முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லா லிகா கால்பந்து; ரியல் மாட்ரிட் அணி வெற்றி

செவ்வாய்க்கிழமை, 16 ஜூன் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மாட்ரிட் : லா லிகா கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

ஸ்பெயினில் புகழ்பெற்ற லா லிகா கால்பந்து போட்டி தொடர் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 3 மாத இடைவெளிக்கு பிறகு கடந்த வாரம் மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது. 20 அணிகள் இடையிலான இந்த போட்டி ரசிகர்கள் இன்றி காலியான ஸ்டேடியத்தில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளுக்கு மத்தியில் அரங்கேறி வருகிறது. இந்த போட்டி தொடரில் மாட்ரிட் நகரில் ஞாயிறன்று இரவு நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் 33 முறை சாம்பியனான ரியல் மாட்ரிட் அணி, அய்பார் அணியை எதிர்கொண்டது.

விறுவிறுப்பான இந்த போட்டியில் தொடக்கம் முதலே ரியல் மாட்ரிட் அணியின் கை ஓங்கி இருந்தது. முதல் பாதியில் ரியல் மாட்ரிட் அணியின் அபார ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் எதிரணியினர் திணறினார்கள். 4-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணி முதல் கோல் அடித்தது. அந்த அணியின் வீரர் கரிம் பென்சிமா கடத்தி கொடுத்த பந்தை சக வீரர் டோனி குரூஸ் கோலுக்குள் திணித்தார். 

30-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் கேப்டன் செர்ஜியோ ரேமோஸ் கோல் அடித்தார். சக வீரர் ஈடன் ஹசார்ட் கோல் எல்லையை நோக்கி அடித்த பந்தை அவர் லாவகமாக கோலுக்குள் திருப்பினார். 37-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணி மீண்டும் ஒரு கோல் அடித்தது. அந்த அணி வீரர் மார்செலோ இந்த கோலை அடித்தார். இதனால் முதல் பாதியில் ரியல் மாட்ரிட் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது. 

பின் பாதியில் பதில் கோல் திருப்ப அய்பார் அணி எடுத்த முயற்சிக்கு பலன் கிடைத்தது. 60-வது நிமிடத்தில் அந்த அணி வீரர் பெட்ரோ பிகாஸ் ஆறுதல் கோல் திருப்பினார். அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன் எதுவும் கிடைக்கவில்லை. முடிவில் ரியல் மாட்ரிட் அணி 3-1 என்ற கோல் கணக்கில் அய்பார் அணியை வீழ்த்தியது.  

இதைத்தொடர்ந்து நடந்த ரியல் சோசிடாட்-ஒசாசுனா அணிகள் இடையிலான லீக் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. ரியல் மாட்ரிட் அணி இதுவரை 28 ஆட்டங்களில் விளையாடி 17 வெற்றி, 8 டிரா, 3 தோல்வியுடன் 59 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் நீடிக்கிறது. நடப்பு சாம்பியனான பார்சிலோனா அணி 61 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையே 2 புள்ளிகள் தான் வித்தியாசம் உள்ளது. 

வெற்றிக்கு பிறகு ரியல் மாட்ரிட் அணியின் கேப்டன் செர்ஜியோ ரேமோஸ் கருத்து தெரிவிக்கையில், ‘இந்த வெற்றி எங்களது மனவலிமையை அதிகரிக்கும். இந்த சிறப்பான ஆட்டத்தை கண்டு ஆச்சரியப்படவில்லை. நல்ல பார்முக்கு திரும்ப நாங்கள் கடினமாக உழைத்து இருக்கிறோம். இருப்பினும் நாங்கள் இன்னும் முன்னேற்றம் காண வேண்டும். முதல் பாதியில் காட்டிய வேகத்தை போட்டி முழுவதும் வெளிப்படுத்த வேண்டியது அவசியமானதாகும். இந்த போட்டியின் பின்பாதியில் நடந்த தவறுகளை வரும் ஆட்டங்களில் நடக்காமல் பார்த்து கொள்வோம். அடுத்து வரும் 10 ஆட்டங்களும் எங்களுக்கு இறுதிப்போட்டி போன்றது தான். அதில் அதிக போட்டிகளில் வெற்றி பெற நாங்கள் முயற்சிப்போம்‘ என்றார். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து