முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா வைரஸ் : சமூக பரவலை தடுக்க மிகத்தீவிரமாக போராடுகிறோம்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

திங்கட்கிழமை, 30 மார்ச் 2020      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் கொரோனா வைரசின் 3 - ம் கட்டமான சமூக பரவலை தடுக்க தீவிரமாக போராடி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள 67 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.சுமார் 50 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள். சுமார் 200 பேர் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். கொரோனா வைரஸ் தமிழகத்தில் மேலும் பரவுவதை தடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளார். பல்வேறு குழுக்கள் அமைத்து கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.மேலும் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களை உறுப்பினர்களாக கொண்ட நெருக்கடி கால மேலாண்மை குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. அதுபோல தமிழகத்தில் இருக்கும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு, இருப்பிட வசதிகளும் செய்து கொடுக்க 2 தனிக் குழுக்களை தமிழக அரசு அமைத்துள்ளது.

இதற்கிடையே கொரோனா வைரஸ் பாதிப்புடன் இருக்கும் 10 மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 1½ லட்சம் கர்ப்பிணி பெண்கள் சிகிச்சைக்கு தனி கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளும் கொரோனாவை தடுக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. இதை தவிர 20 லட்சம் முகக்கவசங்கள், 1,200 செயற்கை சுவாச கருவிகள் வாங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகம் கொரோனா வைரஸ் பாதிப்பில் 2 - வது கட்டத்தில் உள்ளது. அடுத்தக்கட்டத்துக்கு அது சென்று விடக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு முழுவதும் மக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது முதல் கட்டமாக 10 லட்சம் பேருக்கு சோதனைகள் நடந்து வருகிறது. இந்த பணிகளில் 10 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 11 மாவட்டங்களில் இந்த தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-

தமிழகம் கொரோனா வைரஸ் பாதிப்பில் 2-வது நிலையில் உள்ளது. இந்த 2 - வது நிலையுடன் கொரோனா வைரசை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. கொரோனா வைரசின் 3 - வது கட்டம் என்பது சமூக பரவலாகும். சமூகத்தில் பரவ ஆரம்பித்து விட்டால் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவது கஷ்டமாகும். ஆகையால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் சமூக பரவல் நிலைக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக நாங்கள் தீவிரமாக போராடி வருகிறோம்.கொரோனா வைரசை தமிழகத்தில் வேகமாக பரவுவதை தடுப்பதற்கான எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை ஒரே ஒருவருக்குத்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு எப்படி வந்தது என்பதை கண்டுபிடிக்க இயலவில்லை. மற்ற அனைவரது நோய் பரவலையும் கண்டுபிடித்து தனிமைப்படுத்தி உள்ளோம்.தற்போது கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்கள் வாழும் இடங்களில் இரட்டிப்பு கண்காணிப்பு போடப்பட்டுள்ளது.மேலும் புதிதாக யாருக்காவது கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பதை கண்டுபிடிக்கவும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க உதவியாக இருக்கும்.பிப்ரவரி மாதம் 2-வது வாரத்துக்கு பிறகு வெளிநாடுகளில் இருந்து வந்த அனைவரும் தீவிர விசாரணைக்கும், கண்காணிப்புக்கும் உட்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் சாதாரண நிலையில் இருந்தாலும் 28 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீவிர மருத்துவ பரிசோதனை காரணமாக கொரோனா வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. மற்ற மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகமாக உள்ளது. ஆனால் நாம் எடுத்துள்ள நடவடிக்கைகள் காரணமாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் தடுக்கப்பட்டு உள்ளது.இந்த நடவடிக்கைகள் தவிர முன்எச்சரிக்கையாகவும் தமிழக அரசு பல்வேறு பணிகளை செய்துள்ளது. மருத்துவ உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. ஓமந்தூரார் மருத்துவமனை கொரோனா வைரஸ் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டு உள்ளது. அதுபோன்று தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் மருத்துவ உள்கட்டமைப்பு வெற்றிகரமாக மேம்படுத்தப்பட்டு உள்ளது. மருத்துவ பரிசோதனை மையங்களும் அதிகரிக்கப்பட்டு உள்ளன. தமிழக அரசு செய்துள்ள சிறப்பான மருத்துவ திட்டங்கள் காரணமாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிக உயர்ந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் மூலம் நோயாளிகள் வேகமாக குணம் அடைந்து வருகிறார்கள்.தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களில் ஒருவர் கூட தீவிர சிகிச்சை பிரிவில் இல்லை. சென்னை பம்மலில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 73 வயது பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் நன்றாக குணமாகி வருகிறார். தமிழகத்தை பொறுத்தவரை எத்தகைய சூழ்நிலை வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. நீண்டகால நடவடிக்கையாக இருந்தாலும் அதை சமாளிப்பதற்கான அனைத்து வசதிகளும் தமிழக அரசிடம் உள்ளது. இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து