கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடியுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை: உ.பி., பீகார், கர்நாடகம் உள்ளிட்ட முதல்வர்களும் பங்கேற்பு

திங்கட்கிழமை, 10 ஆகஸ்ட் 2020      இந்தியா
modi 2020 07 03

Source: provided

புதுடெல்லி : கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.  

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு  கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும், 31.8.2020 (ஆகஸ்ட் 31-ம் தேதி) நள்ளிரவு 12 மணி வரை தமிழகம் முழுவதும் மேலும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் எவ்வித  தளர்வுகளும் இன்றி, தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

இருப்பினும், மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி தளர்வுகளையும் மத்திய அரசு அறிவித்து வருகிறது. மாநில அரசுகளும் தங்களுக்கு ஏற்றவாறு தளர்வுகளை அறிவித்து வருகின்றன. இதற்கிடையே, நாடு முழுவதும் கொரோனா   பாதிப்பு நாளுக்கு அதிகரித்து வந்தாலும், கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 69.33 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில், இறப்பு விகிதம் 2.00 சதவீதமாக  குறைந்துள்ளது.  சிகிச்சை பெறுபவர்கள் விகிதம் 28.66 சதவீதமாக குறைந்துள்ளது.

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா தடுப்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி டெல்லியில் இருந்தபடி  காணொளி காட்சி மூலம் முதல்வர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கர்நாடக முதல்வர் எடியூரப்பா, உத்தரப்பிரதேச  முதல்வர் யோகி ஆதித்யநாத், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்ட 10 மாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்புப் பணிகள், பொது போக்குவரத்து தொடக்கம் மற்றும் பள்ளிகள் திறப்பு, ரயில், விமான சேவை குறித்தும் பிரதமர் மோடியுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவார் என கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து