முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் டிக்டாக் செயலிகளுக்கு தடை: அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு

வெள்ளிக்கிழமை, 7 ஆகஸ்ட் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : சீன நிறுவனத்தின் டிக்டாக், வீசாட் ஆகிய செல்போன் செயலிகள் அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் பொருளதாார வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் குறிப்பிட்டு தடை விதித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி சீனாவின் டிக்டாக், வீசாட், ஹலோ உள்ளிட்ட சுமார் 106 செயலிகளுக்கு இந்தியா தடை விதித்திருந்தது. இந்தியாவின் இந்த செயலை அமெரிக்கா பாராட்டியது. 

இந்நிலையில், டிக்டாக் உள்ளிட்ட சில சீன செயலிகளால் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்காவிலும் டிக்டாக்கிற்கு விரைவில் தடை விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், சீன நிறுவனங்களின் செயலிகளான டிக்டாக், வீசாட் ஆகியவற்றை தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்டார். இது அடுத்த 45 நாட்களில் இருந்து நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவித்தார்.

இது குறித்து டிரம்ப் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

சீன நிறுவனங்கள் உருவாக்கிய செல்போன் செயலிகள் அமெரிக்காவில் பரந்து கிடக்கின்றன. இந்த செயலிகளால் தேசப் பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது எனத் தெரியவந்துள்ளது.

சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனம் உருவாக்கிய டிக்டாக் செயலி, அதைப் பயன்படுத்துவோரின் விவரங்களை தானாகவே அபகரித்துக்கொள்கிறது. அமெரிக்க மக்களின் தனிப்பட்ட விவரங்கள், சொத்து விவரங்கள் போன்றவற்றை செயலி மூலம் சீன கம்யூனிஸ்ட் கட்சி அறிந்து கொள்ள முடியும்.

இதன் மூலம் அமெரிக்க மக்களின், அதிகாரிகளின், ஒப்பந்ததாரர்களின் தனிப்பட்ட விவரங்களை அறியவும், அவர்களின் நடமாட்டதைத் கண்காணிக்கவும், மிரட்டவும் முடியும். இந்த அச்சுறுத்தலால் டிக்டாக் செயலிக்கு தடை விதித்து உத்தரவிடுகிறேன். இந்த தடை உத்தரவை அமல்படுத்த வர்த்தகத்துறை அமைச்சகத்துக்கு அதிகாரம் அளிக்கிறேன்.

அதேபோல சீனாவின் டென்சென்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் வெளியிட்ட வீசாட் சமூக வலைத்தளம், மற்றும் பணம் அனுப்பும் தளத்தையும் தடை செய்ய உத்தரவிட்டுள்ளேன். டிக்டாக், வீசாட் இரு செயலிகளும் பயன்பாட்டாளர்களின் விவரங்களை தானாகவே எடுத்துக் கொள்ளக் கூடியவை.

அமெரிக்கர்களின் தனிப்பட்ட விவரங்களை அறிய சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு உதவுபவை. இரு உத்தரவுகளும் அடுத்த 45 நாட்களில் இருந்து நடைமுறைக்கு வரும். இவ்வாறு டிரம்ப் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து