முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி தேர்தலுக்கு முட்டுக்கட்டை போட முயற்சிக்கும் எதிரிகளின் பகல் கனவு ஒரு போதும் பலிக்காது: தென்காசி மாவட்ட துவக்க விழாவில் முதல்வர் பரபரப்பு பேச்சு

வெள்ளிக்கிழமை, 22 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

உள்ளாட்சி தேர்தலுக்கு முட்டுக்கட்டை போட முயற்சிக்கும் எதிரிகளின் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது என்றும் உள்ளாட்சி தேர்தல் நடந்தே தீரும். அதில் அ.தி.மு.க.வே வெற்றி பெறும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தென்காசி மாவட்ட துவக்கி விழாவில் பேசினார்.

புதிய மாவட்டம் உதயம்

தென்காசி புதிய மாவட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தொடங்கி வைத்தார். தென்காசி மக்களின் 33 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தமிழகத்தின் 33-வது மாவட்டமாக தென்காசி நேற்று உதயமானது. இந்த புதிய மாவட்டத்தையும் அதன் நிர்வாக பணிகளையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முறைப்படி தொடங்கி வைத்தார். விழாவிற்கு  துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம். ராஜலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைச்செயலாளர் சண்முகம் வரவேற்புரை வழங்கினார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா திட்ட விளக்க உரையாற்றினார். பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மேலாண்மை பொறியியல் துறை சார்பில் ரூ. 12.16 கோடி மதிப்பீட்டில் 6 புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், பொதுப் பணித்துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை, பள்ளி கல்வித் துறை, சுற்றுலா மற்றும் தமிழ்நாடு மின்சாரத் துறை சார்பில் ரூ. 28.67 கோடி மதிப்பில் முடிவுற்ற 45 புதிய திட்டப் பணிகளையும் முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்.

முதல்வர் பேச்சு

அப்போது பேசிய அவர், இயற்கை எழில் கொஞ்சும் தென்பொதிகை மலை பகுதியில் அமைந்துள்ள தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை தொடங்கி வைப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தனி மாவட்ட கோரிக்கையை நிறைவேற்றி வைத்துள்ளேன். 2916.11 ச.கி.மீ பரப்பளவு கொண்டுள்ள இந்த மாவட்டம் சங்கரன்கோவில், தென்காசி ஆகிய இரண்டு வருவாய் கோட்டங்களுடன், தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூர், செங்கோட்டை, ஆலங்குளம், வி.கே. புதூர், சிவகிரி, திருவேங்கடம் போன்ற 8 வருவாய் வட்டங்களுடன், 5 சட்டசபை தொகுதிகள் இந்த புதிய மாவட்டத்தில் உள்ளடங்கியுள்ளது என்று முதல்வர் தெரிவித்தார். கடையநல்லூர், தென்காசி, சங்கரன்கோவில், புளியங்குடி, வாசுதேவநல்லூர், செங்கோட்டை ஆகிய 6 நகராட்சிகளும், 9 பேரூராட்சிகளும், 7 ஊராட்சி ஒன்றியங்களும் தென்காசி மாவட்டத்தில் உள்ளது. இப்பகுதி ஆன்மீக மற்றும் சுற்றுலாதலங்களுக்கு பெயர்பெற்றது. தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில், சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோயில், குற்றாலநாதர் கோயில், திருமலை முருகன் கோயில், இலஞ்சி குமரன்கோயில், இலத்தூர் சனீஸ்வரன் ஆலயம், புளியரை தட்சிணாமூர்த்தி ஆலயம் என இப்பகுதி திருத்தலங்கள் நிறைந்து காணப்படுகிறது. சுதந்திரபோராட்ட வீரர் வாஞ்சிநாதன், பூலித்தேவன், ஒண்டிவீரன் பிறந்த மண் இந்த மாவட்டம். ராமநதி, கடனாநதி, குற்றால நீர்வீழ்ச்சி, சிற்றாறு என தண்ணீர் செழிப்பான மாவட்டமாக தென்காசி திகழ்கிறது. அம்மாவின் அருளாசியுடன் நடைபெறும் அ.தி.மு.க. ஆட்சி மக்களுக்கான நலத்திட்டப்பணிகளை விரைந்து முடிப்பதில் அதிக அக்கரையுடன் செயல்பட்டு வருகிறது. நீர் மேலாண்மையில் இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழகம் சிறந்து விளங்குகிறது. குடிமராமத்து பணியில் தமிழகத்தில் உள்ள குளம், குட்டைகள், ஏரிகள், வாய்க்கால்கள் அனைத்தும் தூர் வாரப்பட்டு மழைநீர் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதனால், விவசாயம் பெருகும், விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும் என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், தூத்துக்குடியில் இருந்து தென்காசி வரும் சாலை நெடுகிலும் உள்ள குளங்களில் தண்ணீர் பெருகி இருப்பதை நான் நேரில் பார்த்து மகிழ்ந்தேன். தொடர்ந்து விடுபட்டுபோன கிராமங்களில் உள்ள ஊரணி, குட்டை, குளங்கள் அனைத்தையும் தூர் வாரி அதிலும் மழைநீரை சேமிக்க அம்மாவின் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும். 8 ஆண்டுகால ஆட்சியில் வேளாண்மை துறையில் 100 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்து அரசு சாதனை புரிந்துள்ளது. உயர்கல்வித்துறையில் அம்மாவின் ஆட்சியில் 65 கல்லூரிகள் திறக்கப்பட்டன. தற்போது 12 அரசு கலைக்கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் 5 பாலிடெக்னிக் கல்லூரிகளும் தொடங்கப்பட்டு மாணவர்களின் கல்வியில் ஒளியேற்றப்பட்டுள்ளது. உயர்கல்வியில் இந்தியாவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்றும் முதல்வர் தெரிவித்தார்.

