முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவக்குமார் பதவி ஏற்றார்

வெள்ளிக்கிழமை, 3 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

பெங்களூரு : கர்நாடக காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவக்குமார் பதவி ஏற்றார். அவருக்கு ராகுல் காந்தி உள்பட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கர்நாடக காங்கிரஸ் தலைவராக தினேஷ் குண்டுராவ் பணியாற்றி வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று தினேஷ் குண்டுராவ் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, கர்நாடக காங்கிரஸ் புதிய தலைவராக டி.கே.சிவக்குமார் நியமிக்கப்பட்டார்.  

அதன் பிறகு கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்து விட்டதால், அவரால் அதிகாரப்பூர்வமாக கட்சி தலைவர் பதவி ஏற்பு விழாவை நடத்த முடியவில்லை. ஏற்கனவே 2 முறை பதவி ஏற்பு விழாவுக்கு அனுமதியை கர்நாடக அரசு, கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி நிராகரித்து விட்டது. இந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் காங்கிரஸ் தலைவர் பதவி ஏற்பு விழாவுக்கு முதல்வர் எடியூரப்பா அனுமதி வழங்கினார்.

அதன்படி கர்நாடக காங்கிரஸ் புதிய தலைவராக டி.கே.சிவக்குமார் பதவி ஏற்பு விழா பெங்களுரு குயின்ஸ் ரோட்டில் உள்ள அக்கட்சியின் புதிய அலுவலகத்தில்  நடைபெற்றது. அக்கட்சியின் முன்னாள் தலைவர் தினேஷ் குண்டுராவ், காங்கிரஸ் கொடியை டி.கே.சிவக்குமாரிடம் வழங்கினார். இதில் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால், மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சித்தராமையா, எஸ்.ஆர்.பட்டீல் மற்றும் செயல் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டி.கே.சிவக்குமார் பதவி ஏற்பு விழாவில் சுமார் 150 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர். அழைப்பிதழ் இருந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த பதவி ஏற்பு கர்நாடகம் முழுவதும் சுமார் 7,800 இடங்களில் அகன்ற திரைகள் வைக்கப்பட்டு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

புதிதாக பதவி ஏற்ற டி.கே.சிவக்குமாருக்கு ராகுல் காந்தி செல்போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். கே.சி.வேணுகோபால் உள்பட பிற தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி வாழ்த்து கடிதத்தை அனுப்பி இருந்தார். அதை கே.சி.வேணுகோபால் நிகழ்ச்சியில் வாசித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து