முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய விடுதலை வரலாற்றில் எண்ணற்ற பெருமைகளுக்கு சொந்தக்காரர் நேதாஜி - துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் புகழாரம்

வியாழக்கிழமை, 23 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : இந்திய விடுதலை வரலாற்றில் எண்ணற்ற பெருமைகளுக்கு சொந்தக்காரர் நேதாஜி என்று துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
சென்னை ராஜ்பவனில் நடந்த நேதாஜி சுபாஸ் சந்திர போஸின் சிலை திறப்பு விழாவில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது,

  புண்ணியம் மிக்க இந்த பாரத மண்ணில் எத்தனையோ மாமனிதர்கள் பிறந்திருக்கிறார்கள் அவர்களில் சிலர் புனிதர்களாக வாழ்ந்திருக்கிறார்கள். சிலர் தலைவர்களாக உருவாகியிருக்கிறார்கள். சிலர் வாழ்க்கைக்கு வழிகாட்டிகளாக  இருந்திருக்கிறார்கள்,  சிலர்  விடுதலைப் போராளிகளாக உருவாகி, புதிய இந்தியா மலரப் பாடுபட்டிருக்கிறார்கள். பாரதத்தாயின் அந்த வீரப்புதல்வர்கள், நீடித்த புகழோடு, மக்கள் மனதிலே இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் வங்கம் தந்த சிங்கமான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இந்திய மக்களின் இதயங்களில் நீங்கா நிலை கொண்டு     இன்றைக்கும் மின்னி மிளிர்ந்து கொண்டிருக்கிறார்.

ஆங்கிலேய ஏகாதிபத்தியம் பூட்டிய அடிமை விலங்கை உடைத்து, அன்னை இந்தியாவை விடுவிப்பதற்காக, தன் உயிரை ஒரு பொருட்டாக மதிக்காமல்,  உலகம் முழுவதும் பயணம் செய்து, முதன் முதலாக இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கியவர் நேதாஜி.   அவரது பெயரைக் கேட்டவுடனே ஆங்கிலேயர்களின் அடிமனதில் அச்சம் வருகின்ற அளவிற்கு, துணிச்சலாக செயலாற்றியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.  இளைஞர்களின் இரத்த நாளங்களில் நாட்டுப் பற்றை ஊட்டக்கூடிய உணர்ச்சிகரமான பேச்சு, விடுதலை வேட்கையை தூண்டுகிற வீர முழக்கங்கள் மூலம் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கான வேள்வித் தீயை வளர்த்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.    ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தினால் வெகுண்டெழுந்த புரட்சி வீரர் நேதாஜி, தன் தாய்நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயரிடம் பணியாற்றக்கூடாது, இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காக போராட வேண்டுமென்று முடிவு செய்து, அதற்காகவே, இந்தியன் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான ஐ.சி.எஸ். தேர்வில் இந்திய அளவில் நான்காமிடம் பெற்று தேர்ச்சி அடைந்தபோதும், அதனை துச்சமாக எண்ணி தூக்கி எறிந்த துணிச்சல் மிக்க தீரர் நேதாஜி.

உலகத்தையே கதிகலங்க வைத்தவர் சர்வாதிகாரி முசோலினி. ஒரு முறை அவரிடம், நேதாஜி எப்படிப்பட்டவர் என்று ஒருவர் கேட்டாராம். அதற்கு, நேதாஜி இந்தியாவில் காலம் தவறி பிறந்து விட்டார். அவர் சரியான நேரத்தில் பிறந்திருந்தால், உலக சரித்திரத்தில் அலெக்சாண்டருக்கும், நெப்போலியனுக்கும் கூட இடம் கிடைத்திருக்காது. அப்படிப்பட்ட மாவீரன் நேதாஜி என்று முசோலினி கூறினாராம். நேதாஜி அவர்களது வீரத்திற்கு இதுவே மிக பெரிய சான்று.

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும், அலுவலகங்களிலும், ராணுவத்திலும், பள்ளி, கல்லூரிகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிற  வீர முழக்கச் சொல்லான  'ஜெய் ஹிந்த்' என்ற வார்த்தைக்கு முதன்முதலில் உயிர் கொடுத்தவர் நேதாஜி. இந்திய விடுதலை வரலாற்றில் இடம் பெற்ற எண்ணற்ற பெருமைகளுக்குச் சொந்தக்காரரான நேதாஜி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருடன் நல்ல நட்புறவோடு இருந்து, பசும்பொன் தேவரை நேசித்து வாழ்ந்த வீரத்திருமகன் ஆவார்.

தன்னுடைய கடைசி மூச்சிருக்கும் வரை, தனது வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும், தனக்காக வாழாமல் இந்திய சுதந்திரத்தை மட்டுமே நினைத்துக்கொண்டிருந்த உத்தம சீலரான நேதாஜியின் தியாகத்தை, வீரத்தை நாமும், நமது வருங்காலத் தலைமுறையினரும், என்றென்றும் நினைவு கூர்ந்திடும் வகையில் அவரது திருவுருவச் சிலை, துணை ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தெய்வப் புலவர் திருவள்ளுவர், ஆத்திச்சூடி அருளிய ஒளவைப் பிராட்டியார், தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள், சுவாமி விவேகானந்தர், பண்டித ஜவஹர்லால் நேரு, இரும்பு மனிதர் வல்லபாய் பட்டேல், முன்னாள் ஜனாதிபதி டாக்டர் இராஜேந்திர பிரசாத், டாக்டர் இராதாகிருஷ்ணன், டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம்,  மூதறிஞர் ராஜாஜி, மௌலானா அபுல்கலாம் ஆசாத்  உள்ளிட்ட பல பெரியோர்களின் திருவுருவச் சிலைகளுடன் அழகு மிளிரும் நேதாஜியின் வீரத் திருவுருவச் சிலையும் மேலும் பெருமை சேர்க்க உள்ளது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள், இந்திய தேசிய ராணுவத்திற்கு, தான் இறுதியாக ஆற்றிய உரையில், இந்தியாவின் எதிர்காலத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை தவறாக மதிப்பிட்டு விடக்கூடாது என்று வீர முழக்கமிட்டார்.  அவரது உரையை   இதயத்தில் ஏற்றி, இளைய தலைமுறையின் சக்தியை ஒன்று திரட்டி  உழைப்போம். இந்தியாவை உலகின் முதல் நாடாக, எங்கும் நிமிர்ந்து நிற்கும் வல்லரசாக மாற்றிட, பிரதமர் மோடி மேற்கொள்ளுகின்ற நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து,  வெற்றிப் பாதையில் பயணிப்போம். இவ்வாறு துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  சட்டசபை சபாநாயகர் தனபால் மற்றும் கவர்னரின் செயலாளர் ஆனந்தராவ் வி.பாட்டில், பாரதிய வித்யா பவன் சென்னை கேந்திராவின் தலைவர் என்.ரவி, இயக்குநர் கே.என்.ராமசாமி, அமைச்சர்கள் ஜெயகுமார், பென்ஜமின், பாண்டியராஜன், தலைமை செயலாளர் சண்முகம், காவல் துறை தலைவர் திரிபாதி, முன்னாள் எம்.பி. இல. கணேசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து