மேலும் உலக முதலீட்டார்கள் மாநாட்டை 2-வது முறையாக நடத்தி அதன் மூலம் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 10.54 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பையும் வழங்கி அ.தி.மு.க. ஆட்சி சாதனை புரிந்துள்ளது. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி வீசப்படும் நெகிழி எனப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதை உதாரணமாக கொண்டு இன்று நாடு முழுவதும் உள்ள மாநிலங்களும் பின்பற்றி வருவது தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது. ஒரு லட்சம் ரூபாய் மதிப்பு வரை சொத்து வைத்திருந்தாலும் முதியவர்களுக்கு ஓய்வூதிய திட்டம் வழங்கப்படும் எனும் அறிவிப்பு, வீட்டுப்பட்டா, பட்டா மாறுதல்களில் துரிதமான பணிகள், மருத்துவத்துறையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வந்தது, 6 மருத்துவக் கல்லூரிகளை தமிழகத்திற்கு மத்திய அரசிடம் இருந்து பெற்றுத் தந்தது, தாலிக்கு தங்கம், ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்கியது என மக்களின் பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து உடனடி முடிவு எடுத்து திட்டங்களை துரிதமாக செயல்படுத்துவதில் அரசு விரைந்து செயல்படுகிறது. புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டால் எளிதாக வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த முடியும். மக்களிடமும் எளிதாக அத்திட்டங்கள் சென்றடையும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

மாவட்ட பிரிப்புக்கும், தேர்தலுக்கும் சம்பந்தமில்லை

தமிழத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என்றும், உள்ளாட்சி தேர்தலுக்கும் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் முதல்வர் தெரிவித்தார்.

மேலும் உள்ளாட்சி தேர்தலுக்கு சிலர் முட்டுக்கட்டை போட முயற்சி செய்கிறார்கள். எப்படியாவது உள்ளாட்சி தேர்தலை நிறுத்த வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் செயல்பட்டு வருவதாக முதல்வர் குற்றம் சாட்டினார். எதிரிகளின் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது. என்ன நடந்தாலும் உள்ளாட்சி தேர்தல் நடந்தே தீரும். நடந்து முடிந்த இடைத்தேர்தல் போன்று உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணியே அமோக வெற்றி பெறும் என்றும் முதல்வர் தெரிவித்தார். விழா நிறைவில் 100 கோடி ரூபாய் மதிப்பில் 5 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, செல்லூர் ராஜு, வேலுமணி, கடம்பூர் ராஜு, கே.டி. ரஜேந்திர பாலாஜி, அன்பழகன், சரோஜா, ஓ.எஸ்.மணியன், விஜயபாஸ்கர், பாண்டியராஜன், நிலோபர் கபில், எம்.பி.க்கள் விஜிலா சத்யானந்த், முத்துக்கருப்பன், டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வமோகன் தாஸ்பாண்டியன், மனோகரன், நாராயணன், முருகையா பாண்டியன், முகம்மது அபுபக்கர், இன்பத்துரை, மாவட்ட செயலாளர்கள் தச்சை கணேசராஜா, கே.ஆர்.பி. பிரபாகரன், அரசுத் துறை அதிகாரிகள், அரசு முதன்மை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் இராதாகிருஷ்ணன், திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் தென்காசி மாவட்ட கலெக்டர் அருண்சுந்தர் தயாளன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து