முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 நாளில் கர்நாடக மந்திரிசபை விஸ்தரிப்பு; முதல்வர் எடியூரப்பா

சனிக்கிழமை, 1 பெப்ரவரி 2020      அரசியல்
Image Unavailable

பா.ஜனதா மேலிடம் ஒப்புதல் வழங்கியுள்ளதால் 3 நாளில் கர்நாடக மந்திரிசபை விஸ்தரிப்பு நடைபெறும் என்று முதல்வர் எடியூரப்பா அறிவித்தார்.

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு இருந்தது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அந்த கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. அதைத்தொடர்ந்து எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா அரசு அமைந்தது.  அதன் பிறகு சட்டசபையில் காலியாக இருந்த 15 இடங்களுக்கு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 12 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றது. இந்த 12 பேரில் ஒருவரை தவிர மற்ற 11 பேரும் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளில் இருந்து பா.ஜனதாவுக்கு வந்தவர்கள். இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் அவர்களுக்கு மந்திரி பதவி வழங்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா, பிரசாரத்தில் அறிவித்தார்.

ஆனால் இடைத்தேர்தல் முடிவடைந்து 50 நாட்களுக்கு மேல் ஆகியும் மந்திரிசபை இன்னும் விஸ்தரிப்பு செய்யப்படவில்லை. இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மந்திரி பதவியை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். பா.ஜனதா மேலிடம், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் 9 பேருக்கும் பா.ஜனதாவை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 7 பேருக்கும் மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் முதல்-மந்திரி எடியூரப்பாவோ தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டி இருப்பதால் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 11 பேருக்கும் மந்திரி பதவி வழங்க ஒப்புதல் வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதை பா.ஜனதா மேலிடம் ஏற்கவில்லை. பா.ஜனதா மேலிடமும், எடியூரப்பா தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால், மந்திரிசபை விஸ்தரிப்பு பிரச்சினை முடிவுக்கு வராமல் உள்ளதாக கூறப்பட்டது. ஜனவரி மாத இறுதிக்குள் மந்திரிசபையை விஸ்தரிப்பு செய்வதாக கடந்த 24-ந் தேதி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு கர்நாடகத்திற்கு திரும்பிய எடியூரப்பா கூறினார்.  ஆனால் ஜனவரி மாதம்  நிறைவடைந்துவிட்டது. ஆனால் மந்திரிசபை விஸ்தரிப்பு நடைபெறவில்லை. இந்த நிலையில் மந்திரிசபையை விஸ்தரிப்பு செய்ய அனுமதி வழங்காததால், பா.ஜனதா மேலிடம் மீது எடியூரப்பா அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் மந்திரிசபை விஸ்தரிப்பு குறித்து ஆலோசிக்க எடியூரப்பா  டெல்லி சென்றார்.

அங்கு பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசினர். அதைத்தொடர்ந்து உள்துறை மந்திரி அமித்ஷாவை எடியூரப்பா நேற்று மாலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 25 நிமிடங்கள் நீடித்தது. இதில் மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய பா.ஜனதா மேலிடம் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த சந்திப்புக்கு பிறகு எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மந்திரிசபை விரிவாக்கம் குறித்து எங்கள் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசினேன். சுமார் 25 நிமிடம் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்தினேன். மந்திரிசபை விரிவாக்கம் செய்து கொள்ளுங்கள் என்று கூறி அவர்கள் ஒப்புதல் வழங்கினர். அவர்கள் எந்த பெயர் பட்டியலையும் வழங்கவில்லை.  நான் எடுத்து சென்ற பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கினர். இன்றே வேண்டுமானாலும் மந்திரிசபையை விரிவாக்கம் செய்து கொள்ளுங்கள் என்று கூறினர். நான் பெங்களூருவுக்கு சென்று நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் தேதியை அறிவிப்பேன். இன்னும் 3 நாட்களில் மந்திரிசபை விஸ்தரிப்பு நடைபெறும். என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து