முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு வீரர்களை அனுப்ப மாட்டோம் - கனடா, ஆஸ்திரேலியா அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 24 மார்ச் 2020      விளையாட்டு
Image Unavailable

சிட்னி : கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை அனுப்ப மாட்டோம் என கனடா மற்றும் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. அமெரிக்க நீச்சல் சங்கம், நார்வே ஒலிம்பிக் சங்கம், பிரான்ஸ் நீச்சல் சங்கம், அமெரிக்க தடகள சம்மேளனம், உலக தடகள சம்மேளனம் ஆகியவை ஒலிம்பிக் போட்டியை தள்ளிப் போட வேண்டும் என்று ஏற்கனவே வற்புறுத்தி இருந்தன.

இந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக ஜூலை 24-ம் தேதி தொடங்க இருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கனடா அணி பங்கேற்காது என்று கனடா ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் கமிட்டி ஆகியவை அறிவித்துள்ளன. அத்துடன் இந்த போட்டியை ஒரு ஆண்டுக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளன. ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கும் முதல் நாடு கனடாவாகும்.

இது குறித்து கனடா ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் கமிட்டி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கனடா வீரர்கள் மற்றும் தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் மற்றும் அரசு ஆகியவை இணைந்து டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிக்கு கனடா அணியை அனுப்ப வேண்டாம் என்று எடுத்து இருக்கும் கடினமான முடிவுக்கு நாங்கள் பக்கபலமாக இருப்போம். அத்துடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை ஒரு ஆண்டுக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைத்தால் அதனை மீண்டும் நடத்துவதற்கான முழு உதவிகளையும் அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அதேநேரத்தில் இந்த போட்டியை தள்ளி வைப்பதால் உருவாகும் சிக்கல்களையும் நாங்கள் உணர்ந்து இருக்கிறோம். வீரர், வீராங்கனைகளின் நலன் மற்றும் உலக சமூகத்தினரின் சுகாதாரத்தையும், பாதுகாப்பையும் விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது வேறு எதுவுமில்லை.

இது வீரர்களின் நலன் சார்ந்தது மட்டுமல்ல. இது பொது சுகாதாரம் சம்பந்தப்பட்ட விஷயமாகும். இந்த போட்டிக்காக வீரர்கள் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டால் அவர்களுக்கு மட்டுமின்றி அவர்களுடைய குடும்பம் மற்றும் கனடா மக்களும் பாதிப்பை சந்திக்க வேண்டியது வரலாம். கனடா அரசு அறிவித்துள்ள பொது சுகாதார அறிவுரைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்குடன் ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைக்கும் முடிவை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலும், சர்வதேச பாரா ஒலிம்பிக் கவுன்சிலும் எடுக்கும் என்று நம்புகிறோம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஆஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டி கூட்டம் சிட்னியில் டெலிகான்பரன்ஸ் மூலம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், உலகளவில் தற்போது நிலவும் இக்கட்டான சூழ்நிலையில் ஆஸ்திரேலிய அணியை டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப வேண்டாம் என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உலகம் முழுவதும் நிலவும் கடினமான சூழ்நிலையில் ஆஸ்திரேலிய அணியை ஒரு இடத்தில் ஒன்று கூட வைக்க முடியாது. வீரர்கள் தங்களது சொந்த நலனுக்கும், தங்களை சுற்றி உள்ளவர்களின் நலனுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியமானதாகும். இந்த தருணத்தில் வீரர்கள் அனைவரும் வீடு திரும்புவதுதான் சரியானதாக இருக்கும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து