முதல் மந்திரி ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை - உத்தவ் தாக்கரே

புதன்கிழமை, 27 நவம்பர் 2019      அரசியல்
Uddhav-Thackeray 2019 03 07

மராட்டிய மாநிலத்தின் முதல் மந்திரியாக நான் பதவி ஏற்பேன் என்று கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை என உத்தவ் தாக்கரே பேசியுள்ளார். 

சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் ஒருங்கிணைந்து மகாராஷ்டிரா முன்னேற்ற முன்னணி என்ற புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டணி சார்பில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே புதிய முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டு நேற்று முன்தினம்  இரவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

உத்தவ் தாக்கரே தனது தந்தை பால்தாக்கரே வழியில் அரசியல் அதிகாரத்துக்குள் வராமல் பின்னணியில் இருக்கவே விரும்பினார். எனவே தான் அவர் சட்ட சபையில் தேர்தலில் நின்று எம்.எல்.ஏ. கூட ஆகவில்லை. தன்னை முன் நிறுத்துவதற்கு பதில் தனது மகன் ஆதித்யா தாக்கரேயை அவர் முன் நிறுத்தி வந்தார். ஆதித்யா தாக்கரேயை முதல் மந்திரி ஆக்க வேண்டும் என்பதே அவரது கனவாக இருந்தது.

ஆனால் ஆதித்யா தாக்கரேக்கு 29 வயதே ஆவதால் அவரை முதல் மந்திரியாக ஏற்க காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் திட்டவட்டமாக மறுத்து விட்டனர். அதோடு உத்தவ்தாக்கரே முதல் மந்திரி பதவியில் இருந்தால்தான் கூட்டணி உடையாமல் 5 ஆண்டுக்கு ஆட்சியை நடத்த முடியும் என்று சரத்பவாரும், சோனியாவும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.   எதிர்பாராதவிதமாக நடந்த இந்த அரசியல் சூழ்நிலை மாற்றங்களால் உத்தவ்தாக்கரே முதல்-மந்திரி பதவியை மறுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. எனவே நெகிழ்ச்சியுடன் முதல்வர் பதவியை ஏற்பதாக அறிவித்தார்.
இது குறித்து உத்தவ் தாக்கரே கூறியதாவது:-

மராட்டிய மாநிலத்தின் முதல்-மந்திரியாக நான் பதவி ஏற்பேன் என்று கனவில் கூட நினைத்து பார்த்தது இல்லை. இதற்காக நான் சோனியாவுக்கும், சரத்பவாருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

30 ஆண்டுகளாக எங்களுடன் நண்பர்களாக இருந்தவர்கள் எங்களை புரிந்து கொள்ளவில்லை. ஆனால் 30 ஆண்டுகளாக நாங்கள் யாரை எதிரிகள் என்று எதிர்த்து அரசியல் செய்து வந்தோமே அவர்கள் நண்பர்களாக மாறி இருக்கிறார்கள். மாறுபட்ட கொள்கைகள் கொண்ட நாங்கள் ஒன்றுபட்டு இருக்கிறோம்.  இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து