முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாத்தான்குளம் வழக்கில் அதிரடி நடவடிக்கைகள்: சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு ஐகோர்ட் நீதிபதிகள் பாராட்டு

வியாழக்கிழமை, 2 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

சாத்தான்குளம் வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளீர்கள் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர். மேலும் சாத்தான்குளம் சம்பவ வழக்கின் உத்தரவு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

தந்தை, மகன் மரணம்

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தொடர்பாக கோவில்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தனது கணவர் மற்றும் மகன் ஆகிய 2 பேரும் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக, ஜெயராஜின் மனைவி செல்வராணி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மேலும், மதுரை ஐகோர்ட்டும் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.

மாஜிஸ்திரேட் விசாரணை

இதையடுத்து கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க கோர்ட் உத்தரவிட்டது. அதன்பேரில், மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தினார். ஆனால், விசாரணைக்கு போலீசார் ஒத்துழைக்கவில்லை என்று மாஜிஸ்திரேட் பாரதிதாசன், ஐகோர்ட்டில் புகார் தெரிவித்தார். அதன்பேரில், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த கோர்ட் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் சாத்தான்குளத்தில் முகாமிட்டனர். நெல்லை சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அனில்குமார், முரளிதரன், இன்ஸ்பெக்டர்கள் பிறைச்சந்திரன், உலகராணி, சரவணக்குமார் ஆகியோர் தலைமையில் 12 குழுக்கள் அதிரடியாக விசாரணையில் இறங்கியது.

கடையிலும்,  வீட்டிலும் விசாரணை

சாத்தான்குளம் மெயின் பஜார் காமராஜர் சிலை அருகில் உள்ள ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரது செல்போன் கடையின் அருகில் உள்ள மற்ற கடைக்காரர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் வீட்டுக்கு சென்றும் குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தினர். அதேபோன்று ஒரு குழுவினர், சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு சென்று, அங்கு ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் போலீசாரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் இடங்களில் ஏதேனும் தடயங்கள் உள்ளதா? என்பது குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதற்கிடையே,சி.பி.சி.ஐ.டி. போலீசில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) நகல், கோவில்பட்டி கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக, சென்னையில் இருந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஐ.ஜி. சங்கர், போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோர் தூத்துக்குடிக்கு வந்தனர். அங்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.  தொடர்ந்து அவர்கள் மாலையில் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரது வீட்டுக்கு சென்று, குடும்பத்தினரிடம் விசாரித்தனர். தொடர்ந்து சாத்தான்குளம் மெயின் பஜாரில் உள்ள ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரது செல்போன் கடையையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.  இதற்கிடையே, சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் தடயவியல் நிபுணர்கள் நேற்று முன்தினம் 2–-வது நாளாக ஆய்வு நடத்தினர். அங்கு தந்தை, மகன் தாக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தில் கிடைத்த தடயங்களை சேகரித்து பதிவு செய்தனர்.  கோவில்பட்டி கிளை சிறையிலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கொலை வழக்கு பதிவு

சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் தீவிர விசாரணையில், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய 2 பேர் மீதும் ஊரடங்கை மீறியதாகவும், செல்போன் கடையை மூடாமல் தகராறு செய்ததாகவும் சாத்தான்குளம் போலீசார் தவறாக வழக்குப்பதிவு செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த முதல் தகவல் அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டு கொலை முயற்சி வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய 2 பேர் மீதும் தவறான வழக்குப்பதிவு செய்த போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் மற்றும் தந்தை, மகனை போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், போலீஸ்காரர்கள் முருகன், முத்துராஜ் உள்ளிட்ட 5 பேர் மீதும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்திய தண்டனை சட்டம் 302–-வது பிரிவின்படி கொலை வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இந்த விவகாரத்தில் சாத்தான்குளம் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ரகு கணேஷை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் அளித்து தூத்துக்குடி கோர்ட் உத்தரவிட்டது. வரும் 16-ம் தேதி அவர் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

கூண்டோடு கைது

தலைமறைவாகி இருந்த நிலையில், சப்- இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், முத்துராஜ் ஆகியோரும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் நேற்று காலை கைது செய்யப்பட்டனர்.  மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 5-வது நபரான இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரை கங்கைகொண்டான் செல்லும் வழியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழிமறித்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.  கைது செய்யப்பட்டுள்ள அனைவரிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்ரூவர் ரேவதி

இந்த வழக்கில் ஏற்கனவே தலைமை காவலர் ரேவதி அப்ரூவராக மாறிய நிலையில் சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு உள்ளது. சாத்தான்குளம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை மற்றும் காவலர் முத்துராஜ் ஆகியோரும் அப்ரூவராக மாற உள்ளதாக கூறப்படுகிறது. 

ஐகோர்ட் பாராட்டு

இந்த நிலையில் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான வழக்கு ஐகோர்ட் மதுரை கிளையில்  நேற்று காலை விசாரணைக்கு வந்தது.  இந்த வழக்கு விசாரணையின் போது, சம்பவம் தொடர்பாக சாட்சி அளித்த  காவலர் ரேவதியை தொடர்பு கொண்டு நாங்கள் பேச இருக்கிறோம்  என்று நீதிபதிகள் தெரிவித்து அதன்படி பேசினர். மேலும்,  காவலர் ரேவதிக்கு உரிய பாதுகாப்பும், வேலைக்கான சம்பளமும் வழங்க வேண்டும் என்று  தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்தது.  தொடர்ந்து விசாரணையின் போது,  கைது செய்தவர்களை எந்த நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளீர்கள் எனவும் சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. அனில்குமாரிடம் ஐகோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் எத்தனை பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது?  என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். நீதி நிலை நாட்டப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் நடவடிக்கைகள் உள்ளது எனவும் நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர். தொடர்ந்து இந்த வழக்கின் விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து