முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா தோல்வி; உலகம் ஒன்றும் முடிந்து விடவில்லை: விராட் கோலி பேட்டி

திங்கட்கிழமை, 24 பெப்ரவரி 2020      விளையாட்டு
Image Unavailable

வெலிங்டன் : டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில் உலகம் ஒன்றும் முடிந்து விடவில்லை என விராட் கோலி பேட்டியளித்து உள்ளார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் கடந்த 21ந்தேதி தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி களம் இறங்கி விளையாடிய இந்திய அணி தேனீர் இடைவேளையின் போது முதல் இன்னிங்சில் 55 ஓவர்களில் 5 விக்கெட்டுகளுக்கு 122 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது ரஹானே 38 ரன்களுடனும் (122 பந்து, 4 பவுண்டரி), ரிஷாப் பண்ட் 10 ரன்களுடனும் (37 பந்து) களத்தில் இருந்தனர். அதன் பிறகு மழை கொட்டியதால் அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது.

தொடர்ந்து நேற்று முன்தினம் 2வது நாள் ஆட்டம் நடந்தது. அதன் முடிவில் இந்திய அணி 68.1 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியின் சார்பில் டிம் சவுதி, கைல் ஜாமிசன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளும், டிரன்ட் போல்ட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் நியூசிலாந்து அணியின் சார்பில் டாம் லாதம், டாம் பிளண்டெல் ஆகியோர் களமிறங்கி விளையாடினர். அந்த அணியில் அதிக அளவாக வில்லியம்சன் (89), டெய்லர் (44) ரன்களில் ஆட்டமிழந்தனர். லாதம் (11), பிளண்டெல் (30), நிக்கோல்ஸ் (17) ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அந்த அணி 2வது நாள் ஆட்டநேர முடிவில் 71.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்தது. 2வது நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 51 ரன்கள் முன்னிலையில் இருந்தது.

இதனை அடுத்து நேற்று 3வது நாள் ஆட்டம் தொடர்ந்தது. இதில், நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 100.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 348 ரன்கள் குவித்தது. இந்திய அணியை விட நியூசிலாந்து அணி 183 ரன்கள் முன்னிலையில் இருந்தது.

இதன்பின் இந்திய அணி 2வது இன்னிங்சை விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் அரை சதம் (58) விளாசினார். எனினும் பிருத்வி ஷா (14), புஜாரா (11) மற்றும் கோலி (19) ரன்களில் வெளியேறினர்.

தொடர்ந்து இந்திய அணி 65 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்திருந்தது. நேற்றைய 3வது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 39 ரன்கள் பின்தங்கி இருந்தது.

இதன்பின்னர் இன்று 4வது நாள் ஆட்டம் நடந்தது. இதில், ரஹானே (29), விகாரி (15), பண்ட் (25), அஸ்வின் (4), இஷாந்த் சர்மா (12), பும்ரா (0) ரன்களில் வெளியேறினர். இதனால் 81 ஓவர்கள் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் எடுத்திருந்தது. முகமது சமி (2) ரன்களுடன் களத்தில் நின்றார்.

இதனை அடுத்து நியூசிலாந்து அணி 9 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி 2வது இன்னிங்சை விளையாடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான லாதம் (7), பிளண்டெல் (2) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 1.4 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து 9 ரன்களை சேர்த்தது. அந்த அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்றது. 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, நாங்கள் நல்ல முறையில் விளையாடவில்லை என அறிவோம். ஆனால் மிக சிறந்த ஆட்டம் வெளிப்பட வேண்டும் என மக்கள் நினைத்து இருந்தால், அதற்கு எங்களால் ஒன்றும் செய்ய முடியாது.

சிலர், உலகம் முடிந்து விட்டது என நினைக்கலாம். ஆனால் அப்படி எதுவும் இல்லை. எங்களுக்கு, கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு. அதில் நாங்கள் தோற்றுள்ளோம். தொடர்ந்து முன்னேறி செல்வோம். எங்களுடைய தலை உயர்ந்தே இருக்கும் என்று பேட்டியில் கூறியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து