இலங்கை நாடாளுமன்ற தேர்தல் : ராஜபக்சே கட்சி வெற்றி

வெள்ளிக்கிழமை, 7 ஆகஸ்ட் 2020      உலகம்
Rajapaksa 2020 07 03

Source: provided

கொழும்பு : இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ராஜபக்சே கட்சி 3-ல் 2 பங்கு இடங்களை கைப்பற்றி மெஜாரிட்டி வெற்றி பெற்றுள்ளது.

இலங்கையில் கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் மகிந்த ராஜபக்சே.  ஆனால், அவரது சொந்த கட்சியில் எழுந்த எதிர்ப்பு மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் ஆகியவற்றால் பதவியில் இருந்து தூக்கியெறியப்பட்டார். இதன்பின், கடந்த நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். 

பின்பு தனது சகோதரரான மகிந்தாவை பிரதமராக்கினார். ஆனால், அரசியலமைப்பு மாற்றங்களை மேற்கொள்ள பெரும்பான்மை பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. 

இதனால் இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. எனினும், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவலால் இரு முறை ஒத்தி வைக்கப்பட்ட நாடாளுமன்ற தேர்தல், கடைசியில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. 

225 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 196 இடங்களுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற்றது. மீதி 29 இடங்கள், கட்சிகள் பெறுகிற வாக்குகளின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டு அறிவிக்கப்படும்.

மொத்தம் 1.6 கோடி வாக்காளர்களில் 75 சதவீதத்தினர் வாக்களித்தனர்.  தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் முதல் வெளிவர தொடங்கின. இதில், நேற்று முன்தினம் இரவு வரை ராஜபக்சேவின் எஸ்.எல்.பி.பி. (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா) கட்சி முன்னிலையில் இருந்தது. 

இந்நிலையில், ராஜபக்சேவின் கட்சி 145 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. இதனால் அக்கட்சி, 3-ல் 2 பங்கு இடங்களில் வெற்றியடைந்து சூப்பர் மெஜாரிட்டியை பெற்றுள்ளது. சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி 54 இடங்களிலும், சம்பந்தனின் தமிழரசு கட்சி 10 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 

ரணில் விக்கிரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.  இதேபோல், நுவரெலியாவில் போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொது செயலாளர் ஜீவன் தொண்டமான் வெற்றி பெற்றுள்ளார்.

இதனால், மகிந்தா ராஜபக்சே மீண்டும் பிரதமர் ஆகிறார்.  இதையடுத்து, பிரதமர் மோடி, மகிந்தா ராஜபக்சேவை தொடர்பு கொண்டு அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். 

இதுதொடர்பாக, மகிந்தா ராஜபக்சே வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்றுவதனை எதிர்நோக்கி உள்ளேன். இரு நாடுகளும் நட்புடனும், நல்லுறவுடனும் இருக்கின்றன என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து