முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடியுரிமை திருத்த சட்டத்தை சொல்லி, மக்களை ஏமாற்றி சட்டம், ஒழுங்கை கெடுக்க எதிர்கட்சிகள் முயற்சி - சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 18 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தை சொல்லிச் சொல்லி, மக்களை ஏமாற்றி தவறான தகவலை பரப்பி, அமைதியாக உள்ள தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

2 வது நாளாக விவாதம்

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீது தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு தி.மு.க. உறுப்பினர் மனோ தங்கராஜ் பேசினார். மனோதங்கராஜ்  பேசிய போது, தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் ஏராளமாக மூடப்பட்டிருக்கின்றன என்றார். அதற்கு அமைச்சர் எம்.சி.சம்பத் பதிலளிக்கையில்: தொழிற்சாலைகள் எங்கும் மூடப்படவில்லை. உண்மைக்கு மாறான தகவலை உறுப்பினர் கூறுகிறார். சமீபத்தில் கூட ரூ.4 ஆயிரம் கோடியில் சியட் டயர் தொழிற்சாலையை முதலமைச்சர் துவக்கி வைத்தார். மேலும் சோழிங்கநல்லூரில் போர்டு நிறுவனத்தின் ரூ.700 கோடி மதிப்பீட்டில் தொழில்நுட்ப மையத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். இதுபோன்று பல்வேறு தொழிற்சாலைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்திருக்கிறார். எந்த தொழிற்சாலையும் மூடப்பட வில்லை. நோக்கியா தொழிற்சாலை ஏற்கனவே மூடப்பட்டிருந்தது. அந்த தொழிற்சாலையும் திறக்கப்பட்டு இருக்கிறது என்று பதிலளித்தார்.

பென்ஜமின் பேச்சு

அமைச்சர் பென்ஜமின் பேசும் போது, பொத்தாம்பொதுவாக உறுப்பினர் குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது. சிறு,தொழில் வளர்ச்சியில் முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி இருக்கிறார். சிறு தொழில் துவங்க ஏராளமான சலுகைகள், ஊக்கத்தை அளித்திருக்கிறார். தமிழகம் சிறுதொழிலில் வளர்ச்சி பாதையில் பீடுநடை போட்டு கொண்டிருக்கிறது என்று பேசினார்.

மனோ தங்கராஜ் பேசிய போது : அமைதி தான் உங்களது தாரக மந்திரம் என்கிறீர்கள். மத்திய அரசு எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதி காக்கிறீர்கள் என்று கூறினார்.

ஓ.எஸ்.மணியன் பதில்

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன்: மக்கள் விரோத திட்டம் எதை கொண்டு வந்தாலும், அதனை தமிழக அரசு எதிர்க்கிறது. தடுத்து நிறுத்துகிறது. நீங்கள் மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது எந்த திட்டத்தை தமிழகத்திற்கு கொண்டு வந்தீர்கள். காவிரி நடுவர் நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட நீங்கள் ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தீர்கள்? அம்மா உச்சநீதிமன்றம் சென்று போராடி அதனை மத்திய அரசிதழில் இடம் பெற செய்தார். காவிரி நிதிநீர் ஆணையம் அமைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப் போராட்டம் நடத்தி அதில் வெற்றி பெற்றார்.

உங்கள் ஆட்சியில் மாநில பட்டியலில் இருந்த கல்வி மத்திய அரசின் பட்டியலில் சேர்க்கப்பட்ட போது அதனை நீங்கள் எதிர்த்தீர்களா? சிறு வணிகத்தில் அன்னிய முதலீட்டை மத்திய அரசு கொண்டு வந்தபோது, அதனை நீங்கள் எதிர்த்தீர்களா? உங்களது பொதுக்குழுவில் எதிர்த்து தீர்மானம் போட்டுவிட்டு நாடாளுமன்றத்தில் அந்த சட்டம் வந்தபோது அதனை ஆதரித்து வாக்களித்தீர்கள். நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓட்டு போட்டோம். எந்த ஒரு சூழ்நிலையிலும் மத்திய அரசு மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டால், அதனை எதிர்த்திருக்கிறோம். தமிழக ஜீவாதார உரிமைக்கு எதிராக சட்டம் கொண்டு வந்தால், அதனை எதிர்த்த ஒரே கட்சி அ.தி.மு.க. தான் என்று கூறினார்.

பிறகு மனோ தங்கராஜ் பேசிய போது: நீட் தேர்வை மத்திய அரசு கொண்டு வந்தது. அதனை எதிர்த்து இந்த சட்டசபையில் 2 முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினீர்கள். அது என்ன ஆனது. நீங்கள் தமிழகத்தை பாதிக்கும் திட்டத்தை எதிர்க்க மறுக்கிறீர்கள். விவசாயிகளுக்கு வழங்கும் பயிர்க்கடன், வட்டி விகிதத்தை மத்திய அரசு அதிகரித்தது. அதற்கு என்ன செய்தீர்கள் என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி, அதற்கு இங்கு குரல் கொடுக்கறீர்களே. உங்கள் எம்.பி.க்கள் அதிகம் பேர் பார்லிமெண்டில் இருக்கிறார்களே. அங்கு போய் குரல் கொடுங்கள். இங்கு பேசி பிரயோஜனம் இல்லை. அங்கு போய் சொல்லுங்கள். சொல்ல வேண்டிய இடம் அது தான் என்று கூறினார்.

விஜயபாஸ்கர் பேச்சு

அமைச்சர் விஜயபாஸ்கர் பேசிய போது, நீட் தேர்வை மத்திய அரசு கொண்டு வந்தது. அப்போது மத்திய ஆட்சியில் அங்கம் வகித்தது தி.மு.க. தான். நீட் தேர்வு வருவதற்கு பிள்ளையார் சுழி போட்டவர்கள் நீங்கள். தும்பை விட்டுவிட்டு வாலை பிடிக்கிறீர்கள். மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்தது. மீத்தேன் திட்டத்தையும் கொண்டு வந்தது. இதையெல்லாம் நீங்கள் மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தீர்களே, அப்போது தட்டி கேட்டீர்களா? ஆனால் நாங்கள் தமிழக உரிமைக்காக பார்லிமெண்டையே முடக்கி இருக்கிறோம் என்றார்.

செங்கோட்டையன் பேச்சு

அமைச்சர் செங்கோட்டையன் பேசிய போது, நீங்கள் மத்திய ஆட்சியில் இருந்தபோது உர மானியம் ரத்து செய்யப்பட்ட போது வேடிக்கை பார்த்து கொண்டு தானே இருந்தீர்கள். உர விலை ஏறியதற்கு யார் காரணம்? உரம் இறக்குமதி செய்யப்பட்டது. இதன் காரணமாக ஒரு மூட்டை உரத்திற்கு ரூ.200 விலை உயர்வு ஏற்பட்டது. இதையெல்லாம் நீங்கள் வேடிக்கை பார்த்து கொண்டு தானே இருந்தீர்கள் என்றார்.

எதிர்கட்சிகள் முயற்சி

முதல்வர் பழனிசாமி பேசுகையில், நான் பேரை சொல்ல விரும்பவில்லை. ஒருவர் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் நீண்ட காலம் இருந்தார். அப்போது அவர் இலாகா இல்லாத அமைச்சராகவே இருந்தார். நாங்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெறவில்லை. நீங்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தீர்கள். எனவே தான் இந்த கேள்வி எல்லாம் எழுகிறது என்றார்.

மனோ தங்கராஜ் பேசிய போது, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று சொன்னோம். ஆனால் நீங்கள் மத்திய அரசை பகைத்து கொள்ள விரும்பவில்லை என்று பேசினார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இதையே சொல்லி சொல்லி மக்களை ஏமாற்றுகிறீர்கள். சிறுபான்மை மக்கள் யார் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்பட வில்லை. நீங்கள் மக்களை ஏமாற்றி நாடகமாடுகிறீர்கள்.

குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தை சொல்லிச் சொல்லி, மக்களை ஏமாற்றி தவறான தகவலை பரப்பி, அமைதியாக உள்ள தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன. இந்த சட்டத்தால் எங்கே பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லுங்கள். அதற்கு நான் விளக்கம் சொல்லுகிறேன் என்று சவாலாக முதல்வர் பழனிசாமி பதிலளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து