முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு விவகாரம்: மேஜிக் பேனா தயாரித்தவர் கைது

திங்கட்கிழமை, 17 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு விவகாரத்தில், மேஜிக் பேனாவை தரயாரித்தவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) கடந்த செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 பதவிகளுக்கான எழுத்து தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் விசாரணை நடத்தியது. விசாரணையில் அந்த தேர்வில் தவறுகள் நடந்திருப்பது உறுதியானது. அதன்படி, 99 தேர்வர்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதை டி.என்.பி.எஸ்.சி. கண்டுபிடித்தது. அவர்கள் அனைவரும் தேர்வு எழுதுவதற்கு வாழ்நாள் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தது.

தொடர் விசாரணையில், குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடு நடைபெற்றது அம்பலமானது. டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடுகள் தொடர்பாக கிட்டத்தட்ட 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இடைத்தரகர் ஜெயக்குமார் உள்பட 3 பேர் கோர்ட்டில் சரணடைந்துள்ளனர். முறைகேடு புகார்கள் தொடர்ந்து வெளிவரும் நிலையில்,  இனி வரும் காலங்களில் முறைகேடுகளை தடுக்கும் வகையில், பல்வேறு சீர்திருத்தங்களை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் தேர்வு முறைகேடு தொடர்பாக சென்னை புரசைவாக்கத்தில் மேலும் ஒருவர் பிடிபட்டுள்ளார். அவரது பெயர் அசோக் என்று தெரிய வந்துள்ளது. அவர் தேர்வு முறைகேட்டிற்காக தானாக அழியும் மை உடைய பேனாவை தயாரித்து தரகர் ஜெயக்குமாருக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.அவரிடம் மேஜிக் பேனாவை எவ்வாறு தயாரித்தார்? இதற்காக அவர் ஜெயக்குமாரிடம் எவ்வளவு பணம் பெற்றார்? முறைகேட்டிற்கு வேறு ஏதேனும் உதவி செய்துள்ளாரா? என்பது தொடர்பாக அசோக்கிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் வைத்து அசோக்கிடம் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. குரூப்-4 தேர்வில் அழியக்கூடிய மேஜிக் பேனாவை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக ஏற்கனவே டி.என்.பி.எஸ்.சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து