முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கழகத்தினர் தேர்தல் நேரத்தில் தான் தங்களது உண்மையான விசுவாசத்தை காண்பிக்க வேண்டும் பெரியகுளத்தில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 15 மார்ச் 2020      தேனி
Image Unavailable

தேனி - தேனி மாவட்டம், பெரியகுளத்தில் நகர்மன்றஉறுப்பினர்களுக்கான உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் பொன்னுப்பிள்ளை தலைமை தாங்கினார். மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன்  முன்னாள் எம்.பி ஆர்.பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியகுளம் நகர செயலாளர் என்.வி.ராதா வரவேற்றார். இக்கூட்டத்தில் கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் நகர்மன்ற உறுப்பினர் உள்ளிட்ட உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனைகளை வழங்கி சிறப்பித்தார். அவர் பேசும்போது  பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி தேர்தல் விரைவில் வர இருக்கின்றது. நடந்து முடிந்த ஊராட்சி மற்றும் ஒன்றியங்களுக்கான தேர்தலில் நாம் சிறப்பாக செயல்பட்டு பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். பெரியகுளம் நகராட்சி பகுதியானது எப்பொழுதும் கழகத்தின் கோட்டையாக திகழ்ந்து வந்திருக்கின்றது. நமது இயக்கம் உருவான காலத்திலிருந்து இயக்கத்திற்காக, கழக வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட நமது கழக முன்னோடிகளுக்கு நன்றி கடன்பட்டவர்களாக நாம் இருக்கின்றோம்.  புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவி அம்மா அவர்களும் எந்த நோக்கத்திற்காக இந்த இயக்கத்தை உருவாக்கினார்களோ அந்த நோக்கம் நிறைவேறியிருக்கிறது. மக்களால் நான், மக்களுக்காவே நான் என்று எண்ணற்ற மக்கள் திட்டங்களை செயல்படுத்திய புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு பரிசாக  32 ஆண்டுகளுக்கு பின் ஆண்ட கட்சிக்கு தொடர்ந்து  மீண்டும் ஆளும் உரிமையை தமிழக மக்கள் கொடுத்தனர்.  நமது கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் என்று கழகத்தின் உயர்ந்த நிலையை அடைய  அடிப்படை ஆதாரமாக விளங்குவது பெரியகுளம் நகர் தான் என்பதை நினைத்து நான் என்றும் பெருமை கொள்வேன். 1996ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் உள்ள நகராட்சிகளில் 8 நகராட்சிகளில் மட்டுமே கழகம் வெற்றி பெற்றது. அதில்  நகர்மன்ற தலைவராக என்னை பெரியகுளம் நகர மக்கள் வெற்றி பெற செய்தனர். அதனை தொடர்ந்து 2001ல் பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் பொறுப்பேற்றேன். பின்னர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டபோது என் மீது நம்பிக்கை வைத்து புரட்சித்தலைவி அம்மா அவர்கள் என்னை முதல்வராக்கினார். பெரியகுளம் தொகுதியில் 2 முறையும், போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் இருமுறையும் வெற்றி பெற்றுள்ளேன்.  இதற்கெல்லாம் அடிப்படை காரணம் பெரியகுளம் நகர் கழகத்தினர் மற்றும் பொதுமக்களே ஆகும். வரும் உள்ளாட்சி தேர்தலில் பெரியகுளம் நகரில் உள்ள 30 வார்டுகளிலும் நமது கழகம் சார்பில் போட்டியிட ஒவ்வொரு வார்டுக்கும் பலர் விருப்ப மனு கொடுத்திருக்கின்றீர்கள். அனைவரும் போட்டியிட தகுதி உள்ளவர்களாக இருந்தபோதிலும் அவர்களில் ஒரு வார்டுக்கு ஒருவருக்கு தான் கழகம் சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும். அப்படி வாய்ப்பு கிடைப்பவருக்கு அந்தந்த வார்டு கழக பொறுப்பாளர்கள், தொண்டர்கள் தங்களது கருத்துவேறுபாடுகளை மறந்து அவருக்கு  உறுதுணையாக இருந்து பொதுமக்களிடம், வாக்காளர்களிடம் சென்று புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி ஆகியோரின் வெற்றி சின்னமாம் இரட்டை இலை சின்னத்திற்கு  வாக்கு சேகரித்து அவரது வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும்.   கழகத்தினர் தங்களது உண்மையான விசுவாசத்தை காண்பிக்கும் நல்ல நேரம் எது என்று சொன்னால் அது  தேர்தல் களம் தான். கழகத்தினர் தலைவராக, பொறுப்பாளர்களாக, தொண்டராக இருந்தாலும் நமது கழக வேட்பாளரின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பது தான் கழகத்திற்கு நாம் செய்யும் உண்மையான விசுவாசமாகும். நமது கழகம் இன்றும் உயிரோட்டமாக இருப்பதற்கும், ஆலமரமாக இருப்பதற்கும் புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவி அம்மா அவர்களும் 47 ஆண்டுகாலம் போராடி, பல சோதனைகளை கடந்து  எந்த கொம்பாதி கொம்பனாலும் அசைக்க முடியாக எஃகு கோட்டையாக மாற்றி அரும்பணி ஆற்றியது தான். அதன் காரணமாக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் 10 ஆண்டு காலம் முதல்வராகவும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 17 ஆண்டுகாலம் முதல்வராகவும், தற்போது நடைபெறுகின்ற அம்மாவின் அரசை தலைமையேற்றிருக்கின்ற எடப்பாடி பழனிசாமி 3 ஆண்டுகாலம் முதல்வராகவும் என 30 ஆண்டுகாலம் நமது கழகம் மக்கள் சேவையாற்ற தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கின்றது. தமிழகத்தில் 30 ஆண்டுகாலம் ஆளும் பொறுப்பை பெற்ற ஒரே கட்சி நமது கழகம் மட்டுமே என்ற பெருமையை புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியும் நமக்கு பெற்று தந்திருக்கின்றனர். நமது இயக்கத்தில் சாதாரண தொண்டராக இருப்பதே பெருமை என்ற நிலையை புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியும் ஏற்படுத்தியிருக்கின்றனர். இவற்றையெல்லாம் நாம் மனதில் நிறுத்தி வீறு கொண்டு எழும் சிப்பாயாக நமது கழக தொண்டர்கள் செயல்பட்டு நமது கழகத்தின்  சிறப்பான வெற்றியை உறுதி செய்திட உழைத்திட வேண்டும் என்றார். மேலும் ஒவ்வொரு வார்டுக்கும் கழகத்தின் சார்பில் போட்டியிட விருப்பமனு கொடுத்தவர்கள் தங்களது வெற்றி வாய்ப்பு குறித்து தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்று சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் சோலைராஜ், மாவட்ட இணை செயலாளர் மஞ்சுளாமுருகன், மாவட்ட துணை செயலாளர்கள் முறுக்கோடை ராமர், வசந்தாநாகராஜ்,  பெரியகுளம் ஒன்றிய செயலாளர்கள் செல்லமுத்து, அன்னபிரகாஷ், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அபுதாஹீர்,  மாவட்ட பாசறை செயலாளர் நாராயணன், நகர துணை செயலாளர் அப்துல்சமது, மாவட்ட பிரதிநிதிகள் அன்பு, அன்புசெல்வன், விவசாய பிரிவு கண்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் கள்ளிப்பட்டி சிவக்குமார், கீழவடகரை ஊராட்சி மன்ற துணைதலைவர் ராஜசேகர், நகர மகளிர் அணி நிர்வாகிகள் சரஸ்வதி, இந்திரா மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து