இந்தியாவை வலுவான நாடாக உருவாக்க புதிய கல்விக் கொள்கை வழிவகுக்கும்: பிரதமர் மோடி பேச்சு

வெள்ளிக்கிழமை, 7 ஆகஸ்ட் 2020      இந்தியா
modi 2020 07 03

Source: provided

புதுடெல்லி : 21-ம் நூற்றாண்டில் புதிய இந்தியாவுக்கு அடித்தளம் அமைக்கவே தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக் கொள்கை தொடர்பான கருத்தரங்கை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்ற அவர் பேசியதாவது:-

பல ஆண்டுக்கு ஆய்வுக்குப் பிறகே புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளது. அனைத்துத் தரப்புகளின் கருத்துகளை கேட்ட பிறகே புதிய கல்விக் கொள்கை இறுதி செய்யப்பட்டது.

புதிய கல்விக் கொள்கையில் எந்தப் பாகுபாடும் இல்லை. கல்விக் கொள்கையை அமல்படுத்துவது சவாலான பணியாக இருக்கும். பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், வெவ்வேறு சித்தாந்தங்களைச் சேர்ந்தவர்கள் கல்வி கொள்கை குறித்து கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். கல்விக் கொள்கை மிக பெரிய சீர்திருத்தத்தைக் கண்டு சிலருக்கு வருத்தம். 

இந்தியாவை வலுவான நாடாக உருவாக்க, வளர்ச்சியை அதிகரிக்க புதிய கல்விக் கொள்கை முக்கியத்துவம் வாய்ந்தது. முன்னேறி செல்ல சீர்திருத்தமே ஒரே வழி. எதிர்காலத்துக்கு இளைஞர்கள் தயாராக உள்ளனர். 

ஆரோக்கியமான விவாதங்கள் கல்வித்துறையை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச்செல்லும். மாணவர்களின் கற்பனைத் திறனை ஊக்குவிக்கும் வகையில் இது அமைந்துள்ளது.  தாய்மொழி கல்வி மூலம் மாணவர்களின் அடித்தளம் சிறப்பாக இருக்கும். மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கல்வி இருக்க வேண்டும். முழுமையான கல்வி என்பதே தற்போதைய தேவை.

அதற்காகவே புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. மாற்றத்தை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு தயாராக இருக்க வேண்டும். 

கல்வியின் சிறந்த நோக்கமே மனிதர்களை உருவாக்குவது தான் என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச குடிமகன்களாக இருக்க வேண்டும். ஆனால் நமது வேர்களை மறக்கக் கூடாது. 

21-ம் நூற்றாண்டில் புதிய இந்தியாவுக்கு அடித்தளம் அமைப்பதற்காகவே தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து