முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

8 தமிழர்களை சுட்டுக்கொன்ற சிங்கள ராணுவ வீரர் விடுதலை: அதிபர் கோத்தபய நடவடிக்கை

சனிக்கிழமை, 28 மார்ச் 2020      உலகம்
Image Unavailable

இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின்போது ஈவிரக்கமின்றி 5 வயது குழந்தை உள்ளிட்ட 8 தமிழர்களை சுட்டுக் கொன்ற சிங்கள ராணுவ வீரர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே 1983-ம் ஆண்டு தொடங்கி 2009-ம் ஆண்டு வரை உள்நாட்டுப் போர் நடந்தது. இந்த உள்நாட்டுப் போரின்போது, 2000-ம் ஆண்டு, டிசம்பர் 19-ந் தேதி யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் 5 வயது குழந்தை உள்ளிட்ட தமிழர்களை சிங்கள ராணுவ வீரர் சுனில் ரத்நாயகா சுட்டுக்கொலை செய்தார். இது தொடர்பாக சுனில் ரத்நாயகா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை கொழும்பு உயர்நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. விசாரணை முடிவில் அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்ட நிலையில், மரண தண்டனை விதித்து 2015-ம் ஆண்டு தீர்ப்பு அளிக்கப்பட்டது.இந்த தீர்ப்பை இலங்கை சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு உறுதி செய்து உத்தரவிட்டது. அவர், கொழும்பு வெலிக்கடை சிறையில் மரண தண்டனை கைதியாக இருந்து வந்தார். இந்த நிலையில், இலங்கையில் கொரோனா வைரஸ் பரவி வருகிற நிலையில், சுனில் ரத்நாயகாவை விடுதலை செய்யுமாறு அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார். இதுபற்றி அவரது ஊடக பிரிவு செய்திதொடர்பாளர் கூறும் போது, சிறையில் இருந்து சுனில் ரத்நாயகாவை விடுதலை செய்யுமாறு நீதித்துறைக்கு அதிபர் அறிவுறுத்தி உள்ளார் என்று குறிப்பிட்டார். இதையடுத்து அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு விட்டார்.

இலங்கையில் நடந்த உள்நாட்டுப்போரில், 8 தமிழர்களை கொன்று குவித்து போர்க்குற்றம் செய்த ஒருவரை அதிபர் கோத்தபய ராஜபக்சே மன்னித்து விடுதலை செய்திருப்பது, உலகமெங்கும் வாழ்கிற தமிழர்கள் மத்தியில் மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது.இந்த செயலுக்கு இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து