முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளி மாநில தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, இருப்பிட வசதிகளை : நிறுவனங்களே செய்ய வேண்டும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2020      தமிழகம்
Image Unavailable

வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, இருப்பிட வசதிகளை நிறுவனங்களே செய்ய வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அம்மாவின் அரசு கொரோனா வைரஸ் நோய் தொற்றைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.  மக்களின் நடமாட்டத்தை குறைத்து, நோய் தொற்று பரவுவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துவரும் அதே வேளையில், பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம், அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கவும் அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கீழ்க்காணும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அவை வருமாறு:-

இதர மாநிலங்களை சார்ந்த தொழிலாளர்களுக்கு தேவையான இருப்பிட வசதி, உணவு வசதி மற்றும் மருத்துவ வசதிகள் அனைத்தும் முன்பு வேலை பார்த்த நிறுவனங்களே தொடர்ந்து ஏற்பாடு செய்ய வேண்டும். இதை மாவட்ட கலெக்டர்கள் உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.  தொழிலாளர்கள் தற்போதுள்ள இருப்பிடம் நெருக்கடியாக இருப்பின், மாற்று தங்கும் வசதி ஏற்படுத்தித் தர உத்தரவிடப்பட்டுள்ளது. வெளி மாநிலத்தை சார்ந்த தொழிலாளர்கள் சிலர், அவர்கள் முன்பு பணியிலிருந்த இடங்களில்  இருந்து வெளியேறி இதர நகரங்களுக்கோ, ரயிலில் பயணம் மேற்கொள்ள ரயில் நிலையங்களுக்கோ வந்து வெளியில் இருந்தால், அத்தகைய தொழிலாளர்களை தற்காலிக முகாம்களில் தங்க வைத்து, உணவு மற்றும் மருத்துவ வசதி செய்து தருமாறும் மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளி மாநில தொழிலாளர்களுக்கான உணவு, தற்காலிக இருப்பிடம், மருத்துவ வசதிகள் மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. வெளி மாநிலத்தை சார்ந்த தொழிலாளர்களின் தேவையை அறிந்து அவர்கள் தங்குமிடங்களில் இருக்கும் வசதிகளை மேம்படுத்தும் முகமாக, மாநிலத்தில் உள்ள வெளி மாநிலத்தை சார்ந்த அமைப்புகளின் தலைவர்களோடு ஒருங்கிணைந்து செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, பல்வேறு பணிகளை ஒருங்கிணைந்து செயல்படுத்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் கொண்டு ஒன்பது சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.  இதன் தொடர்ச்சியாக, வெளி மாநிலத்திலிருந்து இங்கு தங்கியுள்ள தொழிலாளர்கள் மற்றும் வெளி மாநில மாணவர்களின் நலனை ஒருங்கிணைக்கவும், முதியோர், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதுடன், அத்தியாவசிய பொருட்கள் அவர்களுக்கு கிடைக்கும் வகையில் கண்காணிக்கவும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் கொண்டு இரு தனி குழுக்கள் கூடுதலாக அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மாத இறுதியில் சம்பளம் வழங்குவதை உறுதி செய்ய, பள்ளி மற்றும் கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளப் பட்டியலை தயாரிக்க, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் இரண்டு அல்லது மூன்று ஊழியர்களுக்கு மட்டும் மார்ச் 30, 31 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய மூன்று நாட்களில் மாவட்ட கலெக்டர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மூலம் சிறப்பு அனுமதி அளிக்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும், கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக மாவட்ட கலெக்டரின் தலைமையில் கீழ் பேரிடர் மேலாண்மை சட்டப்படி, தொழில் வர்த்தக சபை , தனியார் மருத்துவமனைகளின் நிருவாக இயக்குநர்கள், மருத்துவ வல்லுநர்கள், மருந்தக தயாரிப்பாளர்கள், வேளாண்மை மற்றும் கால்நடைப் பராமரிப்பு, மீன்வளம் ஆகிய துறைகளின் அரசு மற்றும் தனியார் துறையை சார்ந்த முகவர்கள், உணவுத் தயாரிப்பாளர்கள், அதன் விநியோகஸ்தர்கள், அரசுசாரா அமைப்பினர், நுகர்வோர் பிரதிநிதிகள் ஆகியோர்களை உறுப்பினர்களாகக் கொண்டு நெருக்கடிகால மேலாண்மைக் குழு ஒன்று அமைக்க   ஆணையிடப்பட்டுள்ளது. 

கூட்டுறவு சங்கங்கள், வாகனங்கள் மூலம் அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகளை தேவையான இடங்களுக்கு எடுத்துச் சென்று  சமூக விலகலை பின்பற்றி பொருட்களை விநியோகிப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா நோய் சமூக பரவலாக மாறுவதைத் தடுக்க, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளானவர்களின் சுற்று வட்டார பகுதிகள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக’வரையறுக்கப்பட்டு தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகள் சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம்  கடந்த இரண்டு நாட்களாக மேற்கொள்ளப்படுகிறது.  இப்பகுதிகளில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவு வரையுள்ள பகுதி முழுவதும் நோய்க்கான அறிகுறிகள் குறித்து வீடுகள் தோறும் ஆய்வு செய்து கண்காணிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. முதியோர்கள், சர்க்கரை நோயாளிகள், உயர் இரத்த அழுத்த நோயாளிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்களை ஒவ்வொரு குடும்பமும் தாங்களே முன்வந்து அவர்களை தனிமைப்படுத்திக் கொண்டு, வீட்டில் உள்ள மற்ற குடும்ப நபர்கள் தொடர்பில் இல்லாமல் பார்த்துக்கொண்டு, நோய் தொற்றிலிருந்து அவர்களை காப்பாற்றி பாதுகாக்கும்படி  கேட்டுகொள்ளப்படுகிறது.

வருகின்ற இரண்டு மாதங்களில் பிரசவிக்க உள்ள சுமார் 1.5 லட்சம் தாய்மார்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை குறித்து தனி கவனம் செலுத்துமாறு மருத்துவ அலுவலர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள். அவர்களுக்கு தேவையான உதவிக்கு 102, 104 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். தீவிர சுவாசக் கோளாறுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரையும் கண்காணிக்குமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகள், இத்தகைய நோய் உள்ளவர்கள் குறித்து சுகாதாரத் துறைக்கு தெரிவிக்க வேண்டும். மாநிலத்தில் பெரும்பான்மையான பகுதிகளில் பொருட்கள் வாங்கும் போது சமுதாய விலகல் கடைபிடிக்கப்பட வேண்டும் என்ற அறிவுரை தொடர்ந்து அரசால் வலியுறுத்தப்பட்டு வருகிறது. மாநிலத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் சமுதாய விலகல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், சில இடங்களில், குறிப்பாக மீன் அங்காடி, இறைச்சிக் கடை மற்றும் காய்கறி கடைகளில் இது முழுமையாகக் கடைபிடிக்கப்படுவதை கடுமையாக செயல்படுத்துமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து