முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரசவத்துக்காக கர்ப்பிணியை அழைத்து சென்ற ஆட்டோ டிரைவருக்கு விதித்த அபராதத்தை ரத்து செய்தார் போலீஸ் கமிஷனர் சின்ஹா

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : பிரசவத்துக்காக கர்ப்பிணியை அழைத்து சென்றது தவறா? என்றும் அபராதம் விதித்த போலீசாரால் மன அமைதி இழந்தேன் என்றும் ஆட்டோ டிரைவர் பேசும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. அந்த வீடியோவை பார்த்து விட்டு போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா சம்பவம் நடந்த இடம் மற்றும் விவரம் குறித்து உடனே கேட்டறிந்தார். பின்னர் அந்த ஆட்டோ டிரைவருக்கு விதித்த அபராத தொகையை உடனே ரத்து செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

மதுரையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முத்துகிருஷ்ணன். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனக்கு நேர்ந்த துயர சம்பவத்தை இணையதளத்தில் ஒரு வீடியோவாக பதிவு செய்திருந்தார். அந்த வீடியோ வைரலானது. அந்த வீடியோவில் முத்துகிருஷ்ணன் பேசிய விவரம் வருமாறு:- 

கொரோனா ஊரடங்கினால் தற்போது யாருக்கும் வேலை இல்லை. ஒவ்வொருவரும் எவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்பது அனைவருக்கும் தெரியும். இந்தநிலையில் ஒரு பெண் பிரசவ வலியால் துடிக்கிறார். அவரை ஆஸ்பத்திரிக்கு ஆட்டோவில் அழைத்து செல்ல வேண்டும் என்று மூதாட்டி ஒருவர் என்னை அழைத்தார். அவர்களை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தேன்.

பிரசவத்திற்காக ஆஸ்பத்திரிக்கு கர்ப்பிணிகளை எனது ஆட்டோவில் ஏற்றிச் சென்றால் அதற்காக வாடகை வாங்குவதில்லை. அதுபோல இந்த பெண்ணிடமும் வாடகை வாங்க மறுத்து விட்டேன். அங்கிருந்து கோரிப்பாளையம் சிக்னல் அருகில் வந்த போது போலீசார் என்னை தடுத்து நிறுத்தி ரூ.500 அபராதம் விதித்து, அதற்கான ரசீதை கொடுத்தனர்.

நான், கர்ப்பிணியை பிரசவத்துக்காக ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து விட்டு விட்டு திரும்பியதை கூறியும், அவர்கள் காதில் வாங்கியதாக தெரியவில்லை. ஆட்டோ டிரைவர்கள் பெரிய பணக்காரர்கள் இல்லை. சட்டம் மக்களை காக்கவா இல்லை, புதைகுழியில் புதைக்கவா. மனவேதனையில் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளேன். இதனை மனிதநேயம் உள்ள போலீஸ் அதிகாரிகள் பார்த்தால் கொஞ்சமாவது தயவு காட்டுங்கள் என்று அந்த வீடியோவில் கூறியிருந்தார். 

இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் போலீஸ் அதிகாரிகளின் வாட்ஸ்- அப் குரூப்பில் பதிவு செய்தார். அந்த வீடியோவை பார்த்து விட்டு போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா சம்பவம் நடந்த இடம் மற்றும் விவரம் குறித்து உடனே கேட்டறிந்தார்.

பின்னர் அந்த ஆட்டோ டிரைவருக்கு விதித்த அபராத தொகையை உடனே ரத்து செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். போலீஸ் கமிஷனரின் இந்த துரித நடவடிக்கையை அறிந்த அனைவரும் பாராட்டினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து