முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ம.பி.யில் ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரிய மின்சக்தி பூங்கா: சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத எரிசக்திக்கான உலகச்சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது : நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி பேச்சு

வெள்ளிக்கிழமை, 10 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

போபால் : மத்தியப்பிரதேசம் மாநிலம் ரேவாவில் அமைக்கப்பட்டுள்ள ரூ.750 மெகா வாட் திறன் கொண்ட  ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரிய மின்சக்தி பூங்கா திட்டத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். டெல்லியில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் சூரிய மின்சக்தி பூங்கா திட்டத்தை மோடி திறந்து வைத்தார்.

மொத்தம் 1,500 ஹெக்டேர் பரப்பளவுக் கொண்ட சூரிய எரிசக்தி பூங்காவினுள் 500 ஹெக்டேர் பரப்பளவில் ஒவ்வொன்றும் தலா 250 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட 3 சூரிய மின்சக்தி அமைப்புகள் இத்திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

மத்தியப் பிரதேசத்தின் உர்ஜா விகாஸ் நிகாம் லிமிடெட் மற்றும் மத்திய பொதுத் துறை நிறுவனமான சோலார் எனர்ஜி கார்பரேஷன் ஆப் இந்தியா ஆகியவை இணைந்து உருவாக்கிய கூட்டு நிறுவனமான ரேவா அல்ட்ரா மெகா சோலார் லிமிடெட் என்ற நிறுவனத்தால் இந்த சூரிய சக்தி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பூங்காவை அமைப்பதற்காக ரேவா கூட்டு நிறுவனத்திற்கு மத்திய அரசு ரூ.138 கோடி நிதியை அளித்துள்ளது. இந்த திட்டத்தில் இருந்து கிடைக்கும் எரிசக்தியில் இருந்து 24 சதவீதம் டெல்லி மெட்ரோவிற்கு வழங்கப்படும். மீதமுள்ள 76 சதவீதம் மத்தியப் பிரதேசத்தில் உள்ள மாநில மின் பகிர்வுக் நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.

2021-ம் ஆண்டுக்குள் 100 ஜிகா வாட் சூரிய மின்சக்தி திறன் கொண்ட அமைப்புகளை ஏற்படுத்துவது உட்பட 2022-ம் ஆண்டுக்குள் 175 ஜிகா வாட் சூரிய மின்சக்தி திறன் கொண்ட புதுப்பிக்கக் கூடிய எரிசக்தி திறனை இந்தியாவில் ஏற்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப் பாட்டை ரேவா திட்டம் வெளிப்படுத்துகிறது. 

இந்த சூரிய மின்திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்த பிரதமர் மோடி பேசியதாவது:-

சூரிய மின்சக்தி உறுதியானது, சுத்தமானது. பாதுகாப்பானது. உலகளவில் அதிக அளவில் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்யும் முதல் 5 நாட்களில் இந்தியா இருந்து வருகிறது. சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத எரிசக்திக்கான உலகச் சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது. மத்தியப்பிரதேச அரசு வருங்காலத்தில் சூழலுக்கு கேடில்லாத எரிசக்தியை குறைந்த விலையில் வழங்கும் மையமாக விளங்கும்.

இந்த சூரிய மின்சக்தி திட்டத்திலிருந்து கிடக்கும் மின்சாரம் மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு மட்டும் பயன் அளிக்கப் போவதில்லை, டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்துக்கும் வழங்கப்பட உள்ளது.  தற்சார்பு பொருளாதாரத்தின் முக்கிய நோக்கத்தில் மின்சார உற்பத்தியில் தன்னிறைவு அடைவதாகும். தற்சார்பு பொருளாதாரம் எனும் இலக்கை அடைய சூரிய மின்சக்தி முக்கியப் பங்காற்றும்.

பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தலாமா அல்லது சுற்றுச்சூழல் மேம்பாட்டில் கவனம் செலுத்தலாமா என உலக நாடுகள் ஊசலாட்டத்தில் இருக்கின்றன. சூரிய மின்சக்தி உற்தியானது, சுத்தமானது, பாதுகாப்பானது. ஏனென்றால், உலகம் முழுவதும் சூரியன் தனது கதிர்களை பரப்பி வருகிறது.

பாதுகாப்பானது ஏனென்றால் சூழலுக்கு எந்தவிதமான கேடையும் சூரியமின்சக்தி ஏற்படுத்தாது. ரீவா புதிய வரலாற்றை படைத்துள்ளது. நர்மதை நதி, வெள்ளைப்புலியின் பெயரைத் தாங்கியுள்ளது ரீவா. தற்போது ஆசியாவின் மிகப்பெரிய சூரியமின்சக்தி திட்டமாக இது மாறியுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து