முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் ரூ. 260 கோடியில் செயற்கை முறையில் நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் - முதற்கட்டமாக ரூ. 60 கோடி ஒதுக்கீடு செய்தது அரசு

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : நிலத்தடி நீர் குறைந்து வருவதன் எதிரொலி காரணமாக தமிழகத்தில் ரூ. 260 கோடியில் செயற்கை முறையில் நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதற்கட்டமாக ரூ. 60 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் குடிநீர், பாசன மற்றும் இதர தேவைகளுக்கு நிலத்தடி நீர் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் உள்ள 1166 பிர்காக்களில் 462 பிர்காக்களில் நிலத்தடி நீர் அதிகமாக சுரண்டப்பட்ட பகுதியாகவும், 79 பிர்காக்கள் அபாயகரமான பகுதியாகவும், 163 பிர்காக்கள் பாதி அபாயகரமான பகுதியாகவும், 427 பகுதி பாதுகாப்பானதாகவும், 35 பகுதிகளில் நிலத்தடி நீர் பயன்படுத்த முடியாத அளவுக்கு உப்புதன்மை நீர் உள்ள பகுதிகளாக மாறி உள்ளது என்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த முறை நடத்தப்பட்ட ஆய்வில் 358 பிர்காக்களில் அதிக நிலத்தடி நீர் சுரண்டப்பட்ட பகுதியாகவுவும், 105 பிர்காக்களில் மிகவும் அபாயகரமான பகுதியாகவும், 212 பிர்காக்கள் பாதி அபாயகரமான பகுதியாக இருந்தது. ஆனால், தற்போது நடத்தப்பட்ட ஆய்வில் 462 பிர்காக்கள் அதிக நிலத்தடி நீர் சுரண்டப்பட்ட பகுதியாக மாறியுள்ளது. இதை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வரும் பகுதிகளில் மழை நீர் சேகரிப்பு, செயற்கை முறையில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் திட்டங்களை அதிக நிலத்தடி நீர் சுரண்டப்பட்ட பகுதி மற்றும் மிகவும் அபாயகரமான பகுதிகளிலும் செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில், தமிழக பொதுப்பணித்துறை சார்பில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ள பிர்காக்களில் ரூ. 260 கோடி செலவில் செயற்கை முறையில் நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்து தயார் செய்யப்பட்டுள்ளது.இப்பணிகள் முழுவதும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீடு வங்கியின் நிதியை பெற்று மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முதற்கட்டமாக தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் செயற்கை முறையில் நிலத்தடி நீர் செறிவூட்டு திட்டத்துக்கு ரூ. 60 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசு செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ. 19.96 கோடி செலவில் 605 இடங்களில் போர்வெல், 99 குளங்களில் செயற்கை முறையில் நீர் செறிவூட்டும் கிணறுகள், 25 இடங்களில் சாதாரண இடங்களில் கிணறுகள், 97 போர்வெல்,25 கிணறுகள் மூலம் நிலத்தடி நீர் மட்டம் கண்காணிக்கும் கருவி பொருத்துதல் என மொத்தம் ரூ. 48.41 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

திருவாரூர் மாவட்டத்தில் 155 இடங்களில் போர்வெல் மற்றும் 25 குளங்களில் கிணறுகள், 6 இடங்களில் சாதாரண இடங்களில் கிணறுகள், 26 போர்வெல், 6 கிணறுகள் மூலம் நிலத்தடி நீர் மட்டம் கண்காணிக்கும் கருவி பொருத்துதல் என மொத்தம் 11.73 கோடி செலவில் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இதற்காக, டெண்டர் விடப்பட்டு மார்ச் முதல் வாரத்தில் இருந்து இதற்கான பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து