முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நவாஸ் ஷெரீப் மீது காழ்ப்புணர்ச்சி இல்லை: இம்ரான்கான் சொல்கிறார்

சனிக்கிழமை, 16 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது காழ்ப்புணர்ச்சி இல்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் 7 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று, லாகூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் மருத்துவ சிகிச்சைக்காக ஜாமீன் வழங்கப்பட்டது. பாகிஸ்தானில் உள்ள அனைத்து மருத்துவ வசதிகளையும் பயன்படுத்தி நவாஸ் ஷெரீப்புக்கு சிகிச்சை அளித்து பார்த்து விட்டதாகவும், வெளிநாட்டில் சிகிச்சை பெற்றால் மட்டுமே அவரது உடல்நிலை தேறும் என்றும் மருத்துவர்கள் கூறினர். இது தொடர்பாக நவாஸ் ஷெரீப் குடும்பத்தினர் விடுத்த கோரிக்கையை ஏற்று அவர் சிகிச்சைக்காக லண்டன் செல்ல பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியது. அதன்படி கடந்த 10-ம் தேதி நவாஸ் ஷெரீப் தனது சகோதரர் ஷாபாஸ் ஷெரீப்புடன் லண்டனுக்கு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இருந்து நவாஸ் ஷெரீப்பின் பெயர் நீக்கப்படாததால் அவர் சிகிச்சைக்காக லண்டன் செல்வதில் சிக்கல் எழுந்தது. இதையடுத்து, இம்ரான் கான் தலைமையிலான அமைச்சரவை கூடி, வெளிநாடு செல்ல தடை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் இருந்து நவாஸ் ஷெரீப் பெயர் நீக்கப்பட்டது. அதே வேளையில், நவாஸ் ஷெரீப் வெளிநாடு செல்ல கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. ஆனால் நவாஸ் ஷெரீப், அரசின் இந்த நிபந்தனையை ஏற்க மறுத்து விட்டார். மேலும் இது சட்டவிரோதமானது என்றும், இம்ரான்கான் அரசு தனது உடல்நலத்தில் அரசியல் செய்வதாகவும் கூறி அவர் கடும் கண்டனம் தெரிவித்தார்.

இந்த நிலையில், பாகிஸ்தான் முஸ்லீம் லீக்  கட்சியின் குற்றச்சாட்டுக்கு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் மறுப்பு தெரிவித்துள்ளார். நவாஸ் ஷெரீப் மீது எந்த காழ்ப்புணர்ச்சியும் கிடையாது என்று தெரிவித்துள்ள இம்ரான் கான், அரசியலை விட நவாஸ் ஷெரீப்பின் உடல் நலமே முக்கியம் என்றும் நவாஸ் ஷெரீப்பின் உடல் நலனை வைத்து அவரது குடும்பம் அரசியல் செய்வது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். நிபந்தனைகளை நீக்கக் கோரி, நவாஸ் ஷெரீப் குடும்பத்தினர் நீதிமன்றம் செல்லும் பட்சத்தில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனவும் இம்ரான்கான் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து