முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வி தொடரையும் பறிகொடுத்தது

ஞாயிற்றுக்கிழமை, 9 பெப்ரவரி 2020      விளையாட்டு
Image Unavailable

ஆக்லாந்து : நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்து, தொடரையும் 0-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க்கில் நடந்தது. இந்திய அணியில் இரு மாற்றமாக முகமது ஷமி, குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சாஹல் சேர்க்கப்பட்டனர். நியூசிலாந்து அணியில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள சான்ட்னெர் மற்றும் சோதிக்கு பதிலாக மார்க் சாப்மன், வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜாமிசன் இடம் பிடித்தனர். 6 அடி 8 அங்குலம் உயரம் கொண்ட அறிமுக வீரரான ஜாமிசன் நியூசிலாந்தின் உயரமான கிரிக்கெட் வீரர் ஆவார்.

‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணிக்கு மார்ட்டின் கப்திலும், ஹென்றி நிகோல்சும் முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் (16.5 ஓவர்) குவித்து அருமையான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தனர். நிகோல்ஸ் (41 ரன்), யுஸ்வேந்திர சாஹல் வீசிய சுழற்பந்தை முட்டிப்போட்டு அடிக்க முயற்சித்து எல்.பி.டபிள்யூ. ஆனார். மற்றொரு தொடக்க வீரர் கப்தில் 79 ரன்களில் (79 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) ரன்-அவுட் ஆனார்.

மிடில் ஓவர்களில் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு, இந்திய பவுலர்கள் கொடுத்த நெருக்கடியில் மளமளவென விக்கெட்டுகள் விழுந்தன. அதாவது 55 ரன் இடைவெளியில் 7 பேர் வெளியேற்றப்பட்டனர். 197 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்து தவித்த நிலையில், நியூசிலாந்து அணிக்கு ராஸ் டெய்லரும், புதுமுக வீரர் கைல் ஜாமிசனும் கைகொடுத்தனர். ஜாமிசன் 2 சிக்சரும் பறக்க விட்டார். இதனால் நியூசிலாந்து அணி சரிவில் இருந்து மீண்டதுடன் சவாலான ஸ்கோரை எட்டிப்பிடித்தது. இவர்கள் கடைசி 5 ஓவர்களில் மட்டும் 53 ரன்கள் விளாசினர்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் சேர்த்தது. ராஸ் டெய்லர் 73 ரன்களுடனும் (74 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), ஜாமிசன் 25 ரன்களுடனும் (24 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தனர். இவர்கள் ஜோடியாக திரட்டிய 76 ரன்கள், இந்த மைதானத்தில் 9-வது விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்சமாகும்.

அடுத்து 274 ரன்கள் இலக்கை நோக்கி இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷாவும், மயங்க் அகர்வாலும் களம் புகுந்தனர். பவுண்டரியுடன் ரன் கணக்கை தொடங்கிய பிரித்வி ஷா, முதல் ஓவரில் மட்டும் 3 பவுண்டரிகளை விரட்டியடித்தார். ஆனால் இந்த உற்சாகம் அதிக நேரம் நீடிக்கவில்லை. மயங்க் அகர்வால் (3 ரன்), பென்னட்டுவின் பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற ராஸ் டெய்லரிடம் பிடிபட்டார். பிரித்வி ஷா (24 ரன்) ஜாமிசனின் பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார். அடுத்து வந்த ‘ரன் குவிக்கும் எந்திரம்’ கேப்டன் விராட் கோலியும் (15 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. அவர் டிம் சவுதியின் இன்ஸ்விங்கரில் போல்டு ஆகி ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார்.

சரியான அளவில் பந்தை பிட்ச் செய்து நியூசிலாந்து பவுலர்கள் தொடுத்த துல்லியமான தாக்குதலில் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினர். மிடில் வரிசையில் ஸ்ரேயாஸ் அய்யர் (52 ரன், 57 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) கணிசமான பங்களிப்பை அளித்தார். ஆனால் லோகேஷ் ராகுல் (4 ரன்) வந்த வேகத்தில் நடையை கட்டினார். ஒரு கட்டத்தில் 153 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை தாரைவார்த்து இந்திய அணி தள்ளாடியது. இந்த சூழலில் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும், நவ்தீப் சைனியும் இந்தியாவுக்கு நம்பிக்கை தரும் வகையில் மட்டையை சுழட்டினர். குறிப்பாக நவ்தீப் சைனியின் பேட்டிங் நம்ப முடியாத அளவுக்கு சிலிர்க்க வைத்தது. ஜேம்ஸ் நீஷத்தின் ஓவரில் பந்தை சிக்சருக்கு தூக்கிய அவர், கிரான்ட்ஹோமின் பந்து வீச்சில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரியும் ஓட விட்டார். அவர் ஆடிய விதத்தை பார்த்து நியூசிலாந்து வீரர்கள் கொஞ்சம் பதற்றத்திற்கு உள்ளானார்கள்.

