கொரோனா பாதிப்பு: பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடம்

வெள்ளிக்கிழமை, 14 ஆகஸ்ட் 2020      தமிழகம்

சென்னை : பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார். 

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவில் பல பிரபலங்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். சென்னையில் உள்ள எம்.ஜி.எம். தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மருத்துவமனையின் இயக்குனர், எஸ்.பி.பி., உடல் நலம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கவலைக்கிடமாக உள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். செயற்கை சுவாசம் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 5-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை நேற்று முன்தினம் இரவு மோசமடைந்தது.  எஸ்.பி.பி.,உடல்நிலை மருத்துவ நிபுணர்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து