முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரசாதம், புனித தீர்த்தம், பஜனை பாடல்கள் இல்லை: வழிபாட்டு தலங்கள் திறப்பின் போது புதிய விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

வெள்ளிக்கிழமை, 5 ஜூன் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : மத வழிபாட்டு தலங்கள் திறப்பின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆனால் தற்போது 5-ஆம் கட்டமாக நடைமுறையில் உள்ள ஊர்டங்கில் பொது இடங்களை திறப்பதில் 3 கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வரும் 8-ம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் வழிபாட்டு தலங்கள் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, நுழைவாயில்கள் கண்டிப்பாக சுகாதாரத்துடன் சானிடைசர்ஸ் கொண்டிருக்க வேண்டும். அத்துடன் வெப்ப அளவீடு செய்யும்முறை இருக்க வேண்டும். அறிகுறிகள் இல்லாத நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். கொரோனா விழிப்புணர்வு குறித்த பதாகைகள் இருக்க வேண்டும். அதுதொடர்பான ஆடியோ மற்றும் வீடியோ தொடர்ந்து ஒளிபரப்பப்பட வேண்டும். அனைத்து காலணிகளும் அவரவர் சொந்த வாகனங்களில் விட வேண்டும். இல்லையென்றால் தனித்தனியே குடும்பம் வாரியாக வைத்துக் கொள்ளலாம்.

சமூக இடைவெளியுடன் கூடிய முறையான பார்க்கிங் வசதி இருக்க வேண்டும். வழிபாட்டு தலங்களை சுற்றி செயல்படும் கடைகள், உணவகங்களில் முறையான சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும். வரிசையில் நிற்பவர்கள் இடைவெளியுடன் நிற்பதற்கு தரையில் குறியீடுகள் (வட்டம் அல்லது சதுரம்) வரைந்திருக்க வேண்டும். முறையான நுழைவாயில் மற்றும் வெளியே செல்லும் வழி என தனித்தனியே இருக்க வேண்டும். வரிசையில் நிற்கும்போது குறைந்தபட்சம் 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

வளாகங்களுக்குள் நுழைவதற்கு முன்பு மக்கள் தங்கள் கைகளை சோப்பால் கழுவ வேண்டும். இருக்கைகள் சமூக இடைவெளியுடன் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏ.சி. பயன்படுத்துவோர் அறிவிக்கப்பட்டுள்ள அளவீட்டை (24-30 செல்சியஸ்) பின்பற்ற வேண்டும். அவ்வப்போது புதிய காற்று உள்ளே நுழையும்படி வழிவகை செய்திருக்க வேண்டும். சிலைகள், சிற்பங்கள், புத்தகங்களை தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது. அதிக அளவு மக்கள் கூடுவதற்கு அனுமதி கிடையாது. அத்துடன் பஜனைகள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கும் அனுமதி இல்லை. ஒருவரை ஒருவர் தொடுவதை தவிர்க்க வேண்டும்.

வழிபாட்டில் ஈடுபடுவோர் தங்கள் சொந்த துணிகளை கொண்டு வந்து வழிபட வேண்டும். பின்னர் அவர்களே அதை கொண்டு செல்ல வேண்டும். பிரசாதம் அல்லது தீர்த்தம் உள்ளிட்டவற்றை நேரடியாக வழங்கக் கூடாது. சமுதாய கூடங்கள், அன்னதானம் உள்ளிட்டவற்றில் பார்செல் செய்து சமூக இடைவெளியுடன் வழங்க வேண்டும். கழிவறைகள், கை, கால்கள் கழுவுமிடம் ஆகிய இடங்களை முறையாக பராமரித்து அங்கே சானிடைசர்களை வைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து