முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.381.76 கோடியில் கள்ளக்குறிச்சியில் புதிய மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் எடப்பாடி அடிக்கல் : ரூ.7.72 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையங்களையும் திறந்தார்

சனிக்கிழமை, 4 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (4.7.2020) தலைமைச் செயலகத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், சிறுவாங்கூர் கிராமத்தில் 381 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரிக்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார். 

மேலும், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநரகத்தின் கீழ், 7 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.  

அம்மா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் படிப்படியாக அரசு மருத்துவக் கல்லூரிகளை எற்படுத்தி வருகிறது.  அந்த வகையில், கடந்த 2017-18ஆம் கல்வியாண்டில் புதுக்கோட்டையில் 150 மாணவர்கள் சேர்க்கையுடன் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரியும், 2019-20ஆம் கல்வியாண்டில் கரூரில் 150 மாணவர்கள் சேர்க்கையுடன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரியும் தொடங்கப்பட்டன. 

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செயல்பட்டு வந்த ஐ.ஆர்.டி. மருத்துவக் கல்லூரியானது 2019-20ஆம் கல்வி ஆண்டு முதல் அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டு, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. மேலும், மத்திய அரசின் நிதியுதவியுடன், கடந்த 2019-ஆம் ஆண்டில், ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல், நீலகிரி, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை தொடங்க அம்மாவின் அரசு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று சரித்திர சாதனையை படைத்துள்ளது.

அதன்படி, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி மற்றும் திருவள்ளூர்  ஆகிய மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தமிழக முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டது. 

அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், சிறுவாங்கூர் கிராமத்தில் 8.328 ஹெக்டேர் நிலப்பரப்பில் கட்டப்படவுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரிக்கு தமிழக முதல்வர் நேற்று  காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார். இப்புதிய அரசு மருத்துவக் கல்லூரி நிறுவிட, 381 கோடியே 76 லட்சம் ரூபாய் அனுமதித்து நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதில் மத்திய அரசு 60 விழுக்காடு பங்களிப்பாக 195 கோடி ரூபாய் நிதியும், தமிழ்நாடு அரசு 40 விழுக்காடு பங்களிப்பாக 186 கோடியே 76 லட்சம் ரூபாய் நிதியும் வழங்கும்.   அதில் முதல்கட்டமாக தமிழ்நாடு அரசால் 110 கோடி ரூபாய் நிதியும், மத்திய அரசால் 50 கோடி ரூபாய் நிதியும் விடுவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரிக் கட்டிடங்கள் 132 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், மருத்துவமனைக் கட்டிடங்கள் 182 கோடியே 79 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், குடியிருப்பு மற்றும் விடுதிக் கட்டிடங்கள் போன்றவை 66 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்படும்.  கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி 150 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் நிறுவப்படும்.

மேலும், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநரகத்தின் சார்பில், திருநெல்வேலி மாவட்டம் - நெட்டூரில் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடம், அரியலூர் மாவட்டம் - கல்லங்குறிச்சி, தருமபுரி மாவட்டம் - பேளாரஅள்ளி, சிவகங்கை மாவட்டம் - திருப்பாச்சேத்தி, தஞ்சாவூர் மாவட்டம் - காசாங்காடு மற்றும் கதிராமங்கலம், தேனி மாவட்டம் - பு.தர்மத்துப்பட்டி, திருநெல்வேலி மாவட்டம் - மேலதேவநல்லூர், திருப்பூர் மாவட்டம் - வெள்ளிரவெளி ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 4 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள், 

பெரம்பலூர் மாவட்டம் - அம்மாபாளையத்தில் அமைந்துள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புறநோயாளிகள் பிரிவுக் கட்டிடம்,  தஞ்சாவூர் மாவட்டம் - பந்தநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புறநோயாளிகள் பிரிவுக் கட்டிடம், பெரம்பலூர் மாவட்டம் - பெரம்பலூர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் என மொத்தம் 7 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடங்களை தமிழக முதல்வர் நேற்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சி.வி.சண்முகம், டாக்டர் சி.விஜயபாஸ்கர், தலைமைச்செயலாளர் க.சண்முகம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் நாராயணபாபு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து