந்தது. அதன்படி விருப்பமனு விநியோகம் நேற்று தொடங்கியது.  அ.தி.மு.க. சார்பில் போட்டியிட இன்று வரை விருப்ப மனு விநியோகிக்கப்பட உள்ளது. மேயர் பதவிக்கான விருப்பமனு கட்டணம் 25 ஆயிரம் ரூபாய், வார்டு உறுப்பினர் பதவிக்கான விருப்பமனு கட்டணம் 5 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகராட்சி தலைவர் பதவிக்கு 10 ஆயிரம் ரூபாயும், நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு 2 ஆயிரத்து 500 ரூபாயும், இதே போல் பேரூராட்சி தலைவர் பதவிக்கு 5 ஆயிரம் ரூபாயும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஆயிரத்து 500 ரூபாயும் விண்ணப்ப கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ராயபுரம் எஸ்.என் செட்டித் தெருவில் தொடங்கிய விருப்பமனு தாக்கலை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தொடங்கி வைத்தார்.  ராயபுரம் தொகுதி அ.தி.மு.க. செயலாளர் ஏ.டி.அரசு, துறைமுகம் தொகுதி ஜெயலலிதா பேரவை செயலாளர் மோகன் ஆகியோர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் விருப்பமனுக்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர், மாவட்ட செயலாளர் பாலகங்கா, முன்னாள் மாவட்ட செயலாளர் கே.எஸ்.சீனிவாசன் முன்னாள் எம்.எல்.ஏ. நீலகண்டன் ஆகியோர் மனுக்களை பெற்றனர். வடசென்னை வடக்கு, கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கொருக்குப்பேட்டை வேலன் திருமண மண்டபத்தில் விருப்பமனுக்கள் பெறப்பட்டன. அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன், மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் ஆகியோர் மனுக்களை பெற்றனர்.

தென்சென்னை வடக்கு மாவட்ட அ.தி.முக. சார்பில் ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள ஹேமமாலினி கல்யாண மண்டபத்தில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன்,கோகுல இந்திரா, ஜெ பேரவை மாநில இணைசெயலாளர் ரமேஷ், தி,நகர் எம்.எல்.ஏ. சத்யா உள்ளிட்டோர் விருப்ப மனுக்களை பெற்றனர். இதே போல் தென்சென்னை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் விருகம்பாக்கம் ராதா மஹாலில் விருப்பமனுக்கள் பெறப்பட்டன. நேற்று காலை 10 மணிக்கு விருப்பமனுக்கள் பெறும் நிகழ்ச்சி தொடங்கியது. அ.தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் திரண்டு வந்து விருப்பமனுக்களை பெற்றனர். மேயர் தேர்தலில் போட்டியிட அமைச்சர் ஜெயகுமாரின் மகன் ஜெயவர்த்தன், அமைப்பு செயலாளர் ஆதிராஜாராம், முன்னாள் எம்.பி.க்கள் வெங்கடேஷ்பாபு, எஸ்.ஆர் விஜயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. எம்.கே.அசோக், மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் மகளிர் அணி இணைச்செயலாளர் நூர்ஜகான், மயிலாப்பூர் பகுதி செயலாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் விருப்பமனுக்களை வழங்கினர்.

இதே போல் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட துறைமுகம் தொகுதியில் மோகன், குமாரி நாராயணன் எழும்பூர் தொகுதியில் பிரிதிவி ராஜன், வேளாங்கண்ணி ஆயிரம் விளக்கில் வழக்கறிஞர் சதாசிவம், புஷ்பாநகர் ஆறுமுகம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் விருப்பமனுக்களை அளித்தனர். அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட ஆர்வத்துடன் விருப்பமனுக்களை வழங்கினர். இதே போல் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் தங்களது விருப்ப மனுக்களை போட்டி போட்டுக் கொண்டு நிர்வாகிகளிடம் வழங்கினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து