கடைசி 6 ஓவர்களில் இந்தியாவின் வெற்றிக்கு 52 ரன்கள் தேவைப்பட்ட சமயத்தில், நவ்தீப் சைனி (45 ரன், 49 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), ஜாமிசனின் பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார். இதன் பின்னர் ஜடேஜா (55 ரன், 73 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) போராடிய போதிலும் பலன் இல்லை. அவர், நீஷம் வீசிய தாழ்வான புல்டாஸ் பந்தை ஓங்கி அடித்த போது, ‘லாங்-ஆப்’ திசையில் நின்ற கிரான்ட்ஹோமிடம் சிக்கினார். முடிவில் இந்தியா 48.3 ஓவர்களில் 251 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே முதலாவது ஆட்டத்திலும் வெற்றி கண்டிருந்த நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆல்-ரவுண்டராக ஜொலித்த புதுமுக வீரர் கைல் ஜாமிசன் ஆட்டநாயகன் விருதை பெற்றார். இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை 11-ம் தேதி மவுன்ட்மாங்கானுவில் நடக்கிறது.

ஸ்கோர் போர்டு

நியூசிலாந்து, கப்தில் (ரன்-அவுட்) 79, நிகோல்ஸ் எல்.பி.டபிள்யூ, (பி) சாஹல் 41, டாம் பிளன்டெல் (சி), சைனி, (பி) தாகூர் 22, ராஸ் டெய்லர் (நாட்-அவுட்) 73, டாம் லாதம் எல்.பி.டபிள்யூ, (பி) ஜடேஜா 7, ஜேம்ஸ் நீஷம் (ரன்-அவுட்) 3, கிரான்ட்ஹோம் (சி) ஸ்ரேயாஸ், (பி) தாகூர் 5, சாப்மன் (சி) அண்ட்(பி)சாஹல் 1, டிம்  சவுதி (சி)சைனி(பி)சாஹல் 3, ஜாமிசன் (நாட்-அவுட்) 25, எக்ஸ்டிரா 14, மொத்தம் (50 ஓவர்களில், 8  விக்கெட்டுக்கு) 273, விக்கெட் வீழ்ச்சி: 1-93, 2-142, 3-157, 4-171, 5-175, 6-185, 7-187, 8-197

பந்து வீச்சு விவரம்

ஷர்துல் தாகூர் 10-1-60-2, பும்ரா 10-0-64-0, நவ்தீப் சைனி 10-0-48-0, யுஸ்வேந்திர சாஹல் 10-0-58-3, ஜடேஜா 10- 0-35-1, இந்தியா, பிரித்வி ஷா (பி) ஜாமிசன் 24, மயங்க் அகர்வால் (சி) டெய்லர், (பி) பென்னட் 3, விராட்  கோலி (பி) சவுதி 15, ஸ்ரேயாஸ் அய்யர் (சி) லாதம், (பி) பென்னட் 52, லோகேஷ் ராகுல் (பி), கிரான்ட்ஹோம் 4, கேதர் ஜாதவ் (சி) நிகோல்ஸ், (பி) சவுதி 9, ஜடேஜா (சி) கிரான்ட்ஹோம், (பி) நீஷம் 55 ஷர்துல் தாகூர் (பி), கிரான்ட்ஹோம் 18, நவ்தீப் சைனி (பி) ஜாமிசன் 45, யுஸ்வேந்திர சாஹல், (ரன்-அவுட்) 10, பும்ரா (நாட்-அவுட்) 0, எக்ஸ்டிரா 16, மொத்தம் (48.3 ஓவர்களில், ஆல்-அவுட்) 251, விக்கெட் வீழ்ச்சி: 1-21, 2-34, 3-57, 4-71, 5-96, 6-129, 7-153, 8-229, 9-251

பந்து வீச்சு விவரம்

ஹாமிஷ் பென்னட் 9-0-58-2, டிம் சவுதி 10-1-41-2, ஜாமிசன் 10-1-42-2, கிரான்ட்ஹோம் 10-1-54-2, ஜேம்ஸ் நீஷம் 9.3-0-52-1.

இந்திய முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 10 ஓவர்களில் 64 ரன்களை வாரி வழங்கினார். விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. அவர் கடைசியாக ஆடிய 3 ஒரு நாள் போட்டிகளில் விக்கெட் வீழ்த்தவில்லை. தொடர்ச்சியாக 3 ஒருநாள் போட்டிகளில் அவர் விக்கெட் எடுக்காத பரிதாபம் முதல்முறையாக நிகழ்ந்துள்ளது.

“197 ரன்னுக்கு 8 விக்கெட் என்ற நிலையில் இருந்து மீண்டு நியூசிலாந்து அணி 273 ரன்கள் எடுத்து விட்டது. வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தவறிய நாங்கள் 30 முதல் 40 ரன்கள் வரை கூடுதலாக விட்டுக்கொடுத்து விட்டதாக நினைக்கிறேன். இதே போல் நாங்களும் பேட்டிங்கில் தடுமாறினோம். அப்போது ஜடேஜாவும், சைனியும் போராடி மீட்டெடுத்தனர் என்று இந்திய கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து