முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்.கில் நடக்கும் ஆசியக் கோப்பைக்கு வராவிட்டால் இந்தியாவில் நடக்கும் டி20 உலக கோப்பையை புறக்கணிப்போம்

சனிக்கிழமை, 25 ஜனவரி 2020      விளையாட்டு
Image Unavailable

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இந்த ஆண்டு செப்டம்பரில் நடக்கும் ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி பங்கேற்காவிட்டால், 2021-ம் ஆண்டு இந்தியாவில் நடக்கும் டி20 உலகக் கோப்பையில் நாங்களும் பங்கேற்க மாட்டோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வாசிம் கான் மிரட்டல் விடுத்துள்ளார்

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே அரசியல் ரீதியான உறவுகள் மோசமானதை தொடர்ந்து கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து இரு நாட்டு அணிகளுக்கு இடையே இருதரப்பு போட்டித் தொடர்கள் நடக்கவில்லை. நடுநிலையான நாடுகளில் நடக்கும் போட்டித் தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் பங்கேற்று விளையாடி வருகின்றன. பாகிஸ்தான் அணியுடன் ஏற்கனவே ஒப்பந்தம் செய்திருந்த தொடரைக் கூட பி.சி.சி.ஐ. ரத்து செய்து விட்டது. இதனால் கடந்த 12 ஆண்டுகளாக இரு அணிகளுக்கும் இடையே இருதரப்பு தொடர் இல்லாமல் இருந்து வருகிறது. இந்த சூழலில் வரும் செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ஆசியாவில் உள்ள இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன. ஆனால், கடந்த 2007-ம் ஆண்டுக்குப்பின் இந்தியா, பாகிஸ்தான் இடையே எந்தவிதமான தொடரும்  இல்லாமல் இருப்பதால், இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா என்ற கேள்வி எழுந்தது. அதற்கு ஏற்றார்போல், வரும் செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடக்கும் ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி பங்கேற்க வாய்ப்பில்லை என்று பி.சி.சி.ஐ. வட்டாரங்களும் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி வாசிம் கான் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் இந்தியா ஆசியக் கோப்பைபோட்டியில் பங்கேற்பதைத் தவிர்த்தால் என்ன செய்வீர்கள் என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், வரும் செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடக்கும் ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி பங்கேற்காமல் தவிர்த்தால், 2021-ம் ஆண்டில் இந்தியாவில் நடக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் நாங்களும் பங்கேற்க மாட்டோம். ஆசியக் கோப்பை போட்டி நடத்தும் உரிமையை நாங்கள் வங்கதேசத்துக்கு வழங்கி விட்டதாகக் கூறுவது உண்மையில்லை. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் போட்டியை நடத்தும் எங்களுக்குத்தான் வழங்கியுள்ளது, நாங்கள் எளிதாக யாருக்கும் வழங்கி விட முடியாது. அதற்கான அதிகாரமும் எங்களிடம் இல்லை. அதேசமயம், ஆசியக் கோப்பையை நடத்த இரு இடங்கள் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. எங்கள் நாட்டின் பாதுகாப்பு விஷயங்களை ஆய்வு செய்ய தென் ஆப்பிரிக்காவில் இருந்து அதிகாரிகள் பிப்ரவரி மாதம் வருகிறார்கள். அவர்கள் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், தென் ஆப்பிரிக்கா பாகிஸ்தானுக்கு பயணம் செய்து மார்ச்- ஏப்ரல் மாதத்தில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் எனத் தெரிவித்தார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து