முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

30 நிமிடத்தில் கொரோனா பரிசோதனை முடிவு தெரிந்துவிடும் : ஒரு லட்சம் ரேபிட் உபகரணங்கள் வாங்குவதற்கு தமிழக அரசு ஆணை: முதல்வர் எடப்பாடி பேட்டி

திங்கட்கிழமை, 6 ஏப்ரல் 2020      தமிழகம்
Image Unavailable

ஒரு லட்சம் துரித ஆய்வு உபகரணங்கள் வாங்குவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இந்த கருவி கிடைத்ததும் 30 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை முடிவு வெளியாகிவிடும் என்றும் முதல்வர் தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா ஆய்வகங்கள் எண்ணிக்கை 17 ஆக, இருக்கிறது. மேலும் 21 ஆய்வகங்கள் துவங்க தயார் நிலையில் உள்ளன. மத்திய அரசு அனுமதி கொடுத்ததும் 38 ஆய்வகங்கள் தமிழகத்தில் செயல்படப் போகிறது. முடிதிருத்துவோர், சலவை தொழிலாளர் என அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

கலெக்டர்களுடன் ஆலோசனை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச்செயலாளர் சண்முகம், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முதல்வர் பேட்டி

கூட்ட முடிவுக்குப் பின்னர் பத்திரிகையாளர்களுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா தொற்று இந்தியாவில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் இதனை தடுக்க அரசு முழு வீச்சுடன் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தி உள்ளேன். இன்றும் ஆலோசனை நடத்தினேன். அரசு சார்பில் கொரோனாவை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலெக்டர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினோம். அனைத்து கலெக்டர்களும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

571 பேருக்கு பாதிப்பு

இன்று வரை தமிழகத்தில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 538 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 90 ஆயிரத்து 541 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். 10 ஆயிரத்து 814 பேருக்கு 28 நாள் வீட்டு கண்காணிப்பு முடிந்து விட்டது. தமிழகத்தில் 621பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதுவரை தமிழகத்தில் 6 பேர் பலியாகிவிட்டனர். தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் 11 ம், தனியாரிடம் 6 பரிசோதனை மையங்களும் உள்ளன. இதுதவிர மேலும் 21 ஆய்வகங்கள் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருக்கிறோம். இதனையும் சேர்த்து மொத்தம் 38 ஆய்வகங்கள் செயல்படும் நிலை இருக்கும். இதன் மூலம் வேகமாக துரிதமாக பரிசோதனை நடக்கும். 3,371 வெண்டிலேட்டர்கள் இப்போது உள்ளன. தேவையான முக கவசங்களும் மருத்துவ உபகரணங்களும் உள்ளன.மேலும் 2 ஆயிரத்து 500 வெண்டிலேட்டர்கள் கொள்முதல் செய்ய இன்று ஆர்டர் கொடுத்துள்ளோம்.

ரேபிட் சோதனை உபகரணங்கள்

ரேபிட் சோதனை உபகரணங்கள் ஒரு லட்சம் எண்ணிக்கையில், வாங்குவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. துரிய ஆய்வு கருவி கிடைத்ததும் 30 நிமிடங்களில் பரிசோதனை முடிவு வெளியாகிவிடும். அதன் பிறகு வேக வேகமாக பரிசோதனை முடிவுகள் வெளியாகும். சீனாவில் இருந்து இந்த உபகரணங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த உபகரணங்கள் 9 -ந் தேதி கிடைத்து விடும். 10 - ந் தேதி முதல் பரிசோதனை செய்யப்படும். அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதனைகள் வேகமாக நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.அத்தியாவசிய பொருட்கள் அனைவருக்கும் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளிமாநில தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதிகள், உணவு வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. நானே நேரடியாக சென்று உதவிகளை பார்வையிட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து உள்ளேன்.வேறு மாநிலங்களில் சிக்கித்தவிக்கக் கூடிய தமிழர்களுக்கு உரிய உதவிகள் செய்து கொடுக்க வேண்டும் என்பதை அந்த மாநில முதல்வர்களை கேட்டுக்கொண்டு இருக்கிறேன். தமிழகத்தில், 268 முகாம்களில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

எத்தனை வழக்குகள்

 ஊரடங்கு மற்றும் தடை உத்தரவை மீறியதாக 94 ஆயிரத்து 873 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 94 ஆயிரத்து 158 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 72 ஆயிரத்து 242 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 25 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டது. மத்திய அரசு முதல் கட்டமாக 500 கோடி தந்துள்ளது. கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைக்கு தேவையான நிதி உள்ளது. முன்னுரிமை கொடுத்து நிதியை ஒதுக்கி நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது தொற்று நோய் அதிகரித்து வருகிறதே என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, இந்த நோயின் தாக்கம், வீரியம் பற்றி மக்களிடம் எடுத்து சொல்லி வருகிறோம். பத்திரிகையாளர்களான நீங்களும் சொல்கிறீர்கள். மக்கள் தங்களை தனிமைப்படுத்தினால் இந்த நோய் வராது. இதனை தடுப்பதற்கு ஒரே வழி நம்மை நாமே தனிமைப்படுத்தி கொள்வதுதான். எனவே மக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.தொற்று நோய் எளிதாக பரவக் கூடியது. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

அறிகுறி தெரியாமலும் வருகிறது

கொரோனா நோய் அறிகுறி தெரியாமலேயே பாசிட்டிவ் வந்துள்ளது. எனவே அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள். இதனை கடைப்பிடித்தால் பரவுவதை தடுக்கலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சட்டம் கொண்டு வருவது மக்களை துன்புறுத்த அல்ல, மக்கள் நலன் கருதித்தான் சட்டம் அமுல்படுத்தப்படுகிறது. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் நோயின் தன்மையை புரிந்து கொள்ள வேண்டும். இதனை உணர்ந்து கடைப்பிடித்தால் நிச்சயம் தடுக்க முடியும். சட்டம் போடுகிறோம். அதனை நடைமுறைப்படுத்துவது மக்கள் தான் என்றும் அவர் கூறினார்.

நடமாட்டத்தை குறைக்க வேண்டும்

மக்களுக்கு தங்குதடையின்றி அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு சார்பில் நடமாடும் காய்கறி கடைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் நடமாடும் காய்கறி கடைகளில் விற்பனை செய்ய சொல்லி இருக்கிறோம். படிப்படியாக மக்கள் நடமாட்டத்தை குறைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இதனை அரசு செய்கிறது.நோய் வருவது இயற்கை. வந்தால் அதனை குணப்படுத்துவது நமது கடமை. நோய் அறிகுறி தெரிந்தால் உடனே மருத்துவமனைக்கு வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அப்படி செய்தால் குடும்பத்தை காப்பாற்றலாம். நாட்டையும் காப்பாற்றலாம். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

பள்ளிகள் திறப்பு எப்போது ?
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர்,
21 நாட்களுக்கு பிறகு நோயின் தீவிரத்தை பார்த்த பிறகுதான் பள்ளித்தேர்வு குறித்து முடிவு செய்யப்படும் என்று பதிலளித்தார்.மேலும் அரிசி, ரேசன்கார்டு தாரர்களுக்கு மட்டுமே அரசின் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். சென்னை மாநகராட்சி உதவியுடன் நடமாடும் காய்கறி கடைகள் சென்னையில் தொடங்கப்பட உள்ளதாகவும் முதல்வர் மேலும